new BB1

வயது ஆகும்போது ஏற்படும் முட்டு வலி இதய நோய்க்கு வழிவகுக்கும் -தீர்வு

வயது ஆகும்போது ஏற்படும் முட்டு வலி இதய நோய்க்கு வழிவகுக்கும் -தீர்வுவயது ஆகும்போது ஏற்படும் முட்டு வலி இதய நோய்க்கு வழிவகுக்கும் -தீர்வு என்ன.?ஓரு விரிவான விழிப்புணர்வு பதிவு.!
ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான உடல் வலி…ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வலி… ஆக, நாமும் சரி, நம்மைச் சுற்றியிருப்போரும் சரி, வலியின்றி வாழ்ந்த நாட்களை எண்ணிவிடலாம். சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு வலியின் தீவிரம் எல்லை மீறும் போதுதான் அதை நாம் கவனிப்போம். ‘ஏன் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டீர்கள்?’ என்று ஆரம்பிக்கிற மருத்துவர், வலியின் தொடக்கத்தில் நாம் உணர்ந்து, அலட்சியம் செய்த அறிகுறிகளைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். அப்போது காலம் கடந்திருக்கலாம்.
சின்ன அறிகுறியுடன் உங்களை சீண்டிப் பார்க்கிற வலிகளை சீக்கிரமே அடையாளம் கண்டு கொண்டால், அதன் பிடியிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார் வலி நிர்வாக மருத்துவர் குமார். அந்த வகையில் பரவலாக எல்லோரையும் பாதிக்கிற மூட்டுவலிகளைப் பற்றி, அவற்றின் அறிகுறிகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகளுடன் விரிவாகப் பேசுகிறார் அவர்.
மூட்டுவலி என்பது பொதுவான பெயர். இதில் ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ஆங்கிலோசிங் ஆர்த்ரைட்டிஸ், கவுட் ஆர்த்ரைட்டிஸ் எனப் பல வகைகள் உள்ளன. எலும்பு மூட்டுகளைப் பாதிக்கும் நோய்கள் இவை எல்லாம்.
குழந்தைகளை பாதிக்கும் மூட்டு வலி
ஜுரம், அடிபடுதல், காசநோய், அம்மை நோய் போன்ற நோய்கள் வந்த குழந்தைகளுக்கு இந்த மூட்டு வியாதி வரலாம். 16 வயதுக்கு குறைந்தவர்களை இவ்வியாதி தாக்குகிறது. ஒரு மூட்டு அல்லது பல மூட்டுகள் பாதிப்படையலாம்.
ஆரம்ப அறிகுறியாக குழந்தைகள் இரவு நேரத்தில் மூட்டுவலி ஏற்பட்டு கத்துவார்கள். நடக்க சிரமப்படுவார்கள். இந்த வியாதியை சரியான முறையில் கண்டறிந்து குணப்படுத்தா விட்டால் மூட்டுகள் அழிந்து அதன் வலுவையும், செயலையும் இழக்க கூடும். எனவே நோயை சரியான முறையில் நிர்ணயம் செய்து மருத்துவம் புரிய வேண்டும்.
ருமட்டாயிட் ஆர்த்ரைட்டிஸ்
இது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் சிறு குழப்பத்தின் காரணமாக, மூட்டுத்திசுக்களை நோய்க்கிருமிகளாக நினைத்து, நம் உடலிலிருந்தே சில ரசாயனங்களை உண்டாக்கி, மூட்டுத்திசுக்களைப் பாதிக்கிறது. 30 முதல் 60 வயதுக்காரர்களை, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கிற இந்த நோயின் அறிகுறிகள் எல்லோருக்கும் பொதுவாக இருப்பதில்லை.
உடல் முழுவதும் வலி, குறிப்பாக மூட்டுகளில் அதிக வலி, சோர்வு, மூட்டு வீக்கம், கை, கால்களில் விறைப்புத் தன்மை, காலையில் எழுந்ததும் கால்களில் விறைப்பு, ஓய்வுக்குப் பிறகும் கை, கால்களில் விறைப்பு நீடிப்பதும், சோர்வு தொடர்வதும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக உணரப்படலாம். இந்த நிலையிலேயே மருத்துவரை அணுகினால், நோயின் தீவிரத்தை கண்டறிந்து, குணப்படுத்தி விடலாம். அலட்சியப்படுத்தினால், மூட்டுகளில் வீக்கம், அதிக வலி, மூட்டுகள் தேய்வடைந்து முற்றிலும் பாதிக்கப்படக்கூடும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
குறிப்பிட்ட இடைவெளிகளில் மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதையும், நோயின் தீவிரம் எப்படியிருக்கிறது என்பதையும் சில ரத்தப் பரிசோதனைகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வகையான மூட்டுவலி ஒருவரது எலும்புகளை மட்டுமின்றி, இதயத்தையும் பாதிக்கக் கூடியது. மூட்டு மட்டுமின்றி, முதுகெலும்பு, முழங்கால், கணுக்கால்களிலும் வலி உணரப்படும். எனவே, சிகிச்சையையும் பயிற்சிகளையும் பாதியில் நிறுத்தக் கூடாது. குறிப்பாக பயிற்சிகளை முறையாகச் செய்து வந்தால் எலும்புகள் நெகிழ்வுடன் காணப்பட்டு, வலி குறையும். பயிற்சிகளை ஆரம்பக் கட்டத்திலேயே மெதுவாக, குறைவாகத் தொடங்கவும்.
