new BB1

உணவுக் குழாய் பிரச்சனைகள்!

ht3652நாம் சாப்பிடுவது திட உணவானாலும் சரி, திரவ உணவானாலும் சரி வாயிலிருந்து வயிற்றுக்குள் செல்வது முக்கால் அடி நீளமுள்ள (25 செ.மீ.) உணவுக் குழாய் வழியாகத்தான். சுருங்கி விரியக்கூடிய தசைநார்களால் ஆன இந்த உறுப்பு, தொண்டையின் நடுப்பகுதியில் தொடங்குகிறது. குரல்வளைக்குப் பின்புறமாக அமைந்துள்ளது. நெஞ்சின் நடுப்பகுதியில் ஒரு குழாய் போலத் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதன் அடிப்பகுதி உதரவிதானத்தைக் கடந்து, சுமார் 4 செ.மீ. நீண்டு, இரைப்பையின் ஆரம்பப் பகுதியோடு இணைந்து கொள்கிறது.

உணவுக்குழாயின் உள்பக்கம் மெல்லிய சவ்வு போன்ற சளிப்படலத்தால் (Mucus membrane) ஆனது. இது உணவுக் குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்புத் தருகிறது. உணவுக்குழாயின் மேல்முனையிலும் கீழ்முனையிலும் சுருக்குத்தசையால் ஆன இரண்டு கதவுகள் (Sphincters) உள்ளன. மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவை விழுங்கும்போது அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் அமைந்து செயல்படுகிறது.

வாயில் போடப்பட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதற்கட்ட செரிமானம் நடந்து கூழ்போல் ஆனதும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பதுதான் உணவுக் குழாயின் முக்கிய வேலை. இதில் சிறிதும் பெரிதுமாக பல உடல்நலப் பிரச்னைகள் வரலாம் என்றாலும், நெஞ்செரிச்சல், உணவுக் குழாய் புற்றுநோய் என்ற இரண்டு நோய்கள்தான் அதிகம் சிரமப்படுத்தும். நெஞ்செரிச்சல் உணவைச் சாப்பிட்டதும் நம்மில் பலருக்கு நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படுவது வழக்கம். இந்தியாவில் 30 முதல் 50 சதவிகிதம் பேருக்கு நெஞ்செரிச்சல் உள்ளது.

இவர்களில் 100ல் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாகவும் மீதிப் பேருக்கு மழைக்காலக் காளான் போல் அவ்வப்போது முளைக்கும் பிரச்னையாகவும் உள்ளது. வழக்கத்தில் நாம் நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுவதும் ஏற்படும் பிரச்னை அல்ல. இது உணவுக் குழாய்  பிரச்னை. மருத்துவ மொழியில் இந்த நோய்க்கு ‘இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்’ (Gastro Esophageal Reflux Disease சுருக்கமாகGERD ) என்று பெயர்.

காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக்கோட்டைக் கடந்து உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்,உணவுக்
குழாயின் தசைகள் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உண்டாகும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப் பிட்டால், உணவுக்குழாயின் கீழ்முனைக் கதவு பழசாகிப்போன சல்லடை வலை போல ‘தொள தொள’ வென்று தொங்கி விடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக்குழாயின் கீழ்ப்பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட இதுவே காரணம். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

சிலருக்கு இரைப்பையின் சிறு பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus hernia) உணவுக் குழாயை அழுத்தும். இதன் விளைவாக குழாயின் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிட, இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம் உணவுக் குழாய்க்குள் படையெடுக்க, அங்கு புண் உண்டாகி நெஞ்செரிச்சல் தொல்லை கொடுக்கும். பலருக்கு உணவு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். பொதுவாக, இந்தத் தொல்லை இரவு நேரத்தில்தான் அதிகமாக இருக்கும்.

என்ன பரிசோதனை செய்வது?

