new BB1

முருங்கை மருந்தாவது எப்படி?

Loading...

முருங்கை மரத்தினுடைய எல்லாப் பாகங்களும் இதயத்தை சீரான வகையில் இயங்கச் செய்வதற்காகவும், ரத்த ஓட்டத்தைத் தூண்டி உள்ளுறுப்புகளைச் செவ்வனே செயல்படச் செய்வதற்காகவும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

30eafb57-0e4a-4da7-a8e7-8f80723759e4_S_secvpf

முருங்கை விட்டு விட்டு வரும் வலியைப் போக்கக் கூடியது. உஷ்ணத்தை உண்டாக்கி உள்ளுறுப்புகளைத் தூண்டச் செய்வது, நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளியேற்ற வல்லது. சிறுநீரைப் பெருக்கி எளிதாக வெளியேற்றச் செய்வது. முருங்கையின் பூக்கள் உடலுக்கு உரத்தைத் தர வல்லது.

மாதவிலக்கைத் தூண்டி ஒழுங்குபடுத்தக் கூடியது. முருங்கை மரத்தின் பட்டை கருச்சிதைவை உண்டாக்கக் கூடியது. வேர் காரலுண்டாக்கத்தக்கது. கொப்பளம் உண்டாக்கக் கூடியது.

உடலின் எப் பகுதியில் உற்பத்தியாகும் கற்களையும் உடைத்துத் துகள்களாக்கி வெளியேற்ற வல்லது. வேர்ப்பட்டை தொற்று நோய்க் கிருமிகளைத் துரத்த வல்லது. வீக்கத்தைக் கரைக்க வல்லது. வலியைத் தணிக்கத்தக்கது.

முருங்கைப்பட்டை பூஞ்சக் காளான்களைப் போக்க வல்லது. நுண்கிருமிகளை நீக்க வல்லது. முருங்கை இளம்பட்டையும் பூக்களும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க வல்லது. முருங்கை விதைகள் உள்ளுக்கு உணவாவது. வீக்கத்தைக் கரைக்கக் கூடியது.

கடுப்பைத் தணிக்கக் கூடியது. சிறு நீரைப் பெருக்கக் கூடியது. மேலும் பால்வினை நோய்களின்போது பயன்தர வல்லது.

இந்திய ஆயுர் வேத மருத்துவ நூல் உலர்ந்த முருங்கை வேர்ப்பட்டையை சுழலை நோய்க்கும், சிறுநீரில் சர்க்கரை வெளியாதற்கும் ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து வரும் தொல்லைகளுக்கும் சிபாரிசு செய்கிறது.

மேலும் இலை, விதைகள், வேர்ப்பட்டை, மரப்பட்டை, சீழ் பிடித்த புண்களை ஆற்றவும், ஆசன வாயில் ஏற்படும் மூலம், பவுத்திரம் போன்ற நோய்களைப் போக்கவும் சிபாரிசு செய்கின்றது.

முருங்கையில் நுண் கிருமிகளை அழிக்கவல்ல “ஸ்பைரோசின்” மற்றும் “டெரிகோஸ்பெர்மின்” ஆகிய மருத்துவ வேதிப்பொருட்கள் மலிந்துள்ளன. இவை கிராம் பாஸிட்டிவ் மற்றும் கிராம் நெகட்டிவ் எனப்படும் இருவகை நுண் கிருமிகளையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தவை ஆகும்.

முருங்கை கீரை அளிக்கும் பயன்கள் :

* முருங்கைக் கீரையை உணவோடு அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் வயிற்றுப்புண்கள் குறிப்பாக உணவுப் பாதையில் உள்ள புண்கள் வெகு விரைவாக ஆறும்.

* முருங்கைக் கீரை அடிக்கடி தலைவலி வருவதைத் தடுத்து நிறுத்துவதோடு ரத்தம் கலந்து மலம் வெளியாவதைத் தடுத்து நிறுத்தும்.

* முருங்கைக்கீரை ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையுள்ளது மட்டுமின்றி ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் பணிக்கும் உதவுகின்றது.

* முருங்கைக் கீரையில் விட்டமின்களான “ஏ”மற்றும் “சி” ஆகியனவும் அபரிமிதமான “அமினோ ஆசிட்” களும், சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன.

* முருங்கை இலைச்சாறு மலச்சிக்கலைப் போக்கி குடலைச் சுத்திகரிக்க உதவுகிறது.

* முருங்கைக் கீரையில் உள்ள “பொட்டாசியம்” என்னும் தாது உப்பு மூளையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவுவதாக அமைகின்றது. முருங்கைக் கீரையில் உருளைக்கிழங்கில் இருப்பதைவிட அதிகமான “பொட்டாசியம்“ சத்து பொதிந்துள்ளது. இதுவே மூளை மற்றும் நரம்பு மண்டலங்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றது.

* இளம் தாய்மார்கள் அடிக்கடி முருங்கைக் கீரையினை உணவோடு சேர்த்துக் கொள்வதால் போதிய தாய்ப்பால் சுரக்க ஏதுவாகின்றது. மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஆரோக்கியம் தரவல்லதாக முருங்கைக் கீரை அமைகின்றது.

* முருங்கைக் கீரை எலும்புகளுக்கு பலம் தருவதாகவும் இளஞ்சிறார்களின் எலும்புகள் உறுதி பெறவும் தக்க சத்துள்ள உணவுப் பொருளாக விளங்குகின்றது.

