new BB1

சீதபேதிக்குத் தீர்வு என்ன?

Loading...

ht3581கோடை தொடங்கிவிட்டால் போதும் சின்னம்மை, தட்டம்மை என்று பல அம்மை நோய்களில் ஆரம்பித்து வயிற்றுப்போக்கு, சீதபேதி, காலரா, டைபாய்டு வரை பல தொற்றுநோய்கள் மக்களைத் தாக்கத் தொடங்கும். பனிக்காலம் முடிந்து வெயிற்காலம் தொடங்குகிற காலநிலை மாற்றம் இந்த நோய்க்கிருமிகள் வளர்வதற்கு ஊக்கம் தருவது இதற்கு அடிப்படைக் காரணம். இவற்றில் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரையும் பாதிக்கின்ற சீதபேதியைப் பற்றி இப்போது பார்ப்போம்.

சீதபேதி (Dysentery) என்பது அடிக்கடி திரவநிலையில் மலம் கழிப்பதையும் மலத்துடன் ரத்தமும் சீதமும் கலந்து போவதையும் குறிக்கும். இதில் அமீபா சீதபேதி, ஜியார்டியா சீதபேதி, பாக்டீரியா சீதபேதி என்று பலவகைகள் உள்ளன. பேச்சுவழக்கில் சீதபேதியை வயிற்றுக்கடுப்பு என்றும் வயிற்றொழிச்சல் என்றும் கூறுகிறார்கள். அசுத்தமான தெருக்கள், கழிவுகள் தேங்கி நிற்கும் சாக்கடைகள், சேறும் சகதியுமான சாலைகள், சுகாதாரம் குறைந்த சுற்றுப்புறம், சுயசுத்தம் குறைவது, நெருக்கடியான வீடுகள் ஆகியவை ஒருவருக்கு சீதபேதி ஏற்படுவதற்கும் ஒரே நேரத்தில் பல பேருக்கு பரவுவதற்கும் வழி அமைக்கின்றன.

1. அமீபா சீதபேதி

மருத்துவத்துறையில் ‘அமீபியாசிஸ்’ (Amoebiasis) எனும் பெயரில் அழைக்கப்படுகிற இந்த நோய் ‘என்டமீபா ஹிஸ்டோலைட்டிகா’ (Entamoeba histolytica) எனும் கிருமியால் உண்டாகிறது இக்கிருமி பெருங்குடலில் வசிக்கிறது. மலத்தில் வெளியேறுகிறது. இது டிரோபாசாய்டு, சிஸ்ட் என்ற இரு உருவங்களில் வாழ்கிறது. பெருங்குடலில் வாழ்கின்றபோது டிரோபாசாய்டாகவும் மலத்தில் வெளியேறுகின்றபோது சிஸ்டாகவும் தன் உருவ அமைப்பை மாற்றிக் கொள்கிறது. காரணம், டிரோபாசாய்டாக வெளிவந்தால் சில நாட்களில் அது இறந்து விடும்; சிஸ்டாக வெளிவந்தால் பல வாரங்களுக்கு உயிர்வாழும்.

கிருமிகள் பரவும் முறை

தெரு ஓரங்களில் மலம் கழிக்கின்ற பழக்கம் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகம். மலத்தில் வெளியேறிய அமீபா சிஸ்டுகள் அங்குள்ள மண்ணில் கலந்திருக்கும். சிறு குழந்தைகள் இந்த மாதிரித் தெருக்களில் விளையாடும்போது அவர்களது விரல்நகங்களின் இடுக்குகளில் இந்த சிஸ்டுகள் புகுந்து கொள்ளும். பிறகு அவர்கள் சரியாக கை கழுவாமல் உணவை உண்ணும்போது இந்த சிஸ்டுகளும் குடலுக்குள் நுழைந்துவிடும்.

இதுபோல பொதுமக்கள் குளத்து ஓரங்களிலும் ஆற்றங்கரைகளிலும் மலம் கழிப்பதால் மழை பெய்யும்போது இக்கிருமிகளின் சிஸ்டுகள் குளம் மற்றும் ஆற்றுநீருடன் கலந்துவிடுகின்றன. சாக்கடைநீர் குடிநீருடன் கலந்துவிடும் போதும் இது நிகழும். இந்த அசுத்த நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்தும்போது அமீபா சிஸ்டுகள் குடலுக்குள் புகுந்துகொள்கின்றன. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் அசுத்தமான ஆற்று நீர், குளம், குட்டை தண்ணீருடன் கலந்துவிடும்போது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் பலருக்கும் ஒரே நேரத்தில் சீதபேதி பரவக்கூடிய ஆபத்து உள்ளது.

