new BB1

உங்கள் கோபம் உடல் நலத்துக்குத் தீங்கானது!

Loading...

ht3474ஒருவருக்கு கோபம் வந்தால் என்னவெல்லாம் நிகழும்? கோபத்தை உண்டு பண்ணியவரை திட்டித் தீர்ப்பார்கள்… கையில் வைத்திருக்கும் பொருளைப் போட்டு உடைப்பார்கள்… சிலரோ, கோபத்துக்குக் காரணமானவரை தாக்கும் அளவுக்குச் செல்வார்கள். இல்லையெனில் தங்களைத் தாமே காயப்படுத்திக் கொள்வார்கள்.

இன்னும் சிலர் ரொம்பவே விதிவிலக்கு… என்னதான் கோபம் வந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வஞ்சமாக வைத்துக் கொள்வார்கள். தொட்டதுக்கெல்லாம் கோபப்படுகிற முன்கோபிகள் ஒரு வகை. ஒருவரது குணாதிசயத்தைப் பற்றி விளிக்கும்போது ‘கோபக்காரரு’ என்று குறிப்பிட்டுச் சொல்வதும் உண்டு. உணர்ச்சிகள் உள்ளவன்தானே மனிதன். மனித உணர்ச்சிகளில் மிக முக்கியமான உணர்ச்சியான கோபம் பற்றி அலசுவோம்.

கோபப்படாதவர்கள் மனிதர்களே அல்ல!’’ என்று அதிரடியாகத் தொடங்குகிறார் உளவியல் ஆலோசகர் கார்த்திக் லட்சுமணன்.

கோபம் ஏன்?

தன்னை காயப்படுத்தும் சொற்கள் அல்லது நடத்தைகளை மற்றவரோ, தானோ செய்யும் போது கோபம் ஏற்படு கிறது. இது தேவையான, தவிர்க்க முடியாத உணர்ச்சி. உணர்ச்சிகளை நேர்மறை, எதிர்மறை என்று உளவியல் பிரிப்பதில்லை. கோபத்தை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் நேர்மறை, எதிர்மறை பாகுபாடு வருகிறது. கோபப்படும்போது நம் உடலில் பலவித ரசாயன மாற்றங்கள் நடக்கின்றன.

மூளையில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அமிக்டலாவின் கட்டளைப்படி, கேட்டகாலமைன் எனும் ரசாயனம் சுரக்கத் தொடங்குகிறது. இந்த ரசாயனம் மூச்சின் வேகத்தை அதிகரித்தும், இதயத்தை வேகமாகத் துடிக்க வைத்தும், உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை வழக்கத்தை விட அதிகமாகவும் அதிவேகத்திலும் வழங்குகிறது. இதனால் சிறிது நேரத்துக்கு அதிவேக ஆற்றல் கிடைக்கும். அட்ரினலின், நான்-அட்ரினலின் ஹார்மோன்களும் கோபத்தின் போது சுரந்து, உங்களை சண்டையிடும் நிலைக்கு தயார்படுத்தும்.

கோபத்தை எதிர்மறையாகக் கையாள்வது நமக்கும் சமூகத்துக்கும் ஆரோக்கியமானதல்ல. சில நேரங்களில் கோபத்தை வெளிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மற்றவரை துன்புறுத்தி விடுகிறோம். வேறு சில நேரங்களில் கோபத் தை தங்கள் மீதே வெளிப்படுத்திக்கொண்டோ, நெடுநாட்கள் மனதுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டோ, நம்மை நாமே துன்புறுத்திக் கொள்கிறோம். துன்புறுத்துதல் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. துன்பத்தை தவிர்க்க வேண்டும் என்றால் கோபத்தை நேர்மறையாக கையாள்வதுதான் ஒரே தீர்வு.

நேர்மறையாக கையாளுதல்?

கோபம் வரும்போது நாம் கோபமாக இருக்கிறோம் என்கிற உண்மையை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு பின்வருவனவற்றில் ஒன்றிரண்டை முயற்சித்து, எது உங்களுக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதை கோபம் வரும்போது செய்துகொள்ளுங்கள்.
நான் கோபமாக இருக்கிறேன் என்றும், கோபத்துக்கான காரணம் இதுதான் என்பதையும் குரலை உயர்த்தாமல் உரியவருக்கு தெரிவித்து, பிரச்னையை தீர்க்க என்ன வழி என்பது பற்றி யோசிக்கத் தொடங்கலாம்.
கோபம் வந்தவுடனேயே அந்த இடத்தை விட்டு அகன்று, கோபம் குறைந்தவுடன் அது பற்றி பேசத் தொடங்கலாம்.
கோபம் வந்தவுடன் தண்ணீர் குடிப்பதோ, மூச்சை மெதுவாக இழுத்து விடுவதையோ செய்யலாம். கோபம் குறைந்த பின்னர், அதற்கான காரணங்களை ஆராயத் தொடங்கலாம்.
கோபத்தை ஒரு இடத்தில் வெளிக்காட்டவே முடியாது எனில், டைரி, காகிதம், செல்போன் அல்லது கணினியில் உங்களுக்கு தோன்றுவதை எழுதலாம். பின்னர் அவற்றை அழித்து விட்டு பிரச்னைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம்.
கோபம் வந்தவுடன், கோபம் வராதது போல சிறிது நேரம் நடித்து/சிரித்து, உரிய வேலையை முடித்தவுடன், அது பற்றி பேசத்தொடங்கலாம்.
கோபத்தின் வகைகள்

நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமானவர்கள்… தனித்தன்மை கொண்டவர்கள். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் கையாள்வதிலும் கூட தனித்தன்மைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் கோபம் பொதுவானதல்ல. கோபத்திலும் சில வகைகள் உள்ளன.

