new BB1

இந்தக் கட்டிக்கு ரொம்ப கொழுப்புதான்!

Loading...

ht3301மென்மையான நம் உடலில் ஆங்காங்கே சின்னச் சின்ன கட்டிகள் உருவாகி, அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிட்டால் எப்படியிருக்கும்? அதிலும் கைகளிலோ, முகத்திலோ கட்டிகள் உண்டாகிவிட்டால் நோய் படுத்தும் பாட்டைவிட, வெளியில் முகம் காட்ட முடியாத நிலைமை இன்னும் அதிகமாக சங்கடப்படுத்தும். இந்தக் கட்டிகள் ஏன் உருவாகின்றன? என்ன சிகிச்சை? நம் சந்தேகங்களை காஸ்மெட்டிக் சர்ஜனான கிருத்திகா முன்பு வைத்தோம்.

‘‘உணவின் மூலம் உடலுக்குக் கிடைக்கும் தேவைக்கும் அதிகமான சக்தி கொழுப்பாக மாறுகிறது. இதில் ரத்தத்தில் சேர்கிற கொழுப்பு கொலஸ்ட்ராலாகவும் செல்களில் சேரும் கொழுப்பு சின்னச் சின்ன கட்டிகளாகவும் உருவாகின்றன. செல்களில் சேர்ந்துகொள்ளும் இந்த கொழுப்புதான் நம் உடலில் கட்டிகளாக உருவாகி அப்படியே நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. இந்தக் கொழுப்புக்கட்டிகளுக்கு லைப்போமா (Lipoma) என்று பெயர். நம் உடல் முழுவதும் இருக்கும் Fat cells என்ற கொழுப்பு செல்களில் படியும் கொழுப்புக்கட்டிகள் என்பதால் இவற்றை ‘செல்களின் தொகுப்பு’என்றும் சொல்லலாம். உடலில் பிக்மென்ட் செல்கள் மூலம் உருவாகும் மச்சம் போலத்தான் லைப்போமாவும்.

இதனால் பொதுவாக வலி இருக்காது என்பதால் வரும் முன்னரே கண்டுபிடிக்க முடியாது. இந்தக் கட்டிகள் மிருதுவாகவும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு சிறிது நகரும் தன்மையும் கொண்டதாக இருப்பதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம். லைப்போமா கட்டிகள் 99 சதவிகிதம் ஆபத்தில்லாதவை என்பதால் கவலைப்பட வேண்டியதில்லை. வயிற்றுக்குள் உருவாகும் ஒரு சதவிகிதக் கட்டிகளே புற்றுநோயாக மாறும் அபாயம் கொண்டவை. வயிற்றுக்குள் உருவாகும் லைப்போமா மிகவும் அரிதுதான். இதுபோல வயிற்றுக்குள் கட்டிகள் உருவானால் வாந்தி, வயிற்றில் வலி போன்ற அறிகுறிகள் தெரியும்.

இந்த லைப்போமா கட்டிகள் ஏன் உருவாகின்றன, எதனால் உருவாகின்றன என்பதற்கு, இதுவரை எந்தக் காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. பருமன் மற்றும் பரம்பரை காரணங்களால் சிலருக்கு லைப்போமா ஏற்படலாம் என்றே கணிக்க முடிகிறது. லைப்போமா கட்டிகளை அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. தேவையற்ற தொல்லையாக நினைப்பவர்களும், அழகு பாதிக்கிறது என்று நினைப்பவர்களும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இந்த அறுவைசிகிச்சை கட்டியின் அளவு, எந்த இடத்தில் கட்டி இருக்கிறது என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படும். தழும்பு வெளியில் தெரியாமல் இருக்க, தலை மயிர்க்கற்றைகள், காதின் பின்புறம் போன்ற மறைவான இடங்களில் சிறிய துளையை ஏற்படுத்தி எண்டோஸ்கோப்பி மூலம் அந்தக் கட்டியை அகற்றிவிடலாம். லேசர் மூலமும் இந்தக் கட்டிகளை எளிதாக அகற்றிவிடலாம். அதனால் லைப்போமாவை நினைத்து சங்கடப்பட வேண்டியதில்லை!’’

Loading...

728

2