new BB1

உங்கள் சருமம் உங்கள் அழகு!

Loading...

download (4)காய்ச்சல் அடிக்கிற போது, வயிற்றுவலிக்கு மருத்துவம் செய்து கொண்டால் காய்ச்சல் எப்படி சரியாகும்? அதே போலத்தான் சருமத்துக்கான சிகிச்சைகளும்.சருமத்தின் தன்மை தெரியாமல் எடுத்துக் கொள்ளப்படுகிற எந்த அழகுசிகிச்சையும் வேஸ்ட்தான். சருமத்தின் தன்மை தெரிந்து, அதற்கேற்ப தினசரிப் பராமரிப்பை வீட்டிலிருந்தபடியே செய்யப் பழகினால் போதும். அழகு உங்கள் வசம் வரும்!

சருமத்தின் தன்மைகள், அதற்கேற்ற அழகு சிகிச்சைகள் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் ‘ஷீபா’ அழகு நிலையத்தின் உரிமையாளர் ஷீபாதேவி.
5 வகையான சருமம்…

சாதாரண சருமம்
எண்ணெய் பசையுள்ள சருமம்
வறண்ட சருமம்
காம்பினேஷன் சருமம்
சென்சிட்டிவ் சருமம்

எப்படிக் கண்டுபிடிப்பது?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததுமே ஒரு டிஷ்யூ பேப்பரால் முகத்தை ஒற்றி எடுக்க வேண்டும். பேப்பர் முழுவதிலும் எண்ணெய் பசை ஒரே சீராகப் படிந்திருந்தால் உங்களுடையது எண்ணெய் பசையுள்ள சருமம்.

கொஞ்சம்கூட எண்ணெய் பசையே இல்லாவிட்டால் அது வறண்ட சருமம்.

டிஷ்யூ பேப்பரில் ஒரு பகுதி மட்டும் எண்ணெய் படிந்து, அதாவது, நெற்றி, மூக்கு, தாடைப் பகுதிகளில் மட்டும் எண்ணெய் பசையும், கன்னப் பகுதி வறண்டும் இருந்தால், அது காம்பினேஷன் சருமம். அதாவது, எண்ணெய் பசையும், வறட்சியும் கொண்ட சருமம்.

சிறிது எண்ணெய் பசையுடன், மிகவும் மென்மையாக, அதாவது, லேசாகக் கிள்ளினாலே தடம் பதிந்து, சுருக்கங்கள் விழும் சருமம் உணர்ச்சியும் மென்மையும் கொண்ட சென்சிட்டிவ் சருமம்.

முகம் முழுக்க மிக லேசான எண்ணெய் பசை தெரிந்தால் அது சாதாரண சருமம்.

எப்படிப் பராமரிப்பது?

சாதாரண சருமம்

சாதாரண சருமத்துக்கு பெரிய கவனிப்போ, போஷாக்கோ அவசியமில்லை. சாதாரண கவனிப்பே போதுமானது. பாலேடு கொண்டு லேசாக மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினாலே முகம் பளபளப்பாக இருக்கும். பால் அல்லது ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வெள்ளரிச்சாற்றை முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம் பளீரென இருக்கும்.

எண்ணெய் பசையுள்ள சருமம்

இந்த வகை சருமத்தில் விரைவில் அழுக்கும், தூசியும் சேர்ந்து விடும். அதிக எண்ணெய் பசை காரணமாக இந்த சருமம் உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் வரும். அதனால் அடிக்கடி முகத்தைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, பழங்கள், பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிட வேண்டும். சம அளவு தேன் மற்றும் ஆரஞ்சு சாறு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடங்கள்
கழித்துக் கழுவினால், எண்ணெய் பசை கட்டுப்படும். வாழைப்பழத்தில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து, மசித்து, முகத்தில் பேக் மாதிரி போட்டுக் கழுவலாம். பப்பாளிப் பழத்தை மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்திருந்து கழுவிட, அதிக எண்ணெய் சுரப்பும் கட்டுப்படும். சருமமும் ஊட்டம் பெறும். சிறிதளவு பாலில், 1 டீஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் ஈஸ்ட் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் ஊறிக் கழுவலாம்.

வறண்ட சருமம்

பார்ப்பதற்கு பொலிவே இல்லாமலிருக்கும். சருமத் துவாரங்களில் போதிய எண்ணெய் பசை இல்லாததால் சுருக்கங்களுடன் காணப்படும். இத்தகைய சருமம் உள்ளவர்கள், ரசாயனப் பொருள்கள், சூரிய வெளிச்சம் போன்றவற்றில் இருந்து விலகியே இருக்க வேண்டும். சோப் உபயோகிக்கக் கூடாது. சோப்பானது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி விடுவதால் சருமம் இன்னும் வறட்சியடையும். நிறைய தண்ணீர், அடிக்கடி பழச்சாறு குடிக்க வேண்டியது அவசியம். பயத்தம் மாவுடன், சிறிது கடலை மாவு கலந்து சோப்புக்கு பதில் உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, முகத்துக்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தால் வறட்சி நீங்கி, இறந்த செல்களும் நீங்கி, முகம் பொலிவடையும்.தேன், ஈஸ்ட், முட்டைகோஸ் சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து, முகம், கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஊறிக் கழுவினால் வறட்சி நீங்கும். அரைத்த தேங்காய் விழுது 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து, முகத்தில் தடவி, கால் மணி நேரம் கழித்துக் கழுவினால், சருமத்தின் எண்ணெய் பசை சமநிலைப்படுத்தப்பட்டு, சருமம் மிருதுவாக, பளபளப்பாக மாறும்.

காம்பினேஷன் சருமம்

இந்த சருமம் உடையவர்கள் மாதம் ஒரு முறையாவது ஃபேஷியல் செய்து கொள்ள வேண்டும். இவர்கள் துளசி, வேம்பு, சந்தனம் கலந்த சோப்புகளை உபயோகிக்கலாம். தேன், தயிர், பயத்தம் மாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால், சருமம் முழுவதும் ஒரே சீராக மாறும்.கடுகு எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வருவதும் பலன் தரும்.

சென்சிட்டிவ் சருமம்

இவர்களுக்கு எந்த கிரீமும், சிகிச்சையும் ஒத்துக் கொள்ளாது. உடனே அலர்ஜி ஏற்பட்டு, அரிப்பும் தடிப்பும் உண்டாகும். எனவே இத்தகைய சருமம் உள்ளவர்கள் இயற்கையான பொருள்களைக் கொண்டுதான் அழகை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தர்பூசணிப் பழத்தை மசித்து, சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசிக் கழுவலாம். தேங்காய் பாலுடன், சிறிது எலுமிச்சை சாறு கலந்து தடவிக் கழுவலாம்.பப்பாளிப்பழ விழுதுடன், தேங்காய் விழுது சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.

Loading...

728

2