new BB1

கூந்தல் உதிர்வுக்கு காரணமாகுது பிசிஓஎஸ்!

Loading...

ld3286‘கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் எனக்கு அடர்த்தியான, அழகான தலைமுடி இருந்தது. சமீப காலமா தலைக்குக் குளிக்கிற போது, கொத்துக் கொத்தா முடி கொட்டுது. தலையில கை வச்சாலே நாலஞ்சு முடி கையோட வருது. பார்க்கிறதுக்கு என் முடி நல்லா இருக்கிற மாதிரிதான் தெரியுது. ஆனாலும், என்னால வித்தியாசத்தை உணர முடியுது…’ – இப்படி சொல்லிக் கொண்டு சிகிச்சைக்கு வருகிறவர்களை தினம் தினம் பார்க்கிறேன். இவர்களில் பலருக்கும் பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையே கூந்தல் உதிர்வுக்கான காரணமாக இருப்பதையும் பார்க்கிறேன். சினைப்பை நீர்க்கட்டிக்கும் கூந்தல் உதிர்வுக்கும் சம்பந்தம் உண்டா? இதுவே எல்லோரின் கேள்வியாகவும் இருக்கிறது.

பிசிஓஎஸ் என்பது பாலிசிஸ்டிக்

ஓவரியன் சிண்ட்ரோம் என்பதன் சுருக்கம். எண்டோக்ரைன் சுரப்பியில் உருவாகிற ஒரு குறைபாடு. எல்லா பெண்களின் உடலிலும் ஆண்ட்ரோஜென் எனப்படுகிற ஆண் ஹார்மோன் கொஞ்சம் இருக்கும். அது சிலருக்கு அளவுக்கதிகமாக சுரக்கும் போது, குறிப்பாக அதில் உள்ள டி.ஹெச்.டி (Dihydrotestosterone) கூந்தல் புடைப்புப் பகுதிகளை பாதிக்கும். இது புதிய முடிக் கற்றைகள் முளைப்பதைத் தடுப்பதுடன், கூந்தல் உதிர்வுக்கும் காரணமாகிறது. இருக்கும் முடிகளையும் மெலிதாக்கும். இதே ஆண்ட்ரோஜென் ஹார்மோன்களுக்கு மாதவிடாயின் போதான ரத்தப் போக்கின் அளவு மற்றும் ரத்தப் போக்கு நீடிக்கும் நாட்களை பாதிக்கிற குணமும் உண்டு. தவிர, எண்ணெய் பசையான சருமத்துக்கும் பருக்கள் உருவாகவும் கூட இது காரணமாகிறது.

சினைப்பைகளால் முதிர்ந்த முட்டைகளை வெளியேற்ற சிரமப்படும்படி ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படுவதே பிசிஓஎஸ் பிரச்னைக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மாதவிலக்கு சுழற்சியில் மாற்றம், அதீத ரத்தப் போக்கு அல்லது மிகக் குறைவான ரத்தப் போக்கு, முகம், தாடை, மார்பகங்கள் என உடல் முழுவதும் ரோம வளர்ச்சி, மங்கு, முடி மெலிதல் அல்லது அளவுக்கதிகமாக முடி கொட்டுதல், முடி உடைந்து பிளவுபடுதல் போன்றவை பிசிஓஎஸ்சின் அறிகுறிகள்.

ஈஸ்ட்ரோஜென், எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச்., டெஸ்டோஸ்டீரான் போன்றவற்றின் அளவுகளை சரிபார்ப்பதற்கான டெஸ்ட், தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகியவற்றின் மூலம் பிசிஓஎஸ் பிரச்னையை மருத்துவர் கண்டுபிடிப்பார்.

பிசிஓஎஸ் உண்டாக்கும் கூந்தல் உதிர்வுக்கான தீர்வுகள்…

உணவுக்கட்டுப்பாடு, வாழ்க்கை முறை மாற்றங்கள், உடற்பயிற்சி, மன அழுத்தமில்லாத வாழ்க்கை, வைட்டமின் மற்றும் தாதுச்சத்து சப்ளிமென்ட்டுகள் போன்றவற்றின் மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு காணலாம்.

உணவு

கீரைகள், காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சோயா மில்க் போன்றவை கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் உணவுகள். குறிப்பாக சோயா மில்க்குக்கு டி.ஹெச்.டி ஹார்மோனை கட்டுப்படுத்தி, கார்போஹைட்ரேட் மற்றும் புரத அளவுகளை சமநிலைப்படுத்தும் தன்மை உண்டு.

உடற்பயிற்சி

பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடல் எடை அதிகரிப்பு இருப்பது சகஜம். சில கிலோ எடைக் குறைப்பு கூட ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்கி, கூந்தல் வளர்ச்சியைக் கூட்டும். உடற்பயிற்சியுடன் தினமும் 1 மணி நேரம் நடப்பதன் மூலம் டெஸ்டோஸ்டீரான் அளவு மட்டுப்படும். பிசிஓஎஸ் அறிகுறிகள் குறைவதோடு, கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும்.

மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்

மன அழுத்தம் என்பது ஸ்ட்ரெஸ் ஹார்மோன் எனப்படுகிற கார்ட்டிசால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது. அதன் விளைவாக கூந்தல் உதிர்வு அதிகமாகும். உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கான வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

தியானம் மற்றும் யோகா, நடைப்பயிற்சி, விருப்பமான ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுவது, நீச்சல் போன்றவையும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.

என்ன செய்வது?

தாமதிக்காமல் ட்ரைகாலஜிஸ்டை சந்திக்கவும். கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தும் சில வெளிப்பூச்சுகள், சப்ளிமென்ட்டுகள் மற்றும் ஆர்கானிக் ஷாம்புவை அவர் உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

பிசிஓஎஸ் ஏற்படுத்தும் கூந்தல் உதிர்வு மற்றும் உடல் முழுவதுமான ரோம வளர்ச்சி என இரண்டு பிரச்னைகளையும் கட்டுப்படுத்துகிற சப்ளிமென்ட் ஒன்று உள்ளது. ட்ரைகாலஜிஸ்ட்டின் ஆலோசனையின் பேரில், இதை 6 வாரங்களுக்கு எடுத்துக் கொண்டால் நல்ல முன்னேற்றம் தெரியும். கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுப்பவர்களும் மட்டும் இதைத் தவிர்க்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயோடின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

வெளிப்பூச்சுக்கு…

‘ஜோஜோபா ஆயில்’ என்கிற அரோமா ஆயில் கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது. இது கூந்தல் உதிர்வை நிறுத்தி, புதிய முடிகளை வளரச் செய்யும். பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பல பெண்களுக்கு ஹைபோதைராய்டு பிரச்னையும் இருக்கிறது. அதுவும் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும். பிரச்னைக்கான வேர் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையையும் வாழ்க்கை முறையையும் பின்பற்றினாலே கூந்தல் தொடர்பான பிரச்னைகளில் இருந்து வெளியே வரலாம்.

Loading...

728

2