new BB1

பால் படுத்தும் பாடு!

Loading...

ht3602பிறந்தவுடன் நமது முதல் உணவு பால். வளரும் குழந்தைகளுக்காக பார்த்துப் பார்த்து அம்மாக்கள் கொடுக்கும் முக்கிய உணவும் பால்தான். பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிரும் மோரும் தமிழர் உணவுமுறையில் இருந்து பிரிக்க முடியாத அளவு ஒன்றிப்போனவை. பால் என்பது கால்சியம் நிறைந்த உணவு என்பதால், எலும்பு வளர்ச்சிக்கு அவசியமானது. இவ்வளவு நல்ல விஷயங்கள் அடங்கிய பால், சிலருக்கு தீமை அளிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்… சிலருக்கு பால் மற்றும் பால் பொருட்களால் பாதிப்புகள் உண்டாகலாம்! ‘லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ எனப்படுகிற இந்தப் பிரச்னைக்கான பின்னணி குறித்து விளக்குகிறார் பொது மருத்துவர் அனிதா சூர்யநாராயணன்.

‘‘லாக்டோஸ் என்பது பால் மற்றும் பால் பொருட்களில் (தயிர், சீஸ், பனீர், கேக், ஐஸ்க்ரீம்) இருக்கும் ஒரு வகை இயற்கை சர்க்கரை. சிறுகுடலின் சுவர்களில் லாக்டேஸ் என்ற என்சைம் சுரக்கும். இந்த லாக்டேஸ் என்சைம், பால் பொருட்களில் உள்ள லாக்டோஸை உடைக்கவும் ஜீரணிக்கச் செய்யவும் அவசியம். சிறுகுடலில் லாக்டேஸ் குறைவாக சுரக்கும்போதோ, சுரக்காமல் போகும்போதோ, பால் பொருட்களை உட்கொண்டால், அதிலுள்ள லாக்டோஸ் (Lactose) பெருங்குடல் வழியாக கடக்கும் போது சரியாக ஜீரணம் ஆகாமல் வயிற்றில் வலி, வயிறு உப்புசம், வாயுக்கோளாறு, வயிற்றுப்பொருமல், வாந்தி, பேதி போன்றவை ஏற்படக்கூடும். பால் பொருட்கள் எது சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாது.

இதைத்தான் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் (Lactose intolerance) என்கிறோம். இது Lactase deficiency என்றும் அழைக்கப்படுகிறது. லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பெரியவர்களுக்கு ஏற்படும் பிரச்னை. இவர்களுக்கு இந்தப் பொருட்களை சாப்பிட பிடிக்கும். சாப்பிட்டாலோ ஆகாது. லாக்டோஸ் இன்டாலரன்ஸின் அறிகுறிகள் டீன் ஏஜில் அல்லது வளர்ந்த பிறகு வெளிப்பட ஆரம்பிக்கும். இந்தப் பிரச்னைக்கு மரபணு ஒரு காரணமாக இருக்கலாம்.

வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். வயிற்றில் ஏற்படும் சிறு பிரச்னை காலத்துக்கும் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னையை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. அதாவது, இரைப்பை குடலழற்சி (Stomach flu) ஏற்பட்டால் சில நேரங்களில் சிறுகுடல் லாக்டேஸ் என்சைம் சுரப்பதை சுத்தமாக நிறுத்திவிடும். இதனால் இப்பிரச்னை ஏற்படும். பொதுவாக உடலில் ஏதேனும் பிரச்னை என்றால் சில நேரம் ஆன்டிபயாட்டிக் கொடுப்பார்கள். அந்த ஆன்டிபயாட்டிக், நோயுள்ள செல்களோடு, சில நேரங்களில் நல்ல செல்களையும் பாதித்துவிடும்.

அது போல்தான் இரைப்பை குடலழற்சி ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளும் போது, அது சிறுகுடலின் சுவர்களில் பாதிப்பு ஏற்படுத்தி லாக்ேடஸ் சுரப்பதைப் பாதிக்கிறது. Cystic fibrosis என்ற நோய் ஏற்பட்டாலும் சிறுகுடல் இந்த என்சைம் சுரப்பதை நிறுத்திவிடும். சிறுகுடலின் ஒரு பகுதியை நீக்கும் ஒரு அறுவை சிகிச்சை காரணமாகவும் லாக்டேஸ் என்சைம் சுரக்காமல் போகும். இது தற்காலிகமாகவும், சில நேரங்களில் நிரந்தரமாகவும் ஏற்படலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை அரிதாகவே ஏற்படும். பிறக்கும் போதே இந்தப் பிரச்னை உள்ளவர்களால் காலம் முழுவதும் லாக்டோஸ் உள்ள எந்தப் பொருளையும் சாப்பிடமுடியாது. குறைமாத பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு தற்காலிகமாக லாக்டோஸ் இன்டாலரன்ஸ் ஏற்படும். காரணம், அவர்கள் உடம்பில் லாக்டேஸ் என்சைமை உருவாக்கும் தன்மை அப்போது இல்லாமல் இருப்பதே. சில மாதங்கள் கழித்து லாக்டேஸ் என்சைம் சரியாக சுரக்க ஆரம்பித்தவுடன் பிரச்னை தீர்ந்து விடும்.

