new BB1

காது குடையலாமா? எண்ணெய் விடலாமா?

Loading...

13‘‘காதுகளின் பணி, சத்தத்தைக் கேட்பது மட்டுமில்லை. நிற்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது என நம்முடைய தினசரி செயல்பாடுகள் இயல்பாக இருக்கவும் காதுகள்தான் உடலுக்கு சமன்நிலையை (Balance) தருகிறது. அதேபோல, பேச்சுத் திறனைத் தீர்மானிப்பதிலும் காதுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு!’’ – ஆச்சரியத் தகவலோடு ஆரம்பிக்கிறார் காது மூக்கு தொண்டை மருத்துவரான பேராசிரியர் கே.கே.ராமலிங்கம். காதுகள் பராமரிப்பில் பொதுவாக நாம் செய்யும் தவறுகள் முதல் புதிதாக வந்திருக்கும் நவீன அறுவை சிகிச்சை வரை நம்மிடம் அவர் பகிர்கிறார்.

உடலின் மற்ற பகுதிகளைச் சுத்தம் செய்வதுபோல காதுகளை சுத்தம் செய்ய வேண்டியதில்லை. காது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளும் திறன் கொண்டது. அதனால்தான், காதிலிருந்து மெழுகு போன்ற குருமி தானாகவே வெளியேறுகிறது. நாம் அதை உணராமல் காதுகளில் ஹேர்பின், பட்ஸ் என ஏதாவது ஒன்றை வைத்து சுத்தம் செய்ய நினைக்கிறோம். இதனால், மேலும் அந்த அழுக்கை உள்ளே தள்ளுவதுடன் காது ஜவ்வையும்
சேதப்படுத்துகிறோம்.

காதில் அடிபட்டு ஜவ்வு கிழிந்துவிட்டால் கூட, அதன் ஜவ்வு 2 வாரங்களில் தானாகவே குணமாகிவிடும் அபார ஆற்றல் கொண்டது. அதனால் காது விஷயத்தில் நாம் எதுவும் செய்யா மல் இருப்பதே காதுகளுக்கு நல்லது.

காதுக்கு எண்ணெய் விடுவது நாம் பரவலாக செய்து வருகிற இன்னொரு தவறு. இதனால் எந்தப் பயனும் இல்லை. காது ஈரமாகவே இருந்தால் பூஞ்சைகள் உருவாகும் வாய்ப்புதான் உண்டு. வலி, இரைச்சல், சீழ் போன்ற பிரச்னைகள் பொதுவாக காதுகளில் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு நோய்த்தொற்றால் காதில் சீழ் வரலாம்.

காதுவலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. காதில் கொப்புளம், அடிபடுதல் போன்ற காரணங்களால் காதில் வலி உண்டாகும். வேறு மறைமுகமான காரணங்களாலும் காதுகளில் வலி ஏற்படும். தொண்டைக்கும் காதுக்கும் இடையே இருக்கும் குழாயில் ஏற்படும் நோய்த்தொற்று, அப்படியே காதுகளிலும் தொற்றிக் கொள்வதால் காதில் வலி ஏற்படலாம். பல் வலி இருந்தாலும் பல்லைவிட காதுகளிலேயே அதிக வலி இருக்கும். டான்சில், ஈறு, நாக்கு, தாடை போன்ற இடங்களில் வலி இருந்தால்கூட, காதுகளில் இருந்து வலி வருவதுபோலவே நமக்குத் தோன்றும். இதைத்தான் Referred pain என்று மருத்துவர்கள் சொல்வார்கள்.

நீரிழிவு ஏற்பட்டவர்களுக்கு காதுக்குள் புண் ஏற்பட்டால், அந்தப் புண் ஆறாமல் அப்படியே மூளைக்குப் பரவிவிடும். இது மிகவும் ஆபத்தானது. இதனாலும் காதுகளில் வலி ஏற்படும். நீரிழிவால் காதுகளில் நரம்பு பாதிக்கப்பட்டு கேட்கும் திறன் குறைவதும் உண்டு. ளிகுழந்தைகளின் காதுக்குள் ஏதேனும் பொருட்கள் விழுந்துவிட்டால், வீட்டிலேயே எடுக்க முயற்சிக்கக்கூடாது. சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவரை சந்திக்க வேண்டும். குழந்தைகள் திடீரென தலையை ஆட்டினாலோ, அடம்பிடித்தாலோ ஜவ்வு கிழியும் அபாயம் உண்டு. அதனால்தான் காது தொடர்பான சிகிச்சைகளை குழந்தைகளுக்கு அளிக்கும்போது சில நிமிடங்களுக்கான மயக்க மருந்து கொடுத்துவிடுகிறார்கள்.

