new BB1

தோல் நோய்களுக்கான களிம்புகளும் கண் நோய்களுக்கான சொட்டு மருந்துகளும்!

ht3502தோல் என்கிற மிகப்பெரிய உறுப்பே, நமக்கான பாதுகாப்பு அரணும் கூட. 16 முதல் 21 சதுர அடி பரப்பளவும், 2 முதல் 3 மி.மீ. பருமனும் உடையது. ஒரு சதுர இஞ்ச்சுக்கு 650 வியர்வைச் சுரப்பிகளையும், 20 சிறிய ரத்தக்குழாய்களையும், 60 ஆயிரம் கருப்பு நிறமிகளையும், ஆயிரம் நரம்பு நுனிகளையும் கொண்டது. Epidermis, Dermis, Subcutis or Hypodermis என்ற 3 அடுக்குகளாக பிரிக்கப்படுகிறது. இதற்குக் கீழ் கொழுப்பு படரும். இதற்குள் ரத்தக்குழாய்களும், இன்னும் கீழே தசைகளும் தசை நார்களும் எலும்புகளும், இதையடுத்து உறுப்புகளும் என உடலில் அடுக்கடுக்காக அமைந்துள்ளன. அடிப்படையில் எல்லா தசைகளுக்கும் தோலுக்கும் தனித்தனி ரத்தக்குழாய்கள் உள்ளன.

தோலில் வியர்வைச் சுரப்பிகள், எண்ணெய் சுரப்பிகள், ரோமக் கணுக்கள் போன்றவையும் உள்ளன. வியர்வை வெளியேறுவதன் மூலம் வெளிப்புற தட்பவெப்பநிலைக்கு உடலின் மேற்பகுதியை ஈரமாக்கி,வெப்பத்தைச் சமப்படுத்தும். அதோடு, சிறுநீரகத்தைப் போன்று வியர்வையின் மூலமும் தேவையற்ற உப்புகளும் தாதுக்களும் வெளியேறும். இதிலுள்ள எண்ணெய் சுரப்பிகள் தோலை தேய்மானத்திலிருந்து பாதுகாத்து, நல்ல தோற்றத்தை அளிக்கின்றன.

தொடு உணர்ச்சி என்பதும் மிக முக்கியமானது. வெப்பம், குளிர்ச்சி, அதிர்வு, காயம் போன்ற உணர்வு களை உடலுக்குக் கடத்தும், உடலை பாதுகாக்கும் வளையம் தோலைச் சார்ந்ததே. இதன் மூலம் காயங்களிலிருந்து உடலை பாதுகாப் பதுடன் தோலிலிருந்து தேவைக்கு அதிக நீர் வெளியேறாமலும் பார்த்துக் கொள்கிறது. உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் மிக முரடான தோல் இருப்பதால் நடக்கவும், பொருட்களைப் பற்றிக் கொள்ளவும், உடல் உழைப்பதும் உயிர் வாழவுமாக மனிதனுக்குப் பயன்படுகிறது.

தோலின் மூலம் உடலுக்கு உள்ளே எல்லா மூலக்கூறுகளும் உறிஞ்சும் சக்தி வாய்ந்தது. தெரிந்தோ, தெரியாமலோ தோலின் மீது படும் நீர், காற்று, நீரில் – காற்றில் கரைந்த திரவப்பொருட்கள், திடப்பொருட்களை தோல் உறிஞ்சும் சக்தி இருப்பதை ஆதிமனிதன் தெரிந்து வைத்திருந்தான். புளிப் பத்து, இஞ்சிப் பத்து, எலுமிச்சைப்பழம் செருகுவது, கரும்புள்ளி, செம்புள்ளி குத்துவது, மஞ்சள் துணி, கருப்புக் கயிறு, காப்புக்கட்டுவது… அல்லது தைலங்கள், ஆயின்மென்ட் தடவுவதும் தொடரும் பழக்கமே.

Drugs 1940 Cosmetic Act மூலம் நவீன மருந்துகள் அனைத்துமே நவீன மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதியிலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள், விளம்பரங்களின் மூலம் களிம்புகளையும் ஜெல்களையும் இன்ஹேலர்களையும் விற்று வருகின்றனர். இதனால் ஆரம்பநிலையில் மருத்துவரை அணுகாமல் நோய் முற்றிய பின்பே மக்கள் மருத்துவம் தேடி வருகின்றனர். முக்கால்வாசி மருந்துகள், தடவும் இடத்தில் எரிச்சலையோ, வலியையோ ஏற்படுத்தி உள்ளே ஏற்படும் வேதனையை தெரியாமல் செய்து வருகின்றன. சில வகை மருந்துகள் தடவும் இடத்தில் மரத்துப் போகச் செய்கின்றன.

உண்மையில் மேலே தடவும் மருந்துகள் சரியானவையாக இருந்து, ஆரம்பகட்டத்திலேயே பயன்படுத்தினால் மருந்துகள்
உட்கொள்ளுவதை தவிர்க்க முடியும். இல்லை என்றால் சாதாரண கட்டியே அறுவை சிகிச்சை நோயாக மாற்றும்.
க்ரீம்கள் 50% நீர், 50% எண்ணெய் மருந்து உடையவை. அதனால், எளிதாகத் தோலில் ஊடுருவ மட்டுமின்றி, கழுவவும் முடியும். லோஷன் எனப்படுபவை மிகவும் லேசான க்ரீம்கள். நீர்ச்சத்து மிக அதிகம் என்பதால் திரவமாகவே இருக்கும். ஆயின்மென்ட்களில் 80% எண்ணெய், 20% நீர். தடவும் இடத்தில் எண்ணெயாக இருக்கும். கழுவுவது கடினம். ஜெல்கள் ஆல்கஹாலுடன் இருப்பதால் உடனே மேற்பரப்பு காய்ந்து விடும்.