இந்தப் பிரச்னை உடையவர்களின் பெரிய சவால், பால் பொருட்களைத் தவிர்த்து உடலுக்குத் தேவையான கால்சியத்தை எப்படி பெறுவது என்பதுதான். ஏனெனில், பால் மற்றும் பால் பொருட்களில் உள்ள கால்சியம் சத்து பொதுவாக எல்லாருக்கும் அவசியம். வளரும் பிள்ளைகள், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ரொம்பவே அவசியம்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் உள்ளவர்கள் சோயா பால், சோயா சீஸ் மற்றும் சோயாவால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடலாம். லைஃப் கல்சர்டு யோகர்ட் (தயிர்) சாப்பிடலாம். யோகர்ட் சீக்கிரம் ஜீரணமாகும்.

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் அதிக அளவு இருப்பது நல்லது. வேதியியல் மாற்றங்களுடன் தயாராகும் போது நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிந்துவிடவோ அல்லது குறையவோ வாய்ப்புண்டு. அதனால் யோகர்ட் வாங்கும் போது லைவ் அண்ட் ஆக்டிவ் கல்சர் (Live – Active culture) என்ற சீல் இருக்கிறதா என்று கவனித்து வாங்குவது நல்லது.

கால்சியம் சத்துள்ள கேரட், பிரக்கோலி, எள், ஓட்ஸ், பசலைக்கீரை, பாதாம், ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருக்கும் சிலரால் ஓரளவு பால் மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்ள முடியும். காரணம், அவர்களுக்கு இந்த என்சைம் லேசாக சுரப்பதுதான். லாக்டோஸ் இன்டாலரன்ஸின் விளைவுகள் கொஞ்சமாகவும் இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். அது நம் உடல் எந்த அளவு லாக்டேஸை சுரக்கிறது என்பதைப் பொறுத்தது. லாக்டோஸ் இன்டாலரன்ஸின் அறிகுறிகள் பால் பொருட்களை சாப்பிட்ட 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரத்துக்குள் வெளிப்பட்டுவிடும்.

ஒவ்வொரு முறை பால் பொருட்களை சாப்பிடும் போதும் வலி, உப்புசம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை பார்க்க வேண்டும். அது லாக்டோஸ் இன்டாலரன்ஸ் பிரச்னையால் ஏற்படுகிறதா அல்லது உடலில் வேறு ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். லாக்டோஸ் இன்டாலரன்ஸ்தான் காரணம் என்பது உறுதியானால், ஒவ்வாமையுள்ள பால் பொருட்களை தவிர்ப்பதே ஒரே சிறந்த வழி.

இவை தவிர்த்து வேறு ஒரு காரணத்தினாலும் பால் சிலருக்கு ஆகாமல் போகலாம். லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்பது வேறு. பால் அலர்ஜி வேறு. லாக்டோஸ் இன்டாலரன்ஸில் பால் பொருட்களை ஜீரணிக்க முடியாது, அதனால் சாப்பிட முடியாது. பால்
அலர்ஜியில் பால் பொருட்கள் சாப்பிட்டால் அலர்ஜியாகும். அதிலுள்ள புரோட்டின் அதற்கு முக்கிய காரணம். இது ஒரு வகை உணவு ஒவ்வாமை.

இதிலுள்ள புரதம் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு (Immune system) எதிராக கூடுதல் விளைவை (Over reaction) ஏற்படுத்தும். பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிட்ட உடன் அரிப்பு, தடிப்பு, சிவந்து போதல், தும்மல், மூக்கொழுகுதல், வாந்தி, பேதி போன்ற பிரச்னைகளோடு பெரிய பிரச்னையான வீசிங் (மூச்சு விடுவதில்சிரமம்) போன்றவையும் ஏற்படலாம். பால் அலர்ஜியில் நேரடி பால் பொருட்களை தவிர்த்து தயிர், மோர், சீஸ் போன்றவை சாப்பிடலாம்.

நேரடி பால் பொருட்கள் என்றால் மில்க்ஷேக், காபி, டீ போன்று பாலை பயன்படுத்தி நேரடியாக செய்பவை. இப்படிப்பட்டவர்கள் இந்தப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இந்தப் பிரச்னையை சரிசெய்ய முடியாது. இதனால்தான் ஏற்படுகிறதா என்று அலர்ஜி டெஸ்ட் செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அலர்ஜி ஏற்படும் போது ஆன்டி அலர்ஜிக் மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். அதற்குப் பதில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடாமல் இருப்பது எவ்வளவோ சிறந்தது. பிரச்னை அதிகமானால் ஸ்டீராய்டு எடுக்க வேண்டி இருக்கும். அது வேறு சில பிரச்னைகளை கொண்டுவந்துவிடும். அதனால் நாவடக்கம்தான் பெஸ்ட் சாய்ஸ்!

Loading...

728

2