new BB1

மாயமில்லே மந்திரமில்லே!

Loading...

ld2124நட்சத்திரங்களுக்கும் புகழ் வெளிச்சத் துறைகளில் இருப்போருக்கும் மட்டும் ரிவர்ஸிலா வயதாகும்? பின்னே..? 50 பிளஸ் தொட்டாலும் அவர்களுக்கு மட்டும் சருமத்தில் தொய்வோ, சின்ன சுருக்கமோ வருவதில்லை… நாளுக்கு நாள் சரும அழகும் மினுமினுப்பும் கூடுகிறது… நிறம் அதிகரிக்கிறது. இளமை திரும்புகிறது. என்ன மாயமோ… மந்திரமோ..? இப்படி நினைக்கத் தோன்றுகிறதுதானே?

அவர்களின் அழகு மற்றும் இளமையின் பின்னணியில் ஆயிரமாயிரம் ரகசியங்கள் உண்டு. செலவு செய்ய பணமும் ஓய்வெடுக்க நேரமும் இருந்தால் உங்களுக்கும்கூட சாத்தியம் அத்தனையும்… பிரபலங்கள் விரும்பும் அழகு சிகிச்சைகளில் லேட்டஸ்ட் விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார் சரும மருத்துவரும் காஸ்மெடிக் சர்ஜனுமான ஜெயப்பிரகாஷ்.

அறுவை சிகிச்சை தேவைப்படாதவை…

போட்டாக்ஸ்

அறுவை தேவைப்படாத அழகு சிகிச்சைகளில் போட்டாக்ஸ் ஊசிக்கே முதலிடம். பல வருடங்களாக வரவேற்பு குறையாத இந்த சிகிச்சையில் நெற்றிப் பகுதி, வாயைச் சுற்றி, கன்னப் பகுதிகளில் உள்ள மெல்லிய சுருக்கங்களைக் களைய முடியும். அளவுக்கு அதிக வியர்வையையும் கட்டுப்படுத்தி, ஒட்டுமொத்த முகத்துக்கும் அழகு வடிவத்தைக் கொடுப்பது.

ஃபேஷியல் பீல்ஸ்

இறந்த செல்களுடன் கூடிய சருமத்தின் டாப் லேயரை உரித்தெடுக்கிற சிகிச்சையே ஃபேஷியல் பீல்ஸ். உரித்தெடுப்பது என்றதும் கன்னாபின்னாவென கற்பனை செய்து கொண்டு அலற வேண்டாம். வலியே இல்லாத இதன் மூலம் புதிய செல்கள் புத்துணர்வுடன் உருவாக்கவும், இளமைத் தோற்றம் திரும்பச் செய்யவும் முடியும்.

ஃபில்லர்ஸ்

சதைப்பற்றே இல்லாமல் வற்றிப் போன பகுதி களை இந்த சிகிச்சையின் மூலம் பூசின மாதிரியான தோற்றத்துக்குக் கொண்டு வர முடியும். முகம், கைகள், மார்பகம் மற்றும் பின்பக்கங்களை இதன் மூலம் அழகாக்க முடியும்.

தழும்புகளை நீக்க

அழகைக் கெடுப்பதில் தழும்புகளுக்கு முக்கிய இடமுண்டு. தழும்புகளில் பல வகைகள் உண்டு. அதற்கேற்ப, அவற்றை நீக்கும் சிகிச்சைகளும் வித்தி யாசப்படும். லேசர், ஸ்டீராய்டு ஊசி, சிலிக்கான் ஜெல் உபயோகிக்கிற முறை, செல் தெரபி, ஃபில்லர்ஸ் மற்றும் போட்டாக்ஸ் ஊசி என தழும்புகளைப் போக்க பல வழிகள் உள்ளன. தழும்பின் தன்மை, அதன் ஆழம், தழும்புள்ள இடம் ஆகியவற்றைப் பொறுத்தும், சிகிச்சை மேற்கொள்ளப் போகிறவரின் உடல் நிலையைப் பொறுத்தும் அது வேறுபடும்.