கிராமங்களில் வசிப்பவர்கள் வயல்களில் மலம் கழிப்பதால் அங்கு விளைகின்ற உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளின்மீது அமீபா சிஸ்டுகள் ஒட்டிக்கொள்கின்றன. பிறகு இந்த உணவுப் பொருட்களை சரியாகக் கழுவாமல் சாப்பிட்டால், காய்களை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டால் இந்த சிஸ்டுகள் அவர்கள் குடலுக்குள் சென்றுவிடும்.

அடுத்து, ஈக்கள், கரப்பான்பூச்சிகள், எலிகள் போன்றவையும் அமீபா சிஸ்டுகளை மனிதர்களுக்குப் பரப்ப முன்வருகின்றன. எவ்வாறெனில், மனித மலத்தின் மீது கால்களைப் பதித்து மலத்தை உண்ணும் ஈக்கள், பின்பு மனிதர் உண்ணும் உணவின் மீது அமர்ந்து உணவைச் சாப்பிடும் போது அந்த உணவுக்கு அமீபா சிஸ்டுகளை தானம் செய்துவிடும். அந்த அசுத்த உணவை மக்கள் சாப்பிடும்போது அந்த சிஸ்டுகளும் குடலுக்குள் புகுந்து கொள்ளும். இவ்வாறு பல வழிகளில் குடலுக்குள் நுழையும் அமீபா சிஸ்டுகள் சீதபேதியை உண்டாக்க2 முதல் 4 வாரங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்த நோய் இன்னொரு முறையிலும் வருகிறது. ஏற்கனவே சீதபேதி வந்து குணமானவரின் குடலில் இந்தக் கிருமிகள் குறைந்தது மூன்று மாதங்கள்வரை வசிக்கும். அப்போது அந்த நபரின் மலத்தில் அவருக்குத் தெரியாமலேயே அவை வெளியேறி, அடுத்தவர்களுக்கு நோயைப் பரப்பும். இந்த நபர்களை ‘நோய்க் கடத்துநர்கள்’ (Carriers) என்கிறார்கள். முக்கியமாக, அசுத்தமான உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர்.

நோய் வரும் முறை

குடலுக்குள் நுழைந்த சிஸ்டுகள் குஞ்சு பொரிக்கும். அதாவது, ஒவ்வொரு சிஸ்டும் 8 அமீபா கிருமிகளை வெளியேற்றும். இந்த நிலையில் இவற்றுக்கு ‘டிரோபாசாய்டுகள்’ (Trophozoites) என்று பெயர். இவை குடலில் கோடிக்கணக்கில் காணப்படும். இவை பெருங்குடலின் மெல்லிய சவ்வுப் பகுதியைத் துளைத்துப் புண்ணாக்கும். அப்போது ரத்தமும் சீதமும் இப்புண்களிலிருந்து கசிந்து மலத்துடன் கலந்து வெளியேறும்.

அறிகுறிகள்

முதல் நாளில் உடல்வலி, அடிவயிற்றுவலி, மிதமான வயிற்றுப்போக்கு, சோர்வு, முதுகுவலி போன்றவை ஆரம்பிக்கும். இரண்டாம் நாளில் மலத்துடன் சீதமும் ரத்தமும் வெளியேறும். மலம் சிறிது சிறிதாகச் சிரமப்பட்டு வெளியேறும். நாளொன்றுக்குக் குறைந்தது பத்துமுறை மலம் கழிக்கவேண்டி வரும். இதற்குத் ‘தீவிர சீதபேதி’ (Acute dysentery) என்று பெயர்.

இந்த நோய்க்கு முறைப்படி சிகிச்சை செய்யத் தவறினாலோ, சிகிச்சையைப் பாதியில் நிறுத்தினாலோ அமீபா கிருமிகள் பெருங்குடலில் நிலையாக வாழத் தொடங்கிவிடும். பிறகு அவ்வப்போது நோயின் குணங்களைத் தோற்றுவிக்கும். இதற்கு ‘நாட்பட்ட சீதபேதி’ (Chronic dysentery) என்று பெயர். இவர்களுக்கு எத்தனைமுறை மலம் கழித்தாலும் இன்னும் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். சாப்பிட்ட உடனே மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றும்.

பரிசோதனைகள் என்னென்ன?

