new BB1

மூளைக்கட்டி அறிகுறிகளும் சிகிச்சையும்

மூளைக்கட்டி அறிகுறிகளும் சிகிச்சையும்மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப்படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை (Benign) மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும்.

இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் என்பதாம்.

தணிந்த நிலை மூளைக்கட்டி மெதுவாக வளர்ச்சியடையும், அது வளரும் இடத்தைப் பொறுத்து அதனை சுலபமாக அகற்றிவிட முடியும். தணிந்தநிலை மூளைக்கட்டி சாதாரண மூளையின் பிற அமைப்புகளுக்குள் சுலபமாக நுழைந்துவிடாது. ஆனால், கேன்சர் மூளைக்கட்டி மிக வேகமாக வளருவதோடு அருகில் உள்ள மூளைத் திசுக்களையும் சேதப்படுத்தக் கூடியது. ஆனால் சில நபர்களுக்கு தணிந்த நிலை மூளைக்கட்டியே எமனாக மாறக் கூடிய அபாயமும் உண்டு.

மூளைக்கட்டியை அகற்றுவது எப்போதுமே மருத்துவத் துறையினருக்கு ஒரு சவாலான விஷயம் 20 வயதுக்குட்பட்டோர் கான்சரால் மரணமடைவதற்கு மூளைக்கட்டி ஒரு பிரதான காரணமாக இருந்து வருகிறது. ஆனால் பல வகை மூளைக்கட்டிகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளால் குணமடைய வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. மேலும் நவீன தொழில் நுட்பம் மூளைக்கட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்க உதவுகிறது.

நோய் அறிகுறிகள் :

மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவை பொறுத்து அதன் அறிகுறிகள் அமையும். இது மூளைத்திசுவில் நேரடியாக நுழைவதால், பார்வை, இயக்கம், பேச்சு, கேட்டல், நினைவு, நடத்தை ஆகியவற்றுக்கு காரணமாகும் உள் உறுப்புகளை சேதமடையச் செய்யும். மூளைக்கட்டி ஏற்படுத்தும் அழுத்தத்தால் சுற்றியுள்ள மூளைத்திசு வீக்கமடைகிறது.

* புதுவிதமான, கொல்லும் தலைவலி குறிப்பாக கண் விழித்தவுடன்
* விளக்க முடியா குமட்டல் மற்றும் வாந்தி
* பார்வைக் கோளாறுகள் (பலவகை)
* கை அல்லது காலில் மெதுவாக உணர்ச்சி மழுங்கி வருதல்
* பேசுவதில் சிரமம்
* தினசரி நடைமுறைகளில் குழப்பம்
* ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்கள்
* முன்பு எப்போதும் வலிப்பு இருந்திராதவர்களுக்கு வலிப்பு தோன்றுதல்
* காதுப் பிரச்சினைகள்
* ஹார்மோன் ஒழுங்கின்மைகள்

காரணங்கள் :

முதல் நிலை மூளைக்கட்டி :

முதல்நிலை மூளைக்கட்டி மூளையிலோ அல்லது அதற்கு அருகிலோ அதாவது மண்டையோடு, மூளைச் சவ்வுகள் (Meninges) மண்டையோட்டு நரம்புகள் அல்லது கபச்சுரப்பி ஆகியவற்றில் தோன்றலாம். குழந்தைகளுக்கு வரும் பெரும்பான்மையான மூளைக்கட்டி முதல்நிலை மூளைக்கட்டியே. அனைத்து வகை மூளைக்கட்டிகளில் 25 சதவீதம் முதல் நிலை மூளைக்கட்டிகளே. ஆனால் மூளைக்கட்டி எதனால் தோன்றுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.

மரபுக்கூறுகளா, சூழலிய காரணிகளா அல்லது வைரஸ் மற்றும் பிற காரணங்களால் தோன்றுகிறதா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

முதல்நிலை மூளைக்கட்டிகளின் மருத்துவப் பெயர்கள் சில :

* அகௌஸ்டிக் நியூரோமாஸ்
* ஆஸ்ட்ரோ சைட்டோமாஸ்
* மெடுல்லோ பிளாஸ்டோமாஸ்
* மெனிஞ்சியோமாஸ் மற்றும் ஒலிகோடென்ட்ரோக்ளியோமாஸ்

இரண்டாம் நிலை, இடம்பெயரும் மூளைக்கட்டிகள் :

உடலின் ஏதோ ஒரு பகுதியில் முளைத்து, மூளைக்குப் பரவும் கேன்சர் செல் இரண்டாம் நிலை மூளைக்கட்டியாகும். நுரையீரல் மற்றும் மார்புப் புற்று மூளை வரை பரவும். உலகில் தோன்றும் முக்கால்வாசி மூளைக்கட்டிகள் இவ்வகையான உறுப்பு மாறி பரவும் இரண்டாம் நிலை மூளைக்கட்டிகளே. சில சமயங்களில் மூளைக்கட்டி உடலின் வேறு எங்கோ கேன்சர் உருவாகியிருப்பதற்கான அறிகுறியாகவும் உள்ளது.

