new BB1

GOOGLE தரும் புதிய வசதிகள்!

Loading...

18948இணையத்தில் தூள் கிளப்பி வரும் ஜிமெயில் விரைவில் 1 பில்லியன் பயனாளர்களைப் பெறப் போகிறது. தற்போது 900 மில்லியன் பயனாளர்களுடன் வெற்றி நடை போட்டுக்கொண்டு இருக்கும் ஜிமெயில் 2012 ம் ஆண்டு வைத்து இருந்த பயனாளர்கள் எண்ணிக்கை 425 மில்லியன்.
தற்போது மின்னஞ்சல் பயன்பாடு குறைந்து வருவதை உணர்ந்து இருப்பீர்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் WhatsApp போன்றவை வந்ததால், மின்னஞ்சல் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள். அதில் நீங்களும் ஒருவராக நிச்சயம் இருக்க வேண்டும்.
நான் சமீபமாகக் கவனித்த வரை ஜிமெயில் தனது சேவையை மேம்படுத்த கடந்த காலங்களைப் போல முயற்சிகள் எடுக்கவில்லை (Gmail Inbox தவிர்த்து). நீண்ட காலமாக ஒரே வடிவமைப்பில் இருக்கிறது. இதற்குக் காரணம் மின்னஞ்சலுக்குக் குறைந்து வரும் வரவேற்பா!
Solitaire
நீங்கள் நீண்ட வருட மைக்ரோசாஃப்ட் இயங்குதளப் பயனாளர் என்றால் Solitaire என்ற பிரபல விளையாட்டை அறிந்து இருப்பீர்கள். இதற்கு வயது 25 வருடமாகிறது. புதிய விண்டோஸ் பதிப்பில் திரும்பக் கொண்டு வரப்போவதாகக் கூறப்படுகிறது.
Google Photos
Google Photos அதிரடி மாற்றங்களைச் செயல்படுத்தி இருக்கிறது. கூகுள்+ வந்ததில் இருந்தே மற்ற சேவைகளுக்குச் சனி திசை ஆரம்பித்து விட்டது.
கூகுள்+ சேவை ஃபேஸ்புக் போல மக்களிடையே பிரபலமாகவில்லை அதனால், கூகுள் வம்படியாகத் தனது மற்ற சேவைகளை இதில் புகுத்தி பயனாளர்களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வைத்தது.
ஆனால், பலரும் “நீ அதுக்குச் சரிப்பட்டு வர மாட்டே” என்று புறக்கணித்ததால், தற்போது வேறு வழியில்லாமல் Google Photos பகுதியை கூகுள் + ல் இருந்து பிரித்துத் தனியாகவும் பயன்படுத்தலாம் என்று அறிவித்து இருக்கிறது.
இதில் 16 megapixels வரையுள்ள நிழற் படங்களையும் 1080p தரமுள்ள 15 நிமிடக் காணொளிகளையும் இலவசமாகத் தரவேற்றம் (Upload) செய்யலாம்.
இதை எப்படிச் செய்வது?
https://photos.google.com/ தளத்தில் Settings என்று இருக்கும் அதில் High quality (free unlimited storage) என்ற வசதியை தேர்வு செய்ய வேண்டும்.
நீங்கள் கூகுள்+ ல் இருந்து நிழற்படங்களைத் தரவேற்றம் செய்தால் அதில் உள்ள settings சென்று Upload my photos at full size என்பதை Uncheck செய்ய வேண்டும்.
உங்கள் திறன்பேசியில் (Smartphone) செய்ய உங்கள் Google Photos செயலியில் (App) சென்று High quality (free unlimited storage) என்பதைத் தேர்வு செய்தால் போதும்.
இதில் நீங்கள் சேமிக்கும் அனைத்துப் படங்களும் 15 நிமிட காணொளிகளும் இலவசம்.
நான் இதைப் பயன்படுத்தி வருகிறேன். தாறுமாறாக இருக்கிறது 🙂 குறிப்பாக இதைத் திறன்பேசியில் பயன்படுத்த மிக வேகமாகவும் எளிதாகவும் உள்ளது.
தேதி, மாதம், வருடம் வாரியாக நமது நிழற்படங்களை எளிதாகத் தேட முடியும். சமீப கூகுள் மாற்றங்களில் மிகச் சிறந்த மாற்றம் என்றால் இதைத் தான் கூறுவேன்.
Gmail Inbox
ஜிமெயில் Advance பயனாளர்களுக்காகக் கொஞ்ச நாள் முன்பு அறிமுகப்படுத்திய “ஜிமெயில் இன்பாக்ஸ்” வசதியை, அழைப்பிதழ் முறையில் இருந்து தற்போது அனைவரும் பெற்றுக்கொள்ளும்படி மாற்றியுள்ளது.
நான் இந்த வசதிக்கு தீவிர ரசிகனாகி விட்டேன். அநாவசியமான மின்னஞ்சல்களுக்கு திறன்பேசியில் Notification வந்து கடுப்படிப்பது முற்றிலும் நின்று விட்டது.
அது மட்டுமல்ல இதில் ஏராளமான வசதிகள் உள்ளது. நீங்கள் அமேசான் போன்ற நிறுவனத்தில் பொருள் வாங்கினால் பொருள் வரும் நேரம், வருகிறதா, நம்மை வந்தடைந்து விட்டதா என்பது போன்ற தகவல்களைத் தெளிவாகக் கொடுக்கும்.
அடப்போங்க! ஜிமெயிலை பாராட்டி எனக்கே சலிப்பாகி விட்டது. இந்த வசதியைப் பெற https://inbox.google.com செல்லவும்.

Loading...

728

2