உணவில் மூன்றில் 2 பங்கு காய்கறிகள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சைவ உணவே சிறந்தது. அசைவத்தில் மீன் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதிலும் சாலமன் மற்றும் டுனா மீன்கள் சிறந்தவை. அவற்றில் உள்ள ‘ஒமேகா 3’ கொழுப்பு அமிலம் வலியைக் குறைக்க உதவும். காய்கறிகள் தவிர, பழங்கள், தானியங்களும் முக்கியம். ஸ்ட்ராபெர்ரி பழமும், ஆலிவ் ஆயிலும் நல்லவை. உணவில் கால்சியம், செலினியம், வைட்டமின் டி சத்துகள் நிறைந்திருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். கோழி இறைச்சி, வாட்டப்பட்ட உணவுகள் (க்ரில்), துரித உணவுகள், நொறுக்குத்தீனிகள், பதப்படுத்திய உணவுகள் போன்றவை வலியை அதிகரிக்கும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த நோய்க்கு, இதய நோயுடன் தொடர்புண்டு என்பதால் கொழுப்பு நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்
நமது பெருவிரல் தவிர்ந்த கை விரல்கள் ஒவ்வொன்றிலும் இரண்டு மூட்டுக்கள் (மொளிகள்) உள்ளன. இவை அசைவதின் மூலமே நமது விரல்களை மடக்கவும் விரிக்கவும் முடிகிறது. பொருட்களைப் பற்றிப் பிடிக்க இவை அவசியமானவையாகும் . இந்த மூட்டில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே ஹெர்படன்ஸ் நோட் தோன்றுகிறது. ஹெர்படன்ஸ் நோட் ஒருவருக்கு இருந்தால் அவரது பிள்ளைகளிலும் வரக் கூடிய சாத்தியம் உண்டு.
பொதுவாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களில் அதிகம். ஹெர்படன்ஸ் நோட் என்பது ஒஸ்டியோ ஆர்த்திரைடிஸ் (Osteoarthritis) என்ற ஒருவகை மூட்டுநோயின் அறிகுறியாகும்.
ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் வயதாகும்போது மூட்டுகளின் தேய்மானத்தால் ஏற்படும் நோய் இதுவெனப் பல காலம் கருதப்பட்டது. அது உண்மைதான். ஆயினும் அதற்கு மேலாக எலும்பை மாத்திரமின்றி, அதைச் சுற்றியிருக்கும் குருத்தெலும்பு, சைனோவியம் எனப்படும் சவ்வு, சுற்றியிருக்கும் தசைநார்கள் என பலவற்றையும் தாக்கும் ஒரு நோயாக இருக்கிறது.
ஒஸ்டியோ ஆர்த்திரைடிஸ் சில அறிகுறிகள்
வயதின் காரணமாக எலும்புகளில் உண்டாகிற தேய்மானம், மூட்டில் எப்போதோ ஏற்பட்ட விபத்து, அடி, காயம், பருமன், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை போன்றவையே பிரதான காரணங்கள். ஒஸ்டியோ ஆர்த்திரைடிஸ் உள்ளவர்களில் விரல்கள் பாதிக்கப்பட்டாலும், அது முக்கியமாக இடுப்பு எலும்பு, முழங்கால், பெருவில் ஆகியவற்றையே அதிகம் தாக்குகிறது.
மூட்டுகளில் வலி, வீக்கம், இறுக்கம் போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் தோன்றும். அவற்றின் உள்ளே நீர் சுரக்கக் கூடும். நாட் செல்ல, அவற்றை ஆட்டும்போது மூட்டுகளினுள்ளே கொ கொர எனச் சத்தம் எழுவதுண்டு. எடை அதிகரிக்கும்போது முக்கியமாக முழங்கால், இடுப்பு மூட்டுகளில் நோயின் தாக்கம் அதிகரிக்கும். மாறாக நோயுள்ளவர்கள் தமது எடையைக் குறைத்தால் நோயின் தாக்கம் குறையும்.
நடப்பதற்கு சிரமம் உள்ளவர்கள் நோயுள்ள பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் கைத்தடி பிடித்து நடப்பது நோய் மேலும் தீவிரம் அடைவதைக் குறைக்கும். முழங்காலில் ஒஸ்டியோஆர்த்திரைடிஸ் இருப்பவர்கள் நடப்பதும், இடுப்பெலும்பு, அடி முதுகு ஆகியவற்றில் இருப்பவர்கள் நீந்துவதும் நல்ல பயிற்சியாகும். ஆயினும் கழுத்தெலும்பு வலி உள்ளவர்களுக்கு நீச்சல் நோயை அதிகரிக்கலாம்.
