new BB1

மயக்கமா? கலக்கமா?

ht3349‘மயக்கம் என்பது மூளை தொடர்பானது என்றே பெரும்பாலும் நினைக்கிறார்கள். உண்மையில், 90 சதவிகித மயக்கங்கள் காது தொடர்பான காரணங்களாலேயே வருகின்றன. அரிதாக, 10 சதவிகித மயக்கங்களே நரம்பு மற்றும் பொது மருத்துவ காரணங்களால் ஏற்படுபவை’’ என்று தொடங்கும் காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவரான கணபதி, மயக்கத்தின் 10 ரகசியங்களை இங்கே பட்டியலிடுகிறார்…

பொய் மயக்கம்

பசி, தூக்கமின்மை, சோர்வு, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகளை சிலர் மயக்கம் என்று நினைப்பார்கள். இவையெல்லாம் பொய் மயக்கங்களே… உண்மையில் காது தொடர்பான குறைபாடுகள், ரத்த அழுத்தம், நீரிழிவு, காதிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு பிரச்னை போன்ற காரணங்களால் நம் கட்டுப்பாட்டை மீறி உடலின் சமன்நிலை குலைவதையே மயக்கம் (Giddiness) என்று சொல்ல வேண்டும்.

குழப்பம் என்ன?

பொதுவாக ஒரு நோயும், அந்த நோய் ஏற்படும் இடமும் ஒன்றாக இருக்கும். ஆனால், காதுகளில் இருந்து ஏற்படும் மயக்கம், விசித்திரமாக உடலின் வேறு பகுதிகளில் அறிகுறிகளைக் காண்பிக்கும். கண்களில் வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, நெஞ்சில் படபடப்பு போல பல அறிகுறிகள் தோன்றும். இதனால், கண் மருத்துவரையோ, இரைப்பை சிகிச்சை மருத்துவரையோ, இதய நல மருத்துவரையோ, மூளையிலிருந்து மயக்கம் வருகிறது என்ற எண்ணத்தால் நரம்பியல் மருத்துவரையோ சந்திப்பார்கள். இந்தக் குழப்பத்தால், காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் வந்து சேரும்போது நிறைய காலமும் பணமும் விரயமாகி இருக்கும். அதனால், மயக்கம் என்றாலே முதலில் காது மூக்கு தொண்டை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வதே சிறந்தது.

காதுக்குள் இரண்டு ஏரியா!

வெளி காது, நடு காது, உள் காது என்று காதை மூன்று பாகங்களாகச் சொல்வார்கள். ஆனால், மயக்கம் ஏற்படுவதைப் பொறுத்தவரை காதை இரண்டு ஏரியாவாக பிரிக்கலாம். ஒன்று அரை வட்ட வடிவக்குழாய் பகுதி (Semi circular canal), இன்னொன்று காக்ளியர் (Cochlear) பகுதி. காதின் இந்த இரண்டு ஏரியாக்களையும் பரிசோதனை செய்தாலே மயக்கம் எதனால் ஏற்படுகிறது என்பதைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட முடியும். இன்னும் விளக்கமாகச் சொன்னால், அரைவட்ட வடிவக் குழாய்க்குள் சுழன்றுகொண்டிருக்கும் Endolymph என்கிற திரவம்தான் நமக்கு சமன்நிலையைக் கொடுக்கிறது.

எப்படி நடக்கும் பரிசோதனை?

காதுக்குள் இருக்கும் இந்த 2 பகுதியிலேயே 5 பாகங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இந்த 5 பாகங்களில் ஏதாவது ஒன்றிலேயே பாதிப்பு இருக்கும். நவீன பரிசோதனைக் கருவியின் உதவியின் மூலம் காதின் எந்த பாகத்தில் பிரச்னை, எத்தனை சதவிகிதம் பாதிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கண்டுபிடித்துவிட முடியும். காதில் பிரச்னை எதுவும் இல்லாவிட்டால், அடுத்த கட்டப் பரிசோதனையாக நீரிழிவு, கொலஸ்ட்ரால், சிறுநீரகக் கோளாறு, தைராய்டு குறைபாடு என்று வேறு பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

சிரமம்தான்… முயற்சி செய்யுங்கள்!