முன்கோபி (SHORT TEMPER)

முறையான காரணங்கள் எதுவுமின்றி முந்திக்கொண்டு கோபப்படுபவர்களே முன்கோபிகள். தங்களை யாரும் வார்த்தைகளால் தாக்கி விடக்கூடாது என்கிற பயத்துடனேயே இருப்பதால் சாதாரண வார்த்தைகள் கூட அவர்களை கோபத்துக்கு உள்ளாக்கி விடும். இவர்களுக்கு ஏற்படும் கோபம் இயலாமையின் வெளிப்பாடாக இருக்கலாம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படிக் கோபப்படலாம். இதுபோன்ற முன்கோபிகள், மற்றவர்கள் சொல்வதை முழுமையாக கவனித்து விட்டே வார்த்தை களை வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணத்தைத் தவிர்த்து, தங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மன நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோபமே குணமாகக் கொண்டவர்கள்

கோபம் என்பது இவர்களது அடிப்படை குணமாக இருக்கும். எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்படி இல்லாவிட்டால் கோபப்படுவார்கள். சமூக யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். சாலை வசதி சரியில்லை, சிக்னலில் யாரும் நிற்பதில்லை என்று நேரடியாக தன்னைச் சாராத பிரச்னைகளுக்கும் கூட கோபப்படுவார்கள். இவர்கள், எல்லாவற்றிலும் ஒழுங்கு இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை விடுத்து, சமூக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

வஞ்சம்

ஒருவர் மீது கோபம் வரும் நிலையில் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல், உள்ளேயே வைத்துக் கொண்டு வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் பார்த்து காத்திருப்பார்கள். வெளிப்படுத்தாமல் அடக்கப்படும் கோபம் வஞ்சமாக மாறுகிறது. கோபங்களிலேயே வஞ்சம் கொடூரமானது. மனிதத்தன்மையை மறக்கடிக்கச் செய்து பழி வாங்கல் எண்ணத்தை தூண்டவல்லது. வஞ்சத்தை உள் வைத்திருப்பவர்கள் எதிராளியின் ஒவ்வொரு அசைவிலும் தங்களுக்கான சந்தர்ப்பத்தை நோக்கிக் காத்திருப்பதால், அவர்களது உடலில் அதிக அளவிலான ரசாயன மாற்றங்கள் ஏற்படும். வஞ்சக எண்ணத்தை ஒழிக்க வேண்டுமானால், எந்தத் தவறாயினும் அதை மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்புடையவரோடு பேசி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பேசித் தீர்க்க முடியாத நிலையில் சூழலை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கோபத்தின் விளைவுகள்

Anger is otherwise called masked depression என்று ஒரு ஆங்கில மேற்கோள் உண்டு. மனச்சோர்வுக்கான அடிப்படைக் காரணமே கோபப்படுதல்தான். கோபம் Anxiety எனும் பதற்ற நோயை ஏற்படுத்தக் கூடியது. கோபப்படும்போது அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை கடத்துவதற்காக வேகமாக மூச்சு இழுப்பதால் இதய நோய் உள்ளவர்கள் இறப்பதற்கான வாய்ப்புகள் கூட இருக்கிறது. அடிக்கடி கோபப்படுபவர்கள் அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, புகையிலை, மது போன்ற போதைப் பழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள். ரத்த அழுத்த நோய், இதய நோய்கள், மனப்பதற்ற நோய்கள், மனச்சோர்வு, தீராத தலைவலி, உடல் வலி என பற்பல நோய்களுக்கு கோபம் ஒருவரை ஆளாக்கி விடும் அபாயம் உண்டு.

கோபம் ஆபத்தானது அல்ல…

அதை நாம் கையாளும் முறையில்தான் எல்லாமும் இருக்கிறது. அதற்காக கோபமே படக்கூடாது என்றில்லை. கோபப்படாமல் கோபத் தை அடக்க அடக்க அது நம்மை கவலைக்குள்ளாக்கும்!

மருத்துவத் தீர்வுகள்

கோபம் என்பது இயல்பான உணர்ச்சிதான் அது உங்கள் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் நிலை யில் மருத்துவ ஆலோசனையை நாடுவது நல்லது. கோபம் ஒரு நோயாக மாறிப் போனவர்களுக்கென சிகிச்சைகள் இருக்கின்றன. கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கெனவே தளர்த்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் மூச்சுப் பயிற்சி மற்றும் கோபத்தை ஏற்படுத்தும் எண்ணங்களை ஆராய்ந்து அதனை மாற்றி அமைப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அடிப்படையில் கோபம் வந்தாலும் அதை ஆரோக்கியமாக கையாள வேண்டும் என்கிற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும்.

Loading...

728

2