new BB1

பியூட்டி எது சிறந்தது?

ld2526
உங்கள் அபிமான நடிகரோ, நடிகையோ, வேறு துறை பிரபலமோ திரையில் தோன்றி, ஆளுக்கொரு பொருளை உபயோகிக்கச் சொல்லி விளம்பரப் படுத்துகிறார்கள். போன மாதம் வரை உபயோகித்துக் கொண்டிருந்த ஒரு பொருளைப் பற்றிய உங்கள் அபிப்ராயத்தை இன்று வருகிற புதிய விளம்பரம் சடாரென மாற்றி விட்டுப் போகிறது. உடனே இன்னொன்றுக்குத் தாவுகிறீர்கள். அடுத்த மாதம் இன்னொன்று. ஆனால், ஆகச்சிறந்த அழகு சாதனம் இதுதான் என்கிற திருப்தி மட்டும் கிடைத்தபாடாக இல்லை. தினசரி உபயோகிக்கிற சோப் முதல் எண்ணெய், கிரீம், பவுடர் என எல்லாப் பொருட்களிலும் எது சிறந்தது என்கிற குழப்பம் எல்லோருக்கும் உண்டு.

‘‘எது சிறந்தது என்கிற தேடலைத் தவிர்த்து, எது உங்களுக்குப் பிரச்னைகளைத் தராது எனத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு பொருளிலும் அதைக் கண்டுபிடிக்க சில விஷயங்கள் இருக்கும். அதன்படி அன்றாட அழகுசாதனங்களை உபயோகிக்கத் தொடங்கினாலே போதும்’’ என்கிறார் சரும மருத்துவர் விஜயலட்சுமி. ஒவ்வொரு பொருளையும் உபயோகிப்பதற்கு முன் கவனிக்க வேண்டிய, தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய குறிப்புகளைப் பற்றிப் பேசுகிறார் அவர்.

சோப்

முதலில் நம் சருமத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். எண்ணெய் பசை அதிகமுள்ளதா, வறண்டதா, சாதாரணமானதா அல்லது எல்லாம் கலந்த காம்பினேஷன் சருமமா எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்போது வரும் சோப்புகளின் லேபிளிலேயே அவை எந்த வகை சருமத்துக் கானவை என்கிற குறிப்புடன் சேர்ந்து வருகின்றன. அதை வைத்தே தேர்ந் தெடுக்கலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் மாயிச்சரைசிங் சோப்பையும் எண்ணெய்பசை சருமம் உள்ளவர்கள் ஆயில் கன்ட்ரோல் சோப்பையும் உப யோகிக்கலாம். எல்லா சோப்புகளும் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில். பாம் ஆயில் அல்லது மிருகக்கொழுப்பு கலந்தும், சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கொண்டு தயாரிக்கப்படுபவையே. கூடவே வாசனைக்காகவும், ப்ரிசர்வேட்டிவாகவும், கெட்டித் தன்மைக்கும் சில கெமிக்கல்கள் சேர்க்கப்படும்.

சோப் என்பது சருமத்தை சுத்தப்படுத்துகிற வேலையைத்தான் செய்யும். எனவே, எந்த சோப்பை வாங்குவதானாலும், முதலில் அதன் லேபிளில் அதைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட கூட்டுப் பொருட்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என சரிபார்க்க வேண்டும். அப்படிக் குறிப்பிடாத சோப்பை வாங்க வேண்டாம். சோப் மாதிரியான அடிப்படையாக சுத்தம் செய்கிற பொருட்களைப் பொறுத்த வரை, ‘இதுதான் சிறந்தது, இது சிறந்ததல்ல’ எனத் தரம் பிரித்துச் சொல்ல முடியாது. பல வருடங்களாக உபயோகத்தில் இருக்கிற, பலருக்கும் பிரச்னை தராத சோப் என்கிற அடிப்படையிலேயே எல்லோரும் உபயோகிக் கிறார்கள். அதே நேரம் பலருக்கும் பிரச்னை ஏற்படுத்தவில்லை என்பதாலேயே அது எல்லோருக்கும் உகந்தது என்றும் சொல்ல முடியாது. அரிதாக சிலருக்கு அது அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

