new BB1

தாய்ப்பால் ஊட்டும் வாரம்

Loading...

50 ஆண்டுகளுக்கு முன்பு ‘தாய்க்கு அர்ப்பணம்’ என்று வெளிவந்த ஒரு ஆங்கில நூலில், முதல் வரியில், “இறைவன் உலகுக்கு மிக இனிமையான ஒரு பொருளை பரிசாக அளிக்க நினைத்தான். எனவே, அவன் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்து உலகுக்கு தாயை கொடுத்தான்” என்று எழுதப்பட்டு இருக்கும்.

தாய்ப்பால் ஊட்டும் வாரம்

எவ்வளவு நிதர்சனமான உண்மை! உலகில் தாய் அன்புக்கு ஈடு எதுவுமே இல்லை. 10 மாதம் தன் குழந்தையை வயிற்றில் சுமந்து பெற்று, தன் உதிரத்தையே தாய்ப்பாலாக கொடுத்து, இரவும், பகலும் கண்விழித்து வளர்க்கும் அந்த தாயைப்பற்றி குறிப்பிட்ட ஒரு பகுத்தறிவாளர், தாய்க்கும் மிஞ்சிய இறைவன் எங்கு உண்டு? என்றார்.

அந்த அளவுக்கு தாய் அன்பு என்றால், அவள் ஊட்டும் தாய்ப்பால்தான். சமீபகாலங்களாக பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் குறைந்துவருவது மிகவும் கவலை அளிக்கிறது.

அதிலும் தாய்ப்பாசத்துக்கு பெயர்போன தமிழ்நாட்டில்தான் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது என்று ‘யூனிசெப்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஐந்தில் ஒரு தாய்தான் அதாவது, 18.8 சதவீத தாய்மார்களே பிரசவம் முடிந்து, 6 மாதங்