ஸ்பைடர் வெயின்

சிலருக்கு அடர் சிவப்பும் கருநீலமும் கலந்த நரம்புகள் தொடை, முழங்கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் தென்படுவதைப் பார்க்கலாம். பார்ப்பதற்கு அசிங்கமான இந்த நரம்புகள் ஒருவரின் புற அழகையே பாதிக்கும். லேசர் மற்றும் இன்ஜெக்ஷன் தெரபியின் மூலம் இந்த நரம்புகளை மறையச் செய்யலாம்.

மச்சம் நீக்குதல்

இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் மச்சம் அழகு. தேவையற்ற இடத்தில், அசாதாரண அளவில், வடிவில் இருக்கும் மச்சம் உண்மையில் அழகைக் கெடுக்கவே செய்யும். மச்சத்தின் வடிவம், நிறம், அடர்த்தியில் மாற்றம் இருந்தாலோ, வலியோ, ரத்தக்கசிவோ இருந்தாலோ அது இன்னும் ஆபத்தானது. வெட்டி எடுப்பது, காட்டரைசேஷன் முறையில் பொசுக்கி எடுப்பது, லேசர் என எத்தனையோ முறைகளில் அதை அகற்றி விடலாம்.

ப்ளூ பீல்

முதுமையின் ஆரம்ப அறிகுறிகளான சுருக்கம், சருமத் தொய்வு போன்றவற்றை சரி செய்து, என்றும் இளமையுடன் காட்சியளிக்க விரும்புவோருக்கான சிகிச்சை இது. இந்த முறையில் பிக்மென்ட்டேஷன் எனப்படுகிற மங்கையும் போக்கலாம்.

அறுவை சிகிச்சை தேவைப்படுபவை…

ஃபேஸ் லிஃப்ட்

அதிகப்படியான சருமத்தை அகற்றி, தசைகளை இறுகச் செய்கிற சிகிச்சை. தேவையில்லாத கொழுப்பை நீக்கி, முதுமைத் தோற்றத்துக்குக் காரணமான சுருக்கங்கள், டபுள் சின் எனப்படுகிற தாடை மடிப்புகள் போன்றவற்றை அகற்றி, வயது குறைந்த தோற்றத்தைக் கொடுக்கும்.

என்டோஸ்கோபிக் ப்ரோ லிஃப்ட்

வயதாக ஆக புருவங்களும் அவற்றின் வடிவத்திலிருந்து மாறும். என்டோஸ்கோபிக் ப்ரோ லிஃப்ட் மூலம் தொய்வடைந்த புருவங்கள் தூக்கி நிறுத்தப்படும். மிகச்சிறிய நுண்துளை அறுவை சிகிச்சையே இதற்குப் போதுமானது. புருவங்களுக்கும் இமைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள அதிகப்படியான தசையையும் இதன் மூலம் சரி செய்ய முடியும். இந்த அறுவையில் தழும்புகள் மிகக்குறைவு. அதுவும்கூட, தலைமுடி இருக்கும் பகுதிக்குள் மறைந்து விடும்.

ஐ பேக் ரிமூவல்

சிலருக்கு கண்களுக்கு அடியில் பை மாதிரி தொங்குவதைப் பார்க்கலாம். 0.2 மி.மீ. ப்ரெசிஷன் கட்டிங் லேசர் டெக்னாலஜியின் மூலம் இந்தப் பிரச்னை சரி செய்யப்படுகிறது. வலியில்லாமல், அதிவிரைவாகச் செய்யப்படுகிற இந்த சிகிச்சைக்குப் பிறகு கண்களின் அழகு கவர்ச்சியாக மாறும்.