* முருங்கைக் கீரை ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வல்லது. எனவே சர்க்கரை நோயாளிகள் வாரத்தில் மூன்று நாட்களாயினும் முருங்கைக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

* முருங்கைக் கீரை வீக்கத்தைக் கரைக்கும் தன்மை உடையது என்பதால் உணவாகும் முருங்கைக் கீரை கை. கால்களில் ஏற்படும் வீக்கத்தைக் கரைத்துச் சீர் செய்யும்.

* முருங்கைக் கீரை ஓர் சத்துள்ள உணவாக இருப்பதால் தலை முடி உதிர்வதைத் தடை செய்வதோடு இளநரையையும் போக்குகிறது அல்லது தடுக்கிறது. முருங்கைக் கீரையை மேலுக்கும் உள்ளுக்கும் உபயோகப்படுத்துவதால் தலையில் பொடுகு ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. வந்த பொடுகும் குணமாகின்றது.

* முருங்கைக் கீரை உடல் வெப்பத்தைத் தணிக்க உதவி செய்கின்றது. இதனால் கண்கள் சிவந்து காணப்படுதல், தலைவலி போன்ற தொல்லைகள் வராத வண்ணம் தடுக்கப்படுகின்றன. உடலும் குளிர்ச்சி பெறுகின்றது.

* முருங்கைக் கீரையை சூப்பாகக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் மூட்டுக்களின் தேய்மானத்தை சரி செய்கிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண், காய்ச்சல், கண் நோய்கள் குணமாகிறது.

முருங்கை மருந்தாவது எப்படி?

* முருங்கை இலை சாற்றுடன் (10 முதல் 20 மி.லி.) சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து அன்றாடம் காலை வேளையில் குடித்து வருவதால் பல்வேறு நோய்கள் குணமாகின்றன். குறிப்பாக சத்துக்குறைபாடு, ரத்தசோகை, இருமல், ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு, நரம்புத்தளர்ச்சி, தோலின் வறட்சி ஆகியன குணமாகும். கை, கால்களின் வீக்கமும் தணியும்.

* முருங்கை இலை சாற்றுடன் போதிய தேனும் இளநீரும் சேர்த்துக் குடிப்பதால் இழந்த உடல் ஆரோக்கியமும் பலமும் திரும்பக் கிடைக்கின்றது.

* கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இரவுப் படுக்க போகுமுன் முருங்கைக் கீரைச் சாறும் தேனும் கலந்து கொடுப்பதால் கண் பார்வை கூர்மை பெறும்.

* நாய், பூனை போன்ற விலங்குகள் கடித்தபோது முருங்கை கீரையோடு- இரண்டு பல் பூண்டு சிறிது மஞ்சள், உப்பு, மிளகு இவைகளை சேர்த்து அரைத்து உள்ளுக்கு சிறிது கொடுத்து கடிபட்ட இடத்தில் மேலுக்கும் சிறிதளவு தடவி வர நஞ்சு முறிந்து புண்ணும் விரைவில் ஆறிவிடும்.

* முருங்கை கீரை ரசத்தை ஓரிரு சொட்டுகள் கண்களில் விட கண் நோய் தணியும். முருங்கை இலைச் சாற்றை தேன் சேர்த்துக் குழைத்து கண்களில் மை போலத் தீட்டி வருவதாலும் கண் நோய்கள் குணமாகும்.

* முருங்கை இலை சாற்றுடன் சிறிது வெடி உப்பு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க சிறுநீர் தாராளமாக இறங்கும். கை கால்களில் தேங்கிய நீர் வெளியேறி வீக்கம் வற்றும்.

* முருங்கை கீரையை இடித்துச் சாறெடுத்து அதனோடு மிளகைப் பொடித்து சேர்த்துக் குழைத்து நெற்றியின் மீது பற்றாகப் பூசி வைக்க தலைவலி விரைவில் தணியம்.

* அடிப்பட்டதாலோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலோ ஏற்பட்ட வீக்கங்களின் மீது முருங்கைக் கீரையை அரைத்து மேற்பற்றாகப் பூச வீக்கம் வற்றும். வலியும் குறையும்.

* முருங்கைப் பூ பிஞ்சான உடன் சேகரித்து தோலோடு சமைத்து சாப்பிட்டு வர மிகுந்த உடல் வெப்பத்தைத் தணித்து ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

* முருங்கை விதையைப் பொடித்து தேன் சேர்த்து அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டு வர நீர்த்துப்போன விந்துவை கெட்டுப்படுத்தும். ஆண்மையும் அதிகரிக்கச் செய்யும்.

* முருங்கைப் பட்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் குப்பை மேனி சாறு சேர்த்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி சொறி, சிரங்கு, கரப்பான் ஆகிய தோல் நோய்களின் மீது பூசி வர விரைவில் குணமாகித் தோல் பழைய நிறத்தைப் பெறும்.

* முருங்கைப் பிசினை எண்ணெயில் இட்டுக் கரைத்தோ அல்லது காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டோ ஓரிரு சொட்டுக்கள் காதில் விட்டுவர காதுப்புண்கள் ஆறும்.

* முருங்கைப் பிசினைப் பாலிலில் இட்டுக் கரைத்து இரண்டு பக்க கன்னப்பொறியின் மீதும் பூசிவைக்க விரைவில் தலைவலி தணியும். இதையே நெறிக்கட்டிகளின் மீதும் பூசி வைக்க வீக்கமும் வலியும் குணமாகும்.

Loading...
728
2