மலப்பரிசோதனை மூலம் அமீபா சிஸ்டுகளை நேரடியாகப் பார்த்து நோயை உறுதி செய்வது பொதுவான வழக்கம். ‘கொலோனோஸ்கோப்பி’ (Colonoscopy) மூலம் பெருங்குடலை நேரடியாகப் பார்த்தோமானால் அங்கு ‘குடுவை’ போன்ற புண்கள் இருப்பது தெரியும். இதை வைத்தும் நோயை உறுதி செய்ய முடியும். ‘எலிசா’ (ELISA) போன்ற சில ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும்.

என்ன சிகிச்சை?

சீதபேதியை குணப்படுத்த மெட்ரனிடசோல், டினிடசோல், புரோமைடு, ஆர்நிடசோல், செக்நிடசோல் என்று பல மருந்துகள் உள்ளன. நோயாளிக்குத் தேவையானதை மருத்துவர் தேர்ந்தெடுத்துக் கொடுப்பார். பெருங்குடலில் குடிகொண்டிருக்கும் சிஸ்டுகள் முழுமையாக ஒழியும் வரை சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் சீதபேதி மீண்டும் தொல்லை தராது. சிலருக்கு உடலில் திரவநிலை மிகவும் குறைந்து உடல் உலர்ந்துவிட்டால் சலைன் போன்ற திரவங்களைச் செலுத்த வேண்டியது வரும். இதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டும்.

சிக்கல்கள்

சிலருக்கு அமீபா கிருமிகள் ரத்த ஓட்டத்தில் கலந்து கல்லீரலுக்குச் சென்று அங்கு சீழ் வைக்கும். இதனால் கல்லீரல் வீங்கும். குளிர் காய்ச்சல் வரும். வலது பக்க மேல்வயிற்றில் வலி ஏற்படும். வாந்திவரும். இதற்குக் ‘கல்லீரல் சீதபேதி சீழ்க்கட்டி’ (Amoebic liver abscess) என்று பெயர். வெகு அரிதாக ஒரு சிலருக்கு நுரையீரல், மண்ணீரல், மூளை, தோல் போன்ற உறுப்புகளிலும் இவ்வகை சீழ்க்கட்டிகளைக் காணலாம்.

இந்தச் சிக்கல்களைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பரிசோதிக்க வேண்டும். மற்ற உறுப்புகளுக்கு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். நோய் உறுதியானால், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கண்காணிப்பில் கல்லீரலில் உள்ள சீழை அல்லது இதனால் பாதிக்கப்பட்ட மற்ற உறுப்பில் உள்ள சீழை உறிஞ்சி எடுப்பது இதன் பிரதான சிகிச்சை. அத்துடன் சீதபேதிக்கு உண்டான மருத்துவ சிகிச்சையும் தரப்படும்.

2. ஜியார்டியா சீதபேதி

‘ஜியார்டியா லேம்பிலியா’ (Giardia Lamblia) என்ற கிருமிகளால் இவ்வகை சீதபேதி வருகிறது. அமீபா கிருமிகளைப் போலவே இதன் வாழ்க்கை சுழற்சியும் அமைந்துள்ளது. மனித உடலில் நோயை உண்டாக்கும் விதமும் அமீபாவையே ஒத்துள்ளது. இந்த நோயின் அறிகுறிகளில் மட்டும் சில மாறுதல்கள் உள்ளன. அதாவது, மலம் சீதம் கலந்த மஞ்சள் நிறத்தில் செல்லும். கொழுப்புக் கொழுப்பாகப் போகும். பால்கட்டி போன்று திரள் திரளாகவும் நுரைநுரையாகவும் போவது உண்டு. மலத்தில் ரத்தம் போவது அரிது. மலப் பரிசோதனை மூலம் இக்கிருமிகளின் சிஸ்டுகளை பார்த்து நோயை உறுதி செய்யலாம். அமீபா சீதபேதிக்குத் தரப்படும் சிகிச்சை இதற்கும் பொருந்தும்.