பரு நீக்குதல்

பருவ வயதில் உருவாகிற பருப் பிரச்னை, சிலருக்கு எத்தனை வயதானாலும் விடுவதில்லை. பருக்களையும் அவற்றால் உண்டான தழும்புகளையும் நீக்கி, பருவுக்குக் காரணமான செபேஷியஸ் சுரப்பிகளைக் கட்டுப்பாட்டில் வைத்து, ஆரோக்கியமான சருமம் பெறச் செய்ய ஆர்ட் லேசர் சிகிச்சை வந்திருக்கிறது.

ஓட்டோபிளாஸ்டி

சிலருக்கு காதுகள் விரிந்த நிலையில், யானைக்கு இருப்பது போன்று அகன்று இருக்கும். அவற்றை ஒடுக்கி, ஒட்டின மாதிரி அமைக்கவும், ரொம்பவும் பெரிய காதுகளை சிறியதாகக் காட்டவும் உதவுகிறது.

ஸ்டெம் செல் ஃபேஸ் லிஃப்ட்

உங்கள் உடலின் கொழுப்பை வைத்தே முக அழகை சீராக்கும் சிகிச்சை. உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பு செல்களை வைத்துச் செய்வதால் உங்கள் எடை குறையும். அதே நேரம் அழகு கூடும்.

கன்னங்களைப் பெரிதாக்குதல்

கன்னங்களைப் பெரிதாக்கி, அழகைப் பெரிதாக்கவும் சிகிச்சைகள் உண்டு. ஊசிகள் மூலம் மருந்தைச் செலுத்தி, தற்காலிகமான பலன்களைப் பெறலாம். நிரந்தரத் தீர்வுக்கு ‘சீக் இம்ப்ளான்ட்டேஷன்’ முறைகளும் உண்டு.

தாடையைப் பெரிதாக்குதல்

சதையே இல்லாமல், எலும்புகள் துருத்திக் கொண்டு நிற்கும் தாடைகள், ஆரோக்கியமான தோற்றத்தைத் தராது. பலவீனமான, நோய்வாய்ப்பட்ட தோற்றத்தையே தரும். சின் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையில் இப்படிப்பட்ட தாடை அமைப்பை மாற்றியமைக்கவும் ஆரோக்கியமான தோற்றம் பெற வைக்கவும் வழிகள் உண்டு.

கழுத்தழகு

முதுமையின் முதல் அடையாளமே கழுத்தில்தான் தெரிய ஆரம்பிக்கும். சுருக்கங்கள், தொங்கும் சதைகள் என கழுத்து, ஒருவரது அழகையே மாற்றிவிடும். நெக் ரெஜுவனேஷன் சிகிச்சையின் மூலம் இந்த எல்லாப் பிரச்னைகளையும் சரி செய்து, இளமைக்குத் திரும்பலாம்.

மூக்கை அழகாக்குதல்

இது சற்றே பழைய டெக்னிக்தான். இருப்பினும், எல்லாக் காலங்களிலும் இதற்கு வரவேற்பு தொடரவே செய்கிறது. கோலிவுட்டிலும் பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் பல நட்சத்திரங்கள் சர்வசாதாரணமாக இந்த அறுவையை செய்து கொண்டு, மூக்கழகைப் பெறுகிறார்கள். இந்த சிகிச்சையின் மூலம் பெரிய மூக்கை சிறியதாக்கலாம். சின்ன மூக்கைப் பெரியதாக்கலாம். மூக்கின் நுனிப்பகுதிகளை கூட சீராக்கலாம்.

லேசர் ரீ சர்ஃபேசிங்

இருபதில் இருந்த மாதிரி முப்பதிலோ, முப்பதில் இருந்த மாதிரி நாற்பதிலோ சருமம் யாருக்குமே அழகாக இருக்காது. ஆனால், அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் மாறுவதே இல்லை. ‘லேசர் ரீ சர்ஃபேசிங்’ முறையில், ஒருவரது சருமத்திலுள்ள அத்தனை பிரச்னைகளையும் களைந்து, இளமைத் தோற்றத்தைப் பெற முடியும்.

Loading...

728

2