நெஞ்செரிச்சல்தானே…….தன்னால் சரியாகிவிடும் என்று மட்டும் அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்தப் பிரச்னை உணவுக் குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். காரணம், சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க, நெஞ்சில் எரிச்சல் உள்ளவர்கள் நோயின் துவக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) பரிசோதனைகளைச் செய்து கொண்டால் காரணம் தெரிந்து விடும்.

சிகிச்சை என்ன?

இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும் தரப்படுகின்றன. இவற்றுடன் அமிலம் பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க ‘புரோகைனட்டிக்’ மருந்துகள் (Prokinetic drugs) மற்றும் வாந்தி தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. இவற்றை மருத்துவர் கூறும் கால அளவுக்குச் சாப்பிட வேண்டியது முக்கியம்.

தடுப்பது எப்படி?

நெஞ்செரிச்சலுக்குப் பெரும்பாலும் உணவுக் குழாய் அழற்சிதான் காரணமாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருந்தால் போதும், ஆரம்பநிலையில் உள்ள நெஞ்செரிச்சலை மிக எளிதில் குணப்படுத்தி விடலாம். சாப்பிடும்போது மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். கவலையாக இருக்கும் போதோ, கோபமாக இருக்கும்போதோ சாப்பிட வேண்டாம். உங்களுக்குத் தேவையான அளவுக்கு உணவு சாப்பிடுங்கள். ருசிக்காகவோ, மற்றவர்களை திருப்திப்படுத்தவோ சாப்பிடுவதைத் தவிருங்கள். அதிக சூடாக எதையும் சாப்பிடாதீர்கள்.

காரம் அதிகமாக உள்ள உணவுகளும் வேண்டாம். மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவு களைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். அவசரம் அவசரமாக சாப்பிடுவது தவறு. அப்படிச் சாப்பிடும்போது உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். பிறகு ஏப்பம் வரும். சமயங்களில் ஏப்பத்துடன் ‘அமிலக் கவளம்’ உணவுக்குழாய்க்குள் உந்தப் படும். இதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும். ஆகையால், உணவை நன்றாக மென்று, மிக நிதானமாக விழுங்குங்கள். சாப்பிடும் நேரத்தில் பேச வேண்டாமே!

அதிகக் கொழுப்பு உள்ள உணவுகள், இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, காபி, தேநீர், சாக்லெட், மது, க, வாயு நிரப்பப்பட்ட பானங்கள், கோலா பானங்கள் பால் மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், காரம், மசாலா வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.வழக்கமாக, உணவு உண்டபின் இரைப்பை விரியும். அப்போது அதன்மேல் அழுத்தம் ஏற்பட்டால் அமிலம் உணவுக் குழாய்க்குள் செல்லும். இதனைத் தடுக்க சாப்பிட்ட பின் ஆடைகள், பெல்ட் போன்றவை இறுக்கமாக இருந்தால் சிறிது தளர்த்திக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் குனிந்து வேலை செய்யக் கூடாது; கனமான பொருளைத் தூக்கக் கூடாது; உடற்பயிற்சி செய்யக்கூடாது; தண்டால் எடுக்கக் கூடாது.

மிக முக்கிய யோசனை இது…

சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப்படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது. இதற்காக நான்கு தலையணைகளை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை. தலைப் பக்கக் கட்டில் கால்களுக்குக் கீழே ஒரு அடி உயரத்துக்கு மரக்கட்டைகளை வைத்தால் போதும். வலதுபுறமாகப் படுப்பதைவிட இடது புறமாகத் திரும்பிப் படுப்பது நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.

புகைப்பிடிப்பது இரைப்பையில் அமிலச் சுரப்பை அதிகரிப்பதோடு, உணவுக் குழாயின் சுருக்குத்தசைக் கதவுகளையும் தளரச் செய்வதால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடும். புகைப்பிடிப்பதைப் போலவே புகையிலை போடுவது, மது அருந்துவது, பான்மசாலா உபயோகிப்பது ஆகியவையும் நெஞ்செரிச்சலுக்கு ஆகாது. இவற்றையும் அறவே தவிர்த்து விடுங்கள். நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.