ஒலியை டெசிபல் என்று அளக்கிறார்கள். நாம் பேசிக்கொள்வது 45 அல்லது 50 டெசிபல். தொழிற்சாலைகள், இன்ஜின் போல அதிக சத்தம் ஏற்படக்கூடிய இடங்களில் 90 டெசிபலுக்கு மேல் ஒலி இருக்கும். இந்த 90 டெசிபல் சப்தத்தில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாக ஒருவர் இருந்தால் நாளடைவில் அவருக்குக் கேட்கும் திறன் குறையும்.

காது கேட்காமல் போவதில் 2 வகை கள் உள்ளன. ஒன்று, தற்காலிகமாகக் கேட்காமல் போவது. அதீத சத்தத்தாலோ, அடிபடுவதாலோ சில வினாடிகளுக்கோ, சில நிமிடங்களுக்கோ காது கேட்காததுபோலத் தோன்றும். இதுபோன்ற தற்காலிகக் கேட்கும் திறன் இழப்பை மருந்து, ஊசி என சிகிச்சைகள் மூலம் சரிசெய்துவிடலாம். 90 டெசிபலுக்கு மேல் ஒலிக்கும் இடங்களில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு நிரந்தரமாகக் காது கேட்கும் திறன் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை சரி செய்வது சிரமம்.

செல்போன் பேசுவதாலோ, ஹெட்செட்டில் பாட்டு கேட்பதாலோ காது கேட்கும் திறன் குறையும் என்பதற்கு இது வரை எந்த ஆதாரங்களும் கிடையாது. இவையெல்லாமே சந்தேகங்கள்தான். மனப் பிரமையால் சிலருக்கு காது கேட்கும் திறன் குறைந்ததுபோல தோன்றும். எந்த அளவு சத்தம், எத்தனை மணிநேரம் கேட்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் கேட்கும் திறன் குறையுமே தவிர, இதுபோன்ற காரணங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

காதில் சீழ், ஜவ்வு மற்றும் காதுக்குள் இருக்கும் எலும்பில் சேதம் போன்ற பெரிய பிரச்னைகளாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அரிதாக புற்றுநோய்க் கட்டிகளும் காதுக்குள் வரலாம். காது புற்றுநோய் அரிதாகத்தான் வரும்.

சுவரில் ஓர் ஆணி அடித்தால், அதில் ஒரு கனமான பொருளை மாட்டிவிட்டுக் கொள்கிறோம். அதேபோல, காதுக்கு மேல் சிறிய துளை ஒன்றை ஏற்படுத்தி உள்ளே இருக்கும் எலும்பில் சின்ன ஸ்க்ரூ ஒன்றைப் பொருத்திவிட வேண்டும். 3 மாதங்களில் அந்த ஸ்க்ரூ உறுதியாக எலும்புடன் ஒட்டிக் கொண்டு விடும். அதன்பிறகு, வெளியே கேட்கும் கருவியைப் பொருத்திக் கொள்ளலாம். இந்தக் கருவியைத் தூங்கும்போதோ, குளிக்கும்போதோ கழற்றி வைத்துக் கொள்ளலாம். இதுதான் இத்தனை நாட்களாக காது கேளாமைக்காக இருந்த சிகிச்சை முறை.

இப்போது ‘பாஹா 4 அட்ராக்ட்’ என்ற சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது. வெளியில் காது கேட்கும் கருவி வைத்துக் கொள்வதை சங்கடமாக உணர்கிறவர்களுக்கும் அந்தக் கருவியை சுத்தமாகப் பராமரிக்க சிரமப்படுகிறவர்களுக்கும் ‘பாஹா 4 அட்ராக்ட்’ வசதியாக இருக்கும். இந்த சிகிச்சையில் ஸ்க்ரூவுக்கு பதிலாக காந்தத்தால் உருவான ஒரு சிறிய கருவியை உள்காதுக்குள் பொருத்தி விட்டு, வெளியில் மயிர்க்கற்றைகளுக்கிடையில் காது கேட்கும் கருவியை மறைவாகப் பொருத்திக் கொள்ளலாம். தேவைப்படுகிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் கழற்றி வைத்துக் கொள்ள லாம். வெளிக்காது இல்லாமல் பிறக்கிற குழந்தைகளுக்கும் இந்த சிகிச்சை பெரிதும் பயன்படும்.

கடைசியாக ஒரு முக்கியமான விஷயம்… காதுகளில் ஏதாவது பிரச்னை என்றால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். நாமே சுய மருத்துவம் பார்க்கக் கூடாது. மருந்துக்கடைகளில் சொட்டு மருந்து வாங்கிப் பயன்படுத்துவது பெரிய தவறு. விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொட்டு மருந்துகளைப் பரிந்துரைப்பதில்லை என்பதை மறக்காதீர்கள். இந்த சொட்டு மருந்தால் காலம் முழுவதும் காதில் சீழ் வரும் வாய்ப்புதான் உண்டு!

Loading...

728

2