new BB1

மச்சம் போல தொடங்குது மங்கு!

Loading...

thld2765எந்த ஒரு பிரச்னையும் ஒரு சின்னப் புள்ளியில் இருந்தே தொடங்குகிறது. அழகு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளும் இப்படித்தான். முதல் புள்ளியை அடையாளம் கண்டு கொண்டு, உடனடியாக சிகிச்சை மேற்கொண்டால் அது பெரிதாகி, பிரச்னையாகாது. நம்மில் பலரோ அந்தப் புள்ளியை அலட்சியம் செய்துவிட்டு, அது விஸ்வரூபம் எடுத்து நிற்கும் போதுதான் இல்லாத தீர்வை நோக்கி ஓடுவோம்.

அழகுத் துறைக்கு சவாலான மங்கு என்பதும் இப்படித்தான். சின்ன மச்சம் போல ஆரம்பிக்கிற இதை அலட்சியம் செய்யும் போது, அது கொஞ்சம் கொஞ்சமாக பரவி, முகத்தையே விகாரமாக்கி, வெளியில் தலைகாட்ட விடாத அளவுக்குச் செய்து விடும். மங்கு உண்டாவதற்கான காரணங்களுடன், அதைப் போக்கும் சிகிச்சை முறைகளையும் பற்றிப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டு மான கீதா அஷோக்.‘‘பிக்மென்ட்டேஷன் அல்லது மெலஸ்மா எனப்படுகிற மங்குப் பிரச்னை, பெரும்பாலும் 30 வயதுக்கு மேலானவர்களையே அதிகம் பாதிக்கிறது. அரிதாக அது 15 வயதிலும் சிலரை பாதிக்கலாம்.

இரும்புச் சத்துக் குறைபாடு, சூரிய ஒளி ஒவ்வாமை, நாள்பட்ட பொடுகு, தைராய்டு, அடிக்கடி பிளீச் செய்வதாலும் சிவப்பழகு க்ரீம்களை உபயோகிப்பதாலும் உண்டாகிற கெமிக்கல் அலர்ஜி, பாரம்பரியம், கர்ப்ப காலம், மெனோபாஸ் என மங்கு உண்டாக ஏராளமான காரணங்கள் உள்ளன. மங்கு என்பது ‘ஜி ஸோன்’ எனப்படுகிற நெற்றி, மூக்கு, வாயைச் சுற்றிய பகுதிகளில் அதிகம் வரலாம். இன்னும் சிலருக்கு கன்னங்களில் வட்ட வட்டமாக வரலாம். தீவிரமானால் முகம் முழுவதுமே கூட கருப்பாக மாறலாம். நடு மூக்கில் வளையம் மாதிரி வருகிற மங்கு, பெரும்பாலும் பரம்பரையாகத் தொடர்வது. இதை சிகிச்சைகளில் சரிப்படுத்துவது சிரமம்.

மற்றபடி மங்குக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வாய்ப்புகள் அதிகம். மங்கானது சருமத்தின் உள் லேயரான டெர்மிஸ் வரை போயிருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தெரியாமல் வெறும் மேலோட்டமாகச் செய்யப்படுகிற சிகிச்சைகள் தற்காலிக நிவாரணம்தான் தரும்…’’

வீட்டில் என்ன செய்யலாம்?

ளதண்ணீர் விடாமல் அரைத்த புதினா சாறு அரை டீஸ்பூன், சிட்டிகை படிகாரத்தூள் இரண்டும் சேர்த்துக் குழைத்து, மங்கு உள்ள இடத்தில் தினமும் தடவி, 5 முதல் 7 நிமிடங்கள் வைத்திருந்து கழுவலாம்.

அதே புதினா சாற்றில் 1 சிட்டிகை பொன் அரிதாரத் தூள் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) சேர்த்துக் கலந்தும் தடவலாம். காட்டு சீரகம் என நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதில் சிறிது தண்ணீர் விட்டு, திக்கான டிகாக்ஷன் தயாரிக்கவும். 10 மி.லி. காட்டு சீரக டிகாக்ஷனுடன், 20 சொட்டு எலுமிச்சைச் சாறும், 20 சொட்டு ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்து, பஞ்சில் தொட்டு, மங்கின் மேல் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் கழுவலாம்.

கொத்தமல்லியைத் தண்ணீர் விடாமல் அரைத்த சாறு 1 டீஸ்பூன், பெர்கமாட் ஆயில் 5 சொட்டு, நட்மெக் ஆயில் 2 சொட்டு – மூன்றையும் கலந்து, பஞ்சில் தொட்டு, மங்கின் மேல் தடவிக் கழுவலாம். அதிமதுரத்தைப் பொடித்து, மோர் கலந்து, அதில் லெமன்கிராஸ் ஆயில் 3 சொட்டு, கொரியண்டர் லீஃப் ஆயில் 3 சொட்டு கலந்தும் தடவலாம். வெண்சங்கை பன்னீர் விட்டு இழைக்கவும். அதிலேயே ஜாதிக்காயையும் வைத்து இழைக்கவும். 3 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குழைத்து மங்கின் மேல் தடவிக் கழுவவும்.

ஆவாரம் இலை பொடியுடன் சம அளவு பால் பவுடர் சேர்த்து, காய்ச்சாத பால் விட்டுக் குழைத்து மங்கின் மேல் தடவிக் காய விட்டுக் கழுவலாம்.கார்போக அரிசியை மாவாக்கி, அத்துடன் கொத்தமல்லி இலைச் சாறு கலந்தும் தடவலாம். பார்லியை வேக வைத்த கெட்டியான கஞ்சியுடன், அரை டீஸ்பூன் கேரட் சாறும், 10 சொட்டு எலுமிச்சைச்சாறும் கலந்து தடவலாம். வெள்ளை சோயாவை மாவாக்கி, அத்துடன் 5 சொட்டு லேவண்டர் ஆயிலும், 2 சொட்டு சைப்ரஸ் ஆயிலும், 2 சொட்டு கொரியண்டர் லீஃப் ஆயிலும் கலந்து மங்கு உள்ள பகுதிகளில் தடவிக் காய விட்டுக் கழுவலாம்.

பார்லரில் என்ன செய்யலாம்?

ள மீசோ தெரபி, மைக்ரோ டெர்மாப்ரேஷன் சிகிச்சைகள் பலனளிக்கும். வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகளுடன், பார்லரில் மெஷின் வைத்துச் செய்கிற இந்த சிகிச்சைகளையும் சேர்த்துப் பின்பற்றினால் விரைவில் பலன் தெரியும்.

உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை?

ளவைட்டமின் ஏ மற்றும் சி சத்து நிறைந்துள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். 10 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு தினம் ஒரு வைட்டமின் சி மாத்திரை கொடுக்கலாம். கால்சியம் மட்டும்தான் அளவு பார்த்துக் கொடுக்கப்பட வேண்டியது. வைட்டமின் சிக்கு அந்த பயம் தேவையில்லை.

குடைமிளகாய், எலுமிச்சை, சாத்துக்குடி, ப்ளூபெர்ரி, பிராக்கோலி போன்றவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்?

அடிக்கடி பிளீச்சிங் செய்வது. பெரியவர்கள் உபயோகிக்கிற அழகு சாதனங் களையே குழந்தைகளுக்கும் உபயோகிப்பது. சருமத்துக்குப் பொருந்தாத சிவப்பழகு க்ரீம்களை உபயோகிப்பது. பாதுகாப்பின்றி சூரிய வெளிச்சத்தில் அலைவது.

Loading...

728

2