3. பாக்டீரியா சீதபேதி

‘ஷிகெல்லா’ (Shigella) எனும் பாக்டீரியா கிருமிகள் காரணமாக இவ்வகை சீதபேதி ஏற்படுகிறது. இக்கிருமிகள் தொற்றியுள்ள உணவு மற்றும் குடிநீர் மூலம் இந்த நோய் மனிதருக்குப் பரவுகிறது. பெருங்குடலுக்குள் இக்கிருமிகள் நுழைந்த 48 மணி நேரத்தில் நோய் தொடங்கி விடும். கடுமையான காய்ச்சலுடன் ரத்தம், சீதம், சவ்வு போன்றவையும் மலத்துடன் வெளியேறுவது இதன் முக்கிய அறிகுறிகள். ஒரு நாளில் 50 தடவை முதல் 100 தடவை வரை மலம் சிறிது சிறிதாக வெளியேறும். ஒவ்வொருமுறை மலம் கழிக்கும்போதும் வயிறு கடுமையாக வலிக்கும். சிலருக்கு மலம் பச்சை நிறத்தில் போகும். வாந்தி வரலாம்.

சிகிச்சை என்ன?

இந்த நோயைக் குணப்படுத்த கோடிரைமாக்சசோல், சிப்ரோபிளாக்சசின், ஓபிளாக்சசின் போன்ற மருந்துகள் உதவுகின்றன. இவற்றில் ஒன்றை மருத்துவர் ஆலோ சனைப்படி குறைந்தது பத்து நாட்களுக்குச் சாப்பிட வேண்டும் அப்போது தான் இக்கிருமிகள் முழுவதுமாக ஒழியும். நோய் திரும்பாது.

தடுப்பது எப்படி?

குடிநீர் சுத்தம் தண்ணீரில் இந்தக் கிருமிகள் பல மாதங்களுக்கு உயிருடன் வாழக்கூடியவை. எனவே, சுத்தமான குடிநீரைக் குடிக்க வேண்டியது முக்கியம். நாம் குடிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரைக் கொதிக்க வைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும். வீட்டிலிருக்கும் தண்ணீர்த் தொட்டியில் சரியான அளவில் அயோடின் கலந்து பயன்படுத்த வேண்டும். இந்தக் கிருமிகள் குளோரினுக்கு கட்டுப்படாது என்பதால் இந்த மாற்று ஏற்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்ட, பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டியது அரசின் கடமை.

உணவு சுத்தம்

ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை வெகு சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். சுத்தமான பாத்திரங்களில் சுகாதாரமான முறையில் உணவை சமைக்க வேண்டும். காய்கறி மற்றும் பழங்களைத் தண்ணீரில் கழுவுவதைவிட வினிகரில் கழுவினால் இந்தக் கிருமிகள் ஒழியும். நன்கு வேகவைத்த உணவை உண்ண வேண்டும். சமைத்த உணவுகளை ஈக்கள் மொய்க்காமலும் எறும்புகள் தொற்றாமலும், பல்லி, பூச்சிகள் போன்றவை கலந்துவிடாமலும் பாதுகாப்பாக மூடிவைக்க வேண்டும். உணவை சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

கழிப்பிட சுத்தம்

தெருக்களிலும் பொதுமக்கள் நடமாடும் எந்த இடத்திலும் மலம் கழிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். குளத்தங்கரை, ஆற்றங்கரை, நதிக்கரை ஓரங்களில் மலம் கழிக்கக் கூடாது. குடிநீராகப் பயன்படுத்துவதற்குத் தண்ணீர் எடுக்கப்படுகிற கிணற்றுக்கு அருகில் மலம் கழிக்கக் கூடாது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை இருக்க வேண்டியது மிக அவசியம். அதைச் சுத்தமாகப் பேண வேண்டியது அதைவிட முக்கியம். மேலும் ஒவ்வொரு முறையும் நாம் மலம் கழித்ததும் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

தொற்று அகற்றுதல்

வீட்டில் ஒருவருக்கு சீதபேதி வந்துவிட்டால், அவரை தனிமைப் படுத்த வேண்டும். அல்லது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நோயாளியின் மலம், வாந்தி, உடைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பாத்திரங்கள், படுக்கை விரிப்புகள் போன்ற அனைத்தையும் சலவைத்தூள் கொண்டு தொற்று அகற்றுதல் மிக முக்கியமான தடுப்புமுறையாகும்.

சுற்றுப்புற சுத்தம்

வீட்டையும், வீட்டைச்சுற்றியும், தெருக்களிலும் தண்ணீர் தேங்க அனுமதிக்கக் கூடாது; சாக்கடை மற்றும் கழிவுகள் எந்த வகையிலும் சேரக்கூடாது. இவ்வாறு சுகாதாரத்தை கடைப்பிடித்து தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டால் ஈக்கள் மொய்ப்பதைத் தடுத்துவிடலாம். இதன் மூலம் சீதபேதி வருவதையும் தடுக்கலாம்.

Loading...

728

2