உணவுக் குழாய் புற்றுநோய் உணவுக் குழாய் அழற்சிக்கு அடுத்தபடியாக உணவுக்குழாயில் ஏற்படும் மற்றொரு முக்கியமான பிரச்னை, உணவுக் குழாய் புற்றுநோய் (Cancer Oesophagus). நம் நாட்டைப் பொறுத்தவரை நடுத்தர வயதில் வருகின்ற புற்றுநோய்களில் உணவுக் குழாய் புற்றுநோய் முதலிடம் வகிக்கிறது.

காரணம் என்ன?

புகைப்பிடித்தல், மது அருந்துதல், புகையிலை போடுதல், பான்மசாலா உபயோகித்தல் ஆகியவை உணவுக் குழாய் புற்றுநோய் உருவாக முக்கியக் காரணங்கள். மேலும், உணவுக் குழாயின் அடிப்பகுதியில் பிறவிச் சுருக்கம், இரைப்பை ஏற்றம், ரத்தசோகை, ‘டைலோசிஸ்’(Tylosis), ‘அக்கலேசியா கார்டியா’ (Achalasia cardia) போன்ற பரம்பரை நோய்களும், மரபணுக் கோளாறுகளும் இந்தப் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். தவிர, விரைவு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஊட்டச்சத்துக் குறைவு, வைட்டமின் சத்துக் குறைவு, பல் மற்றும் வாய் சுத்தமின்மை ஆகியவையும் இந்த நோய் உருவாவதைத் தூண்டு
கின்றன. நெஞ்செரிச்சல் நோய் பல வருடங்களுக்குத் தொடருமானால் அது ‘பேரட்ஸ்’ (Barrett’s) உணவுக் குழாயாக மாறி, இந்தப் புற்றுநோய்க்குப் பாதை அமைக்கும்.

உணவுகள் கவனம்!

மக்களிடம் காணப்படும் சில தவறான உணவுப் பழக்கமும் உணவுக்குழாய் புற்று ஏற்பட வழி அமைக்கிறது. எடுத்துக்காட்டு:

1. காபி மற்றும் தேநீரை அதிக சூடாகக் குடிக்கும் பழக்கம்.

2. கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல். 3. காய்கறி, கீரை, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடாதது.

எந்த வயதில் வரும்?

சாதாரணமாக இந்தப் புற்றுநோய் 40 வயதுக்கு மேல் வருகிறது. நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு உணவை விழுங்கும் போது சிரமம் ஏற்படுமானால் உணவுக்குழாய் புற்று உள்ளதா எனப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த நோய் உள்ளவர்களுக்கு ஆரம்பத்தில் புளித்த ஏப்பம், பசிக்குறைவு, நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வு, அஜீரணம், உடல் எடை குறைதல் போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவற்றில் உடல் எடை குறைவது தவிர மற்ற அறிகுறிகள் எல்லாமே சாதாரணமாக இரைப்பைப் புண்ணிலும் காணப்படும். ஆகையால், இந்த நோயாளிகள் இரைப்பைப் புண்ணுக்கு நீண்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். இதனால் அறிகுறிகள் தற்காலிகமாக மறையும். என்றாலும், புற்றுநோய் மறையாது. பிறகு உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்படும்போதுதான் இந்த நோய் உள்ள விவரம் தெரியவரும்.

மற்ற அறிகுறிகள்: எதைச் சாப்பிட்டாலும் தொண்டையில் ஏதையும் அடைப்பது போல் இருக்கும். போகப்போக உணவு, தண்ணீர் எதையும் விழுங்க முடியாது. வாந்தி வரும். வாந்தியில் ரத்தம் வரலாம். உணவை விழுங்கும்போது – உணவுக் குழாயில் புற்று உள்ள இடத்தை  உணவு கடக்கும்போது – நெஞ்சில் வலி ஏற்படும். பொதுவாக இந்த நோய் உள்ளவர்களுக்கு நடு நெஞ்சில் வலி நிரந்தரமாக இருக்கும்.