மருத்துவர்கள் ஆன்டிபயாடிக் (Ofloxacin Ciprofloxacin, Garamycin, Erythromycin) உடனான மருந்துகளை சொட்டு மருந்துகளாக கண்ணுக்கோ, காதுக்கோ தருகிறார்கள். களிம்பு களாக மேலே தடவ தருகிறார்கள். கண்ணுக்கு சொட்டு மருந்து கிருமிநாசினிகளாக வலி மருந்துகளாக, அலர்ஜி, கண் அழுத்த நோய் மருந்துகளாக, கண்ணுக்கு ஈரப்பசைக்காக (லூப்ரிகேன்ட்ஸ்) என ஏற்ற மருந்துகளை தருவார்கள். கண் சொட்டு மருந்துகள் பொதுவாக கண் கருவிழி, விழித்திரை, கண் நோய்களுக்கு மட்டும் மருந்தாக உதவி செய்யும். கண்ணின் இமைகள், சரும நோய்களுக்கு நாமக்கட்டி போடும் முன் மருத்துவரை அணுகவும்.

காதுச் சொட்டு மருந்துகள், காதின் ஜவ்வு, ஓட்டையுடன் இருந்தால் உபயோகிக்கவே கூடாது. வெளிக்காதில் உள்ள பிரச்னைகளுக்கு மட்டும் – காளான் நோய்கள், வெளிக்காது அடைப்பைக் குறைக்க, காது வலியைக் குறைக்க என மருத்துவரைச் சந்தித்த பின்பு விட்டுக் கொள்ளலாம். காதில் காய்ச்சிய, ஆற வைத்த எண்ணெய் ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். எதையாவது ஊற்றித்தான் ஆக வேண்டுமென்றால் சுத்தமான தண்ணீரை மட்டும் ஊற்றவும்.

வலி மருந்துகள் (Brufen, Diolofence) மற்றும் தோலில் ஊடுருவ ஏதுவான களிம்பாக, ஸ்பிரேவாக தருகிறார்கள். இவற்றை வலிக்கும் இடங்களில் சூடான ஒத்தடம் (அந்த இடங்களில் ரத்தம் அதிகமாக ஊடுருவும்) கொடுத்தால், உபயோகித்தால் வலி உடனே குறையும். ஸ்டீராய்டு (Steroid) மருந்துகளும் (Tretinoin, Clobetasol, Mometasone, Hydroquinone) அரிப்பைக் குறைக்கும் மருந்துகளாக குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தருகிறார்கள்.

காளான் நோய்களுக்கான காளான் கிருமிநாசினிகள் (Fluconazole, Ketoconazole, Terbinafine) ஆரம்ப கட்டத்தில் அரிப்பைக் குறைக்கும். மருந்துகளுடனும், பிறகு வெறும் காளான் கிருமிநாசினிகளும் தருவார்கள். மக்களோ, விளம்பரங் களைப் பார்த்துவிட்டு வெறும் அரிப்பைக் குறைக்கும் மருந்துகளை மட்டும் தடவிக்கொண்டு உடலில் எல்லாப் பகுதிகளிலும் காளான் நோய் பரவிய பிறகு மருத்துவரை பார்க்கிறார்கள்.

காளான் கிருமிநாசினிகள் பவுடராகவும் சோப்பாகவும் தரப்படுகின்றன. நோயின் ஆரம்பகட்டத்தில், தோலின் மேல் வரும் கட்டிகளுக்கு 3 வேளை, 4 வேளை கிருமிநாசினி மருந்துகளை தொடர்ந்து போட்டால், அது சீழ் கட்டிகளாக அறுவை சிகிச்சை நோயாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.

கண் கட்டிகளுக்கு கண்ணின் தோலில் வருவதால் சொட்டு மருந்து விட்டுக் கொள்ளாமல் கிருமிநாசினி கண் களிம்புகளோ, தோல் களிம்புகளோ தடவுவது நல்லது. உடல், தசைவலி, மூட்டுவலிகளுக்கு களிம்புகளை மருத்துவர் எழுதித் தரும் மருந்துகளுடன், களிம்புகளுடன் அந்தந்த உறுப்புகளுக்குரிய உடற் பயிற்சிகளும் செய்வது நல்லது. பிசியோ தெரபிஸ்ட் அல்லது யோகா தெரபிஸ்ட் மூலமும் கற்றுக் கொள்ளலாம். விளம்பரத்தின் மூலம் வரும் களிம்புகள், இன்ஹேலர்கள் உங்களை அதற்கு அடிமையாக்கி (Addiction), அது இல்லாமல் முடியாது என்ற நிலைக்கு தள்ளுமே தவிர, உடல்நலத்துக்கு எந்தப் பலனும் கிடையாது.

கோடைகாலத்தில் ஏற்படும் கட்டிகளுக்கு மாம்பழக்கட்டி, சூட்டுக்கட்டி, திருஷ்டிக்கட்டி என்று பெயரிட்டு கை வைத்தியம் பார்த்துக் கொண்டிராமல், உடனடியாக மருத்துவரை அணுகினால் அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்துகளாலே குணமாகும். கட்டியுடன் இருக்கும் குழந்தைகளையாவது உடனடியாக காண்பியுங்கள்.

728