ஒரு பொருளை பயன்படுத்திய உடனேயே பலன் தெரியாது. சருமத்தின் மேல் அடுக்கு உதிர்ந்து, அதற்கடுத்துள்ள அடுக்கு மேலே வர 28 நாட்கள் ஆகும். எனவே ஒரு நாள், இரண்டு நாட்கள் உபயோகித்துவிட்டு, உடனே ஒப்புக்கொள்ளவில்லை என்கிற முடிவுக்கு வர முடியாது. குறிப்பிட்ட சில நாட்கள் பயன்படுத்திய பிறகு, சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சிவந்து போவது போன்றவை தோன்றினால், சரும மருத்துவரை அணுகி, சருமத்துக்குப் பொருத்தமான சரியான சோப்பை தெரிந்துகொண்டு உபயோகிக்கலாம். சரும நோய்கள் இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் சோப்பை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

ஷாம்பு

எல்லாவித ஷாம்புவிலும் சோடியம் லாரைல் சல்ஃபேட் என்கிற டிடெர்ஜென்ட்தான் பிரதானப் பொருள். அது தவிர ஸ்டெபிலைசர் எமல்சிஃபையரும் இருக்கும். நம் மக்களைப் பொறுத்த வரை நுரை அதிகம் வருகிற ஷாம்புதான் நல்லது என்றும், மற்றதெல்லாம் தரமற்றவை என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால், அது தவறு. ஷாம்புவின் தரத்துக்கும் அதன் நுரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் மட்டும், அதற்கான பிரத்யேக ஷாம்புவை சரும மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உபயோகிக்கலாம்.

ஷாம்பு மட்டும் உபயோகிப்பதா அல்லது ஷாம்புவும் கண்டிஷனரும் சேர்த்து உபயோகிப்பதா என்கிற குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. ஷாம்பு உபயோகிக்கிற எல்லோரும் கட்டாயம் கண்டிஷனரும் உபயோகிக்க வேண்டும் என சமீபகாலமாக அழகுத்துறை நிபுணர்கள் அறிவுறுத்துவதும் ஒரு காரணம். ஆனால், ஷாம்பு என்பது மண்டைப்பகுதியில் உள்ள எண்ணெய் பசையை எடுக்கிற வேலையைச் செய்கிறது. கண்டிஷனர் என்பது திரும்பவும் செயற்கையாக அந்த எண்ணெய் பசையைக் கொடுக்கிற வேலையைச் செய்கிறது. ஏற்கனவே பொடுகும் பருத்தொல்லையும் இருப்பவர்கள், கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் அவர்களது பிரச்னை மேலும் தீவிரமடையும்.

பவுடர்

வியர்வை, எண்ணெய்ப் பசையை உறிஞ்சும் தன்மை கொண்டவை நாம் உபயோகிக்கும் பவுடர் வகைகள். டால்க், ஸிங்க் ஆக்சைடு, ஸ்டார்ச் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுபவை இவை. சருமத்தின் மேல் தடவும் போது, சருமத்துக்கு இதமான ஒரு உணர்வையும். வெயிலின் நேரடித் தாக்குதலில் இருந்து பாதுகாப்பையும் தருகிறது. கார்ன் ஸ்டார்ச் உள்ள பவுடர்களே மிகச் சிறந்தவை. போட்டோசென்சிட்டிவிட்டி எனப்படுகிற சூரிய ஒளி ஒவ்வாமை உள்ளவர்கள் சந்தனம் மற்றும் மஞ்சள் கலந்த சோப்புகளைத் தவிர்க்க வேண்டும். சிலர் உடலின் அந்தரங்கப் பகுதிகளுக்குக் கூட பவுடர் உபயோகிப்பார்கள். முகத்துக்கு உபயோகிக்கிற பவுடரை அந்தரங்கப் பகுதிகளுக்கு உபயோகிக்கக் கூடாது. அந்தப் பகுதிகளுக்கென்றே பிரத்யேக பவுடர்கள் கிடைக்கின்றன. தேவை இருந்தால் மட்டுமே, மருத்துவரின் ஆலோசனை கேட்டு உபயோகிக்கலாம்.

