new BB1

ஆட்டம் பாட்டம் மெஹந்தி!

download (2)நாகரீகம் என்கிற பெயரில் நாம் மறந்து, துறந்த எத்தனையோ விஷயங்களில் திருமணச் சடங்குகளும் சம்பிரதாயங்களும்கூட அடக்கம். திருமணத்துக்கு முதல் நாளே வரவேற்பு வைப்பது, பாரம்பரிய உடையைத் தவிர்த்து, மேற்கத்திய பாணிக்கு மாறியது என நமது கலாசாரத்தில் எத்தனையோ மாற்றங்கள். ஒரே ஒரு விஷயம் மட்டும் விதிவிலக்கு. மருதாணி எனப்படுகிற மெஹந்தி வைப்பதில் மணப்பெண்களின் மாறாத விருப்பம்!

தீபாவளி, புத்தாண்டு என மருதாணி வைத்துக் கொள்ள விசேஷ தினங்கள் எதுவும் தேவையிருப்பதில்லை இப்போதெல்லாம். விரும்பும்போதெல்லாம் வைத்து அழகு பார்க்கலாம். சென்னையின் பிரதான ஏரியாக்களில் கடை விரித்திருக்கும் மெஹந்திவாலாக்களை சுற்றி எப்போதும் பெண்கள் கூட்டம் சூழ்ந்திருப்பதே உதாரணம்.

மணப்பெண்களுக்கு மருதாணி வைப்பது ஏன்? மெஹந்தியில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்? கெமிக்கல் இல்லாத மருதாணிக் கலவையைத் தயாரிப்பது எப்படி? எல்லாம் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் ஹசீனா சையத்.

மருத்துவ குணங்கள் நிறைந்தது மருதாணி. மணமகளுக்கு மெஹந்தி போடுவதன் பின்னணி தெரியுமா? மருதாணி இடுவதால், பெண்ணின் உடலும் மனமும் குளிர்கிறது. மருதாணியின் வாசத்துக்கு மனதை அமைதிப்படுத்தும் குணம் உண்டு. உடல் சூடு தணிகிறது. அது மட்டுமா? மணப்பெண்ணை ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கச் செய்யவும்தான்!

இப்போது மிகவும் பிரபலமாக உள்ள ‘ரெஃப்ளெக்சாலஜி’ சிகிச்சை தருகிற அதே பலன்களை மருதாணி வைப்பதன் மூலமும் பெற முடியும். ரெஃப்ளெக்சாலஜி என்பது கால் நரம்புகளின் அழுத்தப் புள்ளிகளில் மசாஜ் செய்து, அதன் மூலம் ஒட்டுமொத்த உடலுக்கும் புத்துணர்வைத் தருகிற சிகிச்சை. டென்ஷனும் விலகும். கால்களில் மருதாணி வைப்பதன் மூலமும் இதே பலன்கள் கிடைக்கின்றன. செயற்கையாக, கெமிக்கல் கலந்த மருதாணியை உபயோகிப்பதைத் தவிர்த்து, இயற்கையானதை பயன்படுத்துவதே முழுப் பலனையும் தரும்.

எத்தனை வகை?

மணப்பெண்களுக்கான மெஹந்தியில் மிகப் பிரபலமானது ‘ராஜஸ்தானி’ டிசைன். மிகவும் நுணுக்கமான டிசைன்தான் இதன் சிறப்பம்சம். மிக மெல்லிய இழைகளாகப் போடக்கூடிய இதை வரைய பொறுமையும் பயிற்சியும் அவசியம். இரண்டு கைகளிலும் அச்சடித்தது போல ஒரே அளவில், ஒரே மாதிரியான டிசைன்கள் போடுவது ராஜஸ்தானியின் இன்னொரு சிறப்பு. ‘மிரர் ரெஃப்ளெக்டிங் இமேஜ்’ என்று சொல்லும் அளவுக்கு, ஒரு கையின் டிசைனை, இன்னொரு கை அப்படியே பிரதிபலிக்கும். முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் மட்டுமே போடப்படும்.

