new BB1

தடுமாற்றத்தைத் தவிர்க்கும் வழிகள்!

Loading...

ht3653முதுமை… மீண்டும் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு நிலை. அறுபது கடந்த முதியவர்கள் தங்கள் சிறுசிறு தேவைகள் உள்பட, இயற்கை உபாதைகளுக்கு செல்வதற்குக்கூட, துணைநாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், முதுமையில் ஏற்படும் தடுமாற்றம் வயதானவர்களை உள்காயம், எலும்புமுறிவு, பயம் எனப் பலவிதமான பிரச்னைகளுக்கு ஆளாக்குகிறது. இதிலிருந்து மீள்வது எப்படி? அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் போன்றவை குறித்து முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் என்.லஷ்மிபதி ரமேஷ் பேசுகிறார்…

அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் வீட்டில், வெளியிடங்களில் கீழே தடுமாறி விழுதல் என்பது அடிக்கடி நடக்கக்கூடிய விஷயம். அதில் அலட்சியம் கூடாது. வயதானவர்கள் எதிர்பாராத வேளைகளில் தடுமாறி கீழே விழுவதற்கு உடல் தொடர்பான பாதிப்புகள், சுற்றுச்சூழல் ஆகியவை முக்கிய காரணங்கள். நோய்கள் காரணமாகவும், மாத்திரைகள் காரணமாகவும், குறிப்பாக, தூக்கமாத்திரைகள் சாப்பிடுவதாலும் முதியவர்கள் தடுமாறி கீழே விழ நேரிடலாம்.

6 மாதங்களுக்குள் முதியவர்கள் யாராவதுஇரண்டு தடவை தவறி கீழே விழும் பட்சத்தில், முதியோர் நலன் சிறப்பு மருத்துவர் அல்லது குடும்ப மருத்துவரிடம் உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். அவரது பார்வைத்திறன், கால் உணர்ச்சி, கேட்கும் திறன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும். அதோடு, வீட்டின் சூழலைக் கவனித்து தேவையான மாற்றங்களை உடனடியாக செய்ய வேண்டும். ரப்பர் ஷீட்டால் ஆன மிதியடிகளுக்கு மேலே கண்டிப்பாக துணி போட்டு வைக்க வேண்டும்.

இதனால் பாதங்களுக்குத் தேவையான அழுத்தம் கிடைக்கும். சோஃபா, மேஜை, நாற்காலி போன்ற பொருட்களை முதியவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஓரங்களில் வைக்க வேண்டும். வயதானவர்கள் பிளாஸ்டிக் சேர்களில் உட்காரும்போதோ, எழுந்திருக்கும் போதோ நிலை தடுமாறி கீழே விழ நேரிடலாம் என்பதால், பிளாஸ்டிக் சேர்களை தவிர்ப்பது நல்லது. குளியலறை, கழிவறை போன்ற இடங்களில் வயதானவர்கள் பிடித்துக்கொண்டு எளிதாக உட்கார்ந்து எழுந்திருக்கபாதுகாப்புடன் கூடிய கைப்பிடிகளைக் கண்டிப்பாகப் பொருத்த வேண்டும்.

முதியவர்கள் மருத்துவர் ஆலோசனை இன்றி எதற்கெடுத்தாலும் மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை குடும்ப மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான அளவுள்ள காலணிகளை அணிய வேண்டும். நடப்பதற்கு உதவும் வாக்கர் போன்ற உபகரணங்கள் சரியாக உள்ளனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். பார்வைக் குறைபாடு இருந்தால் கண் மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கண்ணாடி அணிய வேண்டும். வயதானவர்கள் தடுமாறி கீழே விழுவதால், அடிபடுதல், எலும்பு முறிவு, நடக்க பயப்படுதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படும்.

தலையில் அடிபட்டால், அதன் பாதிப்பு ஓரிரு நாட்கள் கழித்துதான் தெரியும். தலையில் அடிபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், அவரை உடனடியாக குடும்ப மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். தடுமாற்றத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து கால்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். முதலில் ‘உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லை’ என்று பாதிக்கப்பட்டவருக்கு மனதளவில் தைரியம் கொடுக்க வேண்டும். கீழே விழுவதால் உடலில் வலி ஏற்பட்டு அவர்களால் நடக்க முடியாது.

அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கும். எலும்பில் அடிபட்டு இருந்தால் உடனே எக்ஸ்-ரே எடுக்க வேண்டும். பின்னர், அடியின் தன்மையைப் பொறுத்து சிகிச்சை அளிக்க வேண்டும். முதியவர்களைக் கண்காணிப்பதில் வீட்டிலுள்ள உதவியாளர், உறவினர்கள் எந்த நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதையும் மீறி வயதானவர்கள் தடுமாறி கீழே விழுந்துவிட்டால், தாமதிக்காமல் அவரை உடனடியாக மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

Loading...

728

2