மயக்க நோயாளிகள் பலருக்கும் தாங்கள் என்ன மாதிரியான உணர்வை சந்திக்கிறோம் என்பதை சொல்லத் தெரிவதில்லை. நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், என்ன பிரச்னை என்பது மருத்துவருக்கு முதலில் புரிய வேண்டும். அதனால், மயக்கம் வருவதற்கு முன்பு என்ன வகையான உணர்வுகளும் மாறுதல்களும் ஏற்படுகின்றன என்பதை முடிந்தவரை கண்காணித்துக் கொள்ளுங்கள். முன்னரே தெரிந்துவிட்டால், அது தொடர்பான பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் உடனடியாகத் தொடங்கிவிட முடியும். இல்லாவிட்டால், என்ன வகை மயக்கம் என்பதைத் தெரிந்து கொள்வதிலேயே நிறைய காலம் விரயமாகும்.

மனப்பிராந்தி மயக்கம்

மனப்பிரமையாலோ, அதிர்ச்சியான விஷயங்களைத் தாங்கிக் கொள்ள முடியாததாலோ சிலருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கும். இவர்களை மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்தால் ஆரோக்கியமாகவே இருப்பார்கள். இது மனநலம் சார்ந்த மயக்கம் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். வேறு வழியில்லாமல் அவர்களது திருப்திக்காக எல்லா பரிசோதனைகளையும் செய்து காண்பித்தால்தான் திருப்தியாவார்கள். மருத்துவர்களுக்கே பாடம் எடுத்தால் என்னதான் செய்வது?

வயதானவர்கள் பத்திரம்

இளவயதினர் மயக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. நடுத்தர வயதினரும்கூட நீரிழிவு, ரத்த அழுத்தம், நோய்த்தொற்று, விபத்து போன்ற காரணங்களாலேயே மயக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இவர்களில், வயதானவர்களைத்தான் மயக்கம் அதிகம் சிரமப்படுத்துகிறது. நரம்புத்தளர்ச்சி, ரத்த ஓட்டத்தில் பிரச்னை போன்ற பாதிப்புகளால் மயக்கத்தால் கீழே விழுகிறவர்கள் பெரும்பாலும் பெரியவர்களாகவே இருக்கிறார்கள். கீழே விழுந்துவிட்டால் எலும்பு முறிவதுடன் அதைத் தொடர்ந்து பல பெரிய பிரச்னைகளை முதியவர்கள் சந்திக்கிறார்கள். இது உயிரிழப்பு வரை கூட கொண்டு சென்றுவிடுகிறது என்பதால் முதியவர்கள் மயக்கத்தை உடனடியாக கவனிக்க வேண்டும்.

மயக்கம்… இன்னும் சில காரணங்கள்!

மயக்கம் வருவதற்கு இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன. சளித் தொல்லையால் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டு காதடைப்பதாலும், தலையில் அடிபடுவதாலும், காசநோய் போன்றவற்றுக்காக எடுத்துக் கொள்கிற மருந்துகளாலும் கூட மயக்கங்கள் வரலாம்.

டயட் ப்ளீஸ்!

மயக்க நோயாளிகள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடலில் உப்பு சத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு, எண்ணெய் ஏற்றுக் கொள்ளாதது போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றால் மயக்கம் வருகிறது என்பதை மருத்துவர் உணர்த்தியிருந்தால், அதற்கு ஏற்றாற்போல உணவுமுறையைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.

என்னதான் ட்ரீட்மென்ட்?

மயக்கங்களில் பலவகைகள் உள்ளன. சில மயக்கத்துக்கு மருந்துகள் தேவைப்படும், சில மயக்கத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும், சில மயக்கங்களை உடற்பயிற்சியின் மூலமே சரி செய்துவிட முடியும். இதில் யாருக்கு என்ன சிகிச்சை என்பதை மயக்கத்தைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். அதனால், மயக்கம் வந்தால் அலட்சியமாக நினைக்காமல் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்!

728