மருத்துவம்
நோயினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைத் தணிக்க சாதாரண பரசிட்டமோல் மாத்திரைகள் போதுமானதாகும். கடுமையான வலிநிவாரணிகள் தேவைப்படாது. வலிநிவாரணி ஜெல் மருந்துகளை நோயுள்ள மூட்டுகளின் மேல் பூசுவது வலியைத் தணிக்க உதவும். பூச்சு மருந்தாக வெளியே பூசுவதால் வயிற்று எரிவு, பிரஸர் அதிகரித்தல் போன்ற பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
தேவைப்பட்டால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் பரிந்துரைக்கப்படலாம். இப்போது தீவிர வலி நிவாரண சிகிச்சையின் மூலம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சையைக் கூடத் தவிர்க்க முடிகிறது. ரேடியோ அலை சிகிச்சை முறை மற்றும் ஊசி மூலம் மருந்து செலுத்தும் முறைகளும் உதவியாக இருக்கும்.
ஆங்கிலோசிங் ஸ்பான்டிலைட்டிஸ்
முதுகெலும்பிலுள்ள சிறு சந்திப்புகளிலும் இடுப்பிலும் உணரப்படுகிற வலி இது. முக்கியமாக இடுப்புவலி என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படுகிற குழப்பம் காரணமாகவே வரும். அதி தீவிர வலி நிவாரண சிகிச்சை முறையின் மூலம் வலியைக் குறைத்து, பயிற்சிகளையும் தொடர்வதன் மூலம் வேதனையிலிருந்து விடுபடலாம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இடுப்பெலும்பில் மருந்தைச் செலுத்தியும் வலியைக் குறைக்கலாம்.
கவுட் ஆர்த்ரைட்டிஸ்
உடலிலுள்ள யூரிக் அமிலம் எனப்படுகிற ரசாயனம், மூட்டில் படிவதே இந்த வலிக்கான காரணம். கை, கால்களில், கால் பெருவிரல்களில், கணுக்கால்களில், முழங்கை சந்திப்புகளில் அதிக வலி தெரியும். ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவைச் சரி பார்த்து, அதைக் குறைக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படும். பயிற்சிகளும் அவசியம். அசைவ உணவுகளை அறவே தவிர்க்கவும். கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் இந்த வகை நோய்க்கு வழி வகுக்கலாம் என்பதால் அதுவும் வேண்டாம். குடிப்பழக்கம் கூடாது. அதிக இனிப்பு சேர்த்த உணவுகள், மைதாவில் செய்த உணவுகள் போன்றவையும் ஆபத்து.
இவற்றுக்குப் பதிலாக, சுத்தமான பழச்சாறுகள், முழு தானிய உணவுகள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த பால் உணவுகள் சேர்த்துக் கொள்ளலாம். நிறைய தண்ணீர் மற்றும் திரவ உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு 16 டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் அதிகப்படியான யூரிக் அமிலம் வெளியேற்றப்படும்.
மூட்டுவலிக்கு பொதுவான சில ஆலோசனைகள்…
அறிகுறிகள் சின்னதாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகவும். ஆரம்பக் கட்ட பரிசோதனையின் மூலம் நோய் தீவிரமடைவதைத் தவிர்த்து, வலியிலிருந்து முற்றிலும் விடுதலை பெறலாம்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளவும். குறிப்பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட அளவு மட்டுமே எடுக்க வேண்டும். சுய மருத்துவம் ஆபத்தானது.
உடற்பயிற்சிகள் மிக முக்கியம். அவற்றின் மூலம்தான் மூட்டுகளில் வலி வராமல் காக்க முடியும். நோய் வந்த பிறகு பயிற்சி என்பதைத் தவிர்த்து, பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைத்துப் பின்பற்றுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.
மூட்டு வலிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள எளிய வழிமுறைகள்
1. இயற்கை உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடிப்பது நல்லது.
2. அதிக புளி, காரம், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
3. அஜீரண கோளாறு மற்றும் மலச்சிக்கல் வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
4. மதுபானம், மாது, மாமிசத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது.
5. வாழைக்காய், உருளைக்கிழங்கு, முட்டை போன்ற வாயுவை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
6. குடிப்பதற்கு கொதிக்க வைத்த தண்ணீரையும், குளிப்பதற்கு வெது வெதுப்பான நீரையும் பயன்படுத்த வேண்டும்.
7. தியானம், மூச்சுப் பயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.
8. நோயின் தன்மை அதிகமாய் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை கலந்து ஆலோசித்து மருத்துவம் செய்யவேண்டும்.

728