சிவப்பழகு கிரீம்கள்

பள்ளி செல்கிற பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிவப்பழகு கிரீம் உபயோகிப்பதில் ஒரு மோகமும் ஆர்வமும் இருக்கிறது. சரும நிறம் என்பது கருவிலேயே தீர்மானிக்கப்படுகிற ஒன்று. செயற்கையாக அதை மாற்ற நினைப்பதே தவறு. சிவப்பழகுக்கு உத்தரவாதம் தருவதாக சொல்லப்படுகிற பல கிரீம்களிலும் ஹைட்ரோ குவினோன் மற்றும் காளானில் இருந்து பெறப்படுகிற கோஜிக் அமிலம் போன்றவற்றின் கலப்பிருக்கும். நீண்ட நாள் உபயோகம் மிகவும் ஆபத்தானது. தவிர சரும நிறத்தை மாற்றுகிற வேறு சில கிரீம்களை பலரும், மருந்துக் கடைகளில் மருத்துவரின் சீட்டின்றி தாமாகவே வாங்கி உபயோகிப்பதும் நடக்கிறது. அதுவும் ஆபத்தானது.

மஞ்சள்

மஞ்சள் தேய்த்துக் குளிப்பது நல்லது என்கிறார்கள் அந்தக் காலத்துப் பெண்கள். அதெல்லாம் தேவையில்லை என்கிறார்கள் இந்தத் தலைமுறைப் பெண்கள். எது சரி? தூய்மையான, கலப்படமில்லாத மஞ்சள் நல்லதுதான். அசோடைஸ் எனப்படுகிற ஒருவித கெமிக்கல் சேர்ப்பதால், மஞ்சளுக்கு டார்க் நிறம் கிடைக்கும். அந்த கெமிக்கல், சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நிறைய பேருக்கு மஞ்சள் அலர்ஜி இருப்பதைப் பார்க்கலாம். ஃபோட்டோசென்சிட்டிவிட்டி பிரச்னை உள்ளவர்கள், மஞ்சளைத் தவிர்க்க வேண்டும். மஞ்சளுக்கு வெயிலை கிரகிக்கும் தன்மை உண்டு. எனவே அது சருமத்தைக் கருக்கச் செய்து, சீக்கிரமே முதுமைத் தோற்றத்தைத் தந்து விடும்.

எண்ணெய்

தினசரி தலைக்கு எண்ணெய் தடவுகிறவர்களும் எண்ணெயே கூடாது என்கிறவர்களும் உண்டு. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தினமும் தலைக்கு எண்ணெய் தேவையா என்பதை உங்கள் சருமத்தின் தன்மைதான் முடிவு செய்ய வேண்டும். பொடுகு, பரு உள்ளவர்கள் எண்ணெயைக் குறைவாக உபயோகிக் கலாம். தலையில் எண்ணெய் வைத்ததும் குளித்து விடலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள், தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அப்படியே விடலாம். முடி வளர்வதற்கும் எண்ணெய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. குறிப்பிட்ட எண்ணெயை உபயோகிப்பதால் எல்லாம் உங்களுக்கு கிடுகிடுவென முடி வளர்ந்துவிடாது.