ராஜஸ்தானிக்கு அடுத்தபடியாக அதிக பெண்கள் விரும்புவது அராபிக் மெஹந்தி. இதில் நுணுக்கமான டிசைன்கள் கிடையாது. பெரும்பாலும் கருப்பு நிறத்தில் போடப்படும். கருப்பு மட்டுமே வேண்டாம் என்பவர்கள் கருப்பும் மெரூனும் கலந்து போடுவதுண்டு. அடர்த்தியான கோடுகள், அகலமான டிசைன்கள் என இது ராஜஸ்தானி மெஹந்திக்கு அப்படியே நேரெதிர். இவை தவிர பாகிஸ்தானி மெஹந்தி, மீனாகாரி மெஹந்தி, கிளிட்டர் மெஹந்தி என நிறைய உண்டு.

கிளிட்டர் மெஹந்தி என்பது ஃபேப்ரிக் பெயின்ட், பாடி பெயின்ட், நெயில்பாலீஷ் போன்றவற்றை உபயோகித்துப் போடப்படுவது. டிசைனை வரைந்து முடித்ததும், அதிலேயே கல், சமிக்கி ஒட்டி, இன்னும் அழகாக்குவதுண்டு. திருமணத்துக்குப் பிறகு ஒரு இடைவெளிவிட்டு, வரவேற்பு வைக்கிற பெண்கள், உடைக்கு மேட்ச்சாக அதே கலர் மற்றும் டிசைனில் இப்படி ஃபேஷன் மெஹந்தி போட்டுக் கொள்வதையே விரும்புகிறார்கள்.

எப்படிப் போட வேண்டும்?

தரமான மருதாணி இலைகளைப் பறித்துக் காய வைக்கவும். பூவும் காயும் அதிகமுள்ள பெண் மரத்து இலைகளில் அதிக கலர் வராது. பூ, காய் இல்லாத ஆண் மரத்து இலை என்றால் நல்ல நிறம் பிடிக்கும். இதைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவும். காய்ந்த இலைகளை அரைத்து பத்திரப்படுத்தவும். தேவையான போது, தேவையான அளவு பொடியை எடுத்து, மெல்லிய துணியில் கொட்டி, சலித்தெடுக்கவும்.

டீ டிகாக்ஷனை வடிகட்டி, ஆற வைத்து எடுத்து, சலித்த பொடியில், தேவையான அளவு சேர்த்து, பெரிய நெல்லிக்காய் அளவு எலுமிச் சைப் பழத்தின் சாறு, 2 துளிகள் யூகலிப்டஸ் ஆயில், 5 துளிகள் கிராம்பு தைலம் சேர்த்துக் குழைத்து, இரவு முழுக்க ஊற விடவும். மறுநாள், பாலிதீன் கவரில் செய்த கோனில் இந்த மருதாணியை நிரப்பவும். கைகளில் முதலில் மெஹந்தி ஆயிலை (அப்படியே கடைகளில் கிடைக்கும்) தடவி விட்டு பிறகு மெஹந்தி போட்டால் கலர் நன்றாகப் பிடிக்கும்.

மெஹந்தி போட்டு முடித்ததும், அதை அப்படியே காயவிடக் கூடாது. சர்க்கரை கலந்த எலுமிச்சைப் பழச்சாற்றில் பஞ்சை நனைத்து, டிசைனின் மேல் தொட்டு, ஈரப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். 8 மணி நேரம் மெஹந்தியை காய விட்டு, பிறகு சுரண்டி எடுக்க வேண்டும். கையையோ, காலையோ கழுவக் கூடாது. பிறகு ஒரு கடாயில் ஏழெட்டு கிராம்பை போட்டு சூடுபடுத்தவும். அதிலிருந்து கிளம்பும் புகையில் கைகளைக் காட்டவும். அடுத்து டிசைனின் மேல் கிராம்பு தைலம் அல்லது கடுகெண்ணெய் தடவி, 4 மணி நேரத்துக்கு தண்ணீர் படாமல் வைத்திருக்க வேண்டும்.

மெஹந்தி சடங்கு

வட இந்தியாவில் ‘மெஹந்தி செரிமனி’ என்ற மருதாணி சடங்கு ரொம்பவே பிரபலம். இப்போது நம்மூரிலும் அது பிரபலமாகி வருகிறது. மணமகள் மற்றும் மணமகனின் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்ந்த மெஹந்தி கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு, மணமகளுக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் மெஹந்தி போடப்படும். அந்தச் சடங்குக்கு மேலும் களைகூட்ட ஆட்டம், பாட்டு என எல்லாம் சேர்ப்பது நாகரீக மாற்றமாகி வருகிறது.

728