எங்கெல்லாம் பரவும்?

இது நேரடியாகவோ, ரத்தம் வழியாகவோ அல்லது நிணநீர் மூலமோ உடலில் பிற இடங்களுக்குப் பரவக்கூடிய தன்மை உடையது. பொதுவாக உணவுக் குழாய்க்கு அருகில் உள்ள நுரையீரலுக்கும் மூச்சுக் குழலுக்கும் நேரடியாகவே பரவிவிடும். ரத்தத்தின் மூலம் கல்லீரல், நுரையீரல், எலும்புகள் ஆகியவற்றுக்குப் பரவும். நிணநீர் மூலம் கழுத்து, மூச்சுக்குழல், வயிறு ஆகிய பகுதிகளில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு நோய் பரவும்.

என்ன பரிசோதனை?

பேரியம் மாவைக் குடிக்கச் செய்து எக்ஸ்-ரே எடுப்பது பழைய முறை. இப்போது ‘ஈஸோபேஜியல் கேஸ்ட்ரோ டியோடினோஸ்கோப்பி’ (oesophago-gastro – duodenoscopy) மூலம் உணவுக் குழாயில் உள்ள புற்றுநோயை மருத்துவரே நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். மேலும், இந்தப் பரிசோதனை செய்யப்படும் போதே புற்றுள்ள பகுதியிலிருந்து சிறு பகுதியை வெட்டி எடுத்துத் ‘திசு ஆய்வு’ (Biopsy) செய்து, நோயை உறுதி செய்வது இந்த நோய்க்கணிப்பில் உள்ள நடைமுறை.

என்னென்ன சிகிச்சைகள்?

உணவுக் குழாய்  புற்றுநோய்க்கு அதன் தன்மை, வகை, பரவியுள்ள நிலைமை ஆகியவற்றைப் பொறுத்து அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருத்துவ சிகிச்சை என மூன்று வழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பநிலையில் உள்ள உணவுக் குழாய் புற்றுநோயை குணப்படுத்துவது எளிது.

1. அறுவை சிகிச்சை:

உணவுக் குழாயில் புற்று பாதித்துள்ள பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு, பெருங்
குடல் பகுதியிலிருந்து சிறு பகுதியை எடுத்து உணவுக் குழலுக்கு மாற்றாகப் பொருத்திவிடுவது ஒரு வழி. இந்த சிகிச்சையை நோயின் ஆரம்பநிலையில் மட்டுமே செய்ய இயலும். புற்று முற்றிய நிலையில் இதை மேற்கொள்ள இயலாது. அப்போது ஒரு மாற்று வழி செய்யப்படும். அதாவது, நோயாளி உணவு உட்கொள்ள மட்டும் வழி செய்வதற்காக, வாய் வழியாக ஒரு செயற்கைக் குழாயை உணவுக் குழலுக்குள் செலுத்தி, அதைப் புற்று உள்ள பகுதியைக் கடக்கச் செய்து, இரைப்பைக்குள் பொருத்திவிடுவார்கள். இதன் மூலம் நோயாளி உணவைச் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு தற்காலிக ஏற்பாடுதானே தவிர நிரந்தரத் தீர்வல்ல.

2.கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy):

இந்த நோய் வந்துள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு கதிர்வீச்சு சிகிச்சைதான் தரப்படுகிறது. ‘லீனியர் ஆக்ஸிலேட்டர்’ அல்லது கோபால்ட் கருவிகள் மூலம் எக்ஸ் கதிர்களை உணவுக் குழலுக்குச் செலுத்தும் போது புற்றுநோய்த் திசுக்கள் சுருங்கி நோய் குணமாகிறது.

3. மருத்துவ சிகிச்சை :

ரத்தம் மூலமும் நிணநீர் மூலமும் உடலில் மற்ற இடங்களில் பரவியுள்ள புற்றுநோய்க்கு மருத்துவ சிகிச்சை தரப்படும்.

728