எந்த எண்ணெய் சிறந்தது என்று கேட்டால், சுத்தமான தேங்காய் எண்ணெய்தான் எனச் சொல்லலாம். அதற்கு சில மருத்துவக் குணங்கள் உண்டு. புண்களை ஆற்றவும், ஃபங்கல் தொற்றிலிருந்து காக்கவும் சிறப்பான குணங்கள் கொண்டது. தலைக்கு எண்ணெய் தடவிக் கொண்டு, அதற்கு மேலே தண்ணீர் விட்டுக் குளிக்கிற பழக்கம் சிலருக்கு உண்டு. தொடர்ந்து அப்படிச் செய்வதால், அந்த முடியின் எண்ணெய் பசை பட்டு, கழுத்தின் பின்புறம் மற்றும் முதுகுப் பகுதிகளில் ஒருவித கருமை படியத் தொடங்கும். சிலருக்கு ஜாக்கெட்டின் மேல் பக்க சருமத்தில் இப்படி கருமை படர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்… இதுதான் காரணம்.

ஹேர் டை

பொதுவாக ஹேர் டை உபயோகிப்பதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து விடவேண்டும். டையில் ஒரு சிறு அளவை எடுத்து காதின் பின்புறம் அல்லது முன்கையின் உள்புறம் தடவி 2 மணி நேரம் காத்திருந்து, அது அரிப்பையோ, எரிச்சலையோ, சிவப்பையோ உருவாக்குகிறதா எனப் பார்க்க வேண்டும். சிலவித ஹேர் டை மற்றும் கலர்கள் 48 மணி நேரம் அல்லது 2 வாரங்கள் கழித்துக் கூட அலர்ஜியை உருவாக்கலாம். பிபிடி எனப்படுகிற றிணீக்ஷீணீஜீலீமீஸீஹ்றீமீஸீமீபீவீணீனீவீஸீமீ அல்லது அமோனியா கலப்பில்லாத டையை கண்டுபிடிப்பது அரிது. இந்த இரண்டுமே மிக மிக ஆபத்தான கெமிக்கல்கள். சில வகை டைகளில் ‘அமோனியா ஃப்ரீ’ என விளம்பரப் படுத்தப்படுகிறது.

ஆனால், அதிலும் பிபிடி இருக்கும். பிபிடி ஃப்ரீ என்றால் அமோனியா இருக்கும். இந்த இரண்டும் பெரும்பாலானவர்களுக்கு அலர்ஜியை உண்டாக்கக் கூடியவை. முழுக்க முழுக்க மூலிகைத் தயாரிப்பு என சொல்லிக் கொள்கிற டை வகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஹேர் டை பயன்படுத்தியே தீர வேண்டும் என்கிற நிலையில், சரும மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். பிபிடி மற்றும் அமோனியா கலப்பில்லாத, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத பாதுகாப்பான டை வகைகள் எவை என்பதை அவர்கள் பரிந்துரைப்பார்கள்.

நெயில் பாலீஷ்

நகங்களின் அழகுக்காக போடுகிற நெயில் பாலீஷிலும் கெமிக்கல் கலவை உண்டு. நகங்களைக் கடிப்பதன் மூலம் நெயில் பாலீஷு டன் சேர்ந்து, அந்த கெமிக்கலும் வயிற்றுக்குள் போய் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

சில பொதுவான குறிப்புகள்…

தினமும் காலையில் எழுந்ததும் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவவும்.
பிறகு சோப் உபயோகித்துக் குளித்துவிட்டு, தரமான சன் ஸ்கிரீன் உபயோகிக்கவும். சன் ஸ்கிரீன்
என்பது வெயிலில் வெளியே செல்கிறவர்களுக்கு மட்டுமின்றி, வீட்டினுள் இருப்பவர்களுக்கும் அவசியம்.
வாரம் 2 முதல் 3 முறை தலையை நன்கு அலச வேண்டியது அவசியம்.
இரவில் எக்காரணம் கொண்டும் எந்த மேக்கப்பும் இல்லாமல்தான் உறங்கச் செல்ல வேண்டும்.
கூடியவரையில் முகத்தின் மேல் கை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். கைகளில்தான் அதிகபட்ச கிருமிகள் தங்கியிருக்கும். முகத்தில் கை படுகிற ஒவ்வொரு முறையும் அந்தக் கிருமிகள் முகச் சருமத்துக்கும் பரவும்.

728