நோய்க்கணிப்பு :

மூளைக்கட்டியின் அறிகுறிகள் பல பிற நோய்களுக்கான அறிகுறிகளிலும் தோன்றுவதால் இதனை அறுதியிடுவது அரிதான காரியம். மூளைக்கட்டி இருப்பதைக் கணிப்பதில் பல அடுக்குகள் உள்ளன. முதலில் நரம்பியல் சோதனை செய்து புலன்கள் சரியாக செயல்படுகிறதா என்பதைக் கணிப்பார்கள். இதன் முடிவுகளைப் பொறுத்து கீழ்வரும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

சி.டி. ஸ்கேன் : இதன் மூலம் மூளையின் இருபரிமாண பிம்பம் கிடைக்கும். சில பல சி.டி. ஸ்கேன்களுக்குப் பிறகு ரத்தத்தில் டை ஒன்று செலுத்தப்படும் இதன் மூலம் எக்ஸ்ரேயில் மூளைக்கட்டி தெள்ளத் தெளிவாக தெரியவரும். இது எடுக்க 10 நிமிடமே தேவைப்படும்.

காந்த ஒலியலை இமேஜிங் ஸ்கேன் (எம்.ஆர்.ஐ.) : இதில் மூளையின் பல பிம்பங்கள், காந்தப்புலங்கள் மற்றும் ஒலி அலைகளால் பெறப்படும். உருளை வடிவ எந்திரம் ஒன்றில் நீங்கள் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வைக்கப்படுவீர்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் நன்மை என்னவெனில் உடல் மற்றும் எலும்பின் மென் திசுக்களையும் இது துல்லியமாக படம்பிடிக்கும் என்பதே.

ஆஞ்சியோ கிராம் : இதில் ஒரு சிறப்பு வாய்ந்த டை உங்கள் ரத்த ஓட்டத்தினுள் செலுத்தப்படும். ரத்தக் குழாய்கள் வழியாக செல்லும் இந்த டை எக்ஸ்ரேயில் தெரியவரும். இதன் மூலம் மூளைக்கட்டியுடன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களை இது துல்லியமாகக் காட்டும்.

தலை மற்றும் தலையோடு எக்ஸ்-ரே : மண்டையோட்டு எலும்புகளில் மூளைக்கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் இந்த எக்ஸ்-ரேயில் தெரியவரும். மூளைக்கட்டியுடன் தொடர்புடைய கால்சியம் படிவுகளையும் இது காட்டிவிடும்.

மற்ற ஸ்கேன்கள் : எம்.ஆர்.எஸ். ஸ்கேன், சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் டோமோ கிராஃபி (எஸ்.பி.ஈ.சி.டி) அல்லது பொசிஷன் எமிஷன் டோமோகிராஃபி (பி.ஈ.டி.) ஆகியன மூலம் மூளை ரசாயனச் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் ஆகியவற்றை மருத்துவர்கள் கணிப்பார்கள்.

ஆனால் இவையெல்லாவற்றையும் விட, மூளைக்கட்டி இருப்பதை கணிக்க உதவும் ஒரே பரிசோதனை பயாப்சி பரிசோதனையே. மூளைக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது அல்லது கட்டியின் ஒரு சிறு சாம்பிளை எடுத்து பயாப்சிக்கு அனுப்பி கேன்சர் கட்டியா என்பதை கண்டறிவார்கள்.

மருத்துவர்கள் பொதுவாக மண்டையோட்டில் சிறு துளை ஒன்றைப் போட்டு,அதனுள் மிக மெல்லிய ஊசியை செலுத்தி திசுவை அகற்றுவர். இதற்கு சி.டி.ஸ்கேன் வழிகாட்டியாக அமையும்.

இதன்பிறகு இந்த திசுவை நுண்ணோக்கி வழியாக பரிசோதனை செய்து இது கட்டியா என்பதை உறுதி செய்து கொள்வர். கட்டியாக இருப்பின் அதன் தன்மை ஆராயப்படும். இதன்பிறகே எந்த வகை சிகிச்சை என்பது தீர்மானிக்கப்படும்.

சிகிச்சை :

மூளைக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் கட்டியின் அளவு, அது வளரும் இடம்,அதன் தன்மை, நோயாளியின் வயது மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். அந்தந்த நபர்களுக்கு தக்கவாறு மருத்துவர்கள் சிகிச்சைகளைத தீர்மானிப்பார்கள். இதைக் குறிப்பிட்ட மருத்துவர் செய்ய முடியாது. கீழ்வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் உதவியுடன் தான் செய்ய முடியும்.

* நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் – மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்
* கட்டிகள் நிபுணர் – கேன்சர் சிறப்பு நிபுணர்
* ரேடியாலஜிஸ்ட் – மருத்துவ பரிசோதனை பிம்பங்களை பரிசோதிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
* ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் – கதிர்வீச்சு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
* நரம்பியல் நிபுணர் – மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்

முதலில் மூளைத்திசு வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க ஸ்டெராய்ட் மருத்துவம் செய்யப்படும். வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் மூலம் வலிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மூளைக்கட்டியால் முளையில் திரவம் சேரத் தொடங்கினால்,திரவத்தை வெளியேற்ற மூளையில் மெல்லிய குழாய் ஒன்றை பொருத்துவர்.

அறுவை சிகிச்சை : மூளைக்கட்டி பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே அகற்றப்படும். ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சில வகைக் கட்டிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்படும். கட்டி மெதுவாக வளரும் தன்மையினதாக இருந்தால் மருத்துவர்கள் காத்திருந்து மெதுவாகவே அறுவை சிகிச்சை பற்றி யோசிப்பார்கள்.

ரேடியேஷன் : உயர் சக்தி கதிர் வீச்சு மூலம் கட்டி செல்களை பொசுக்குவது.

கெமோதெரபி : வாய் வழியாக அல்லது ஐ.வி. மருந்துகள் மூலம் புற்று நோய் செல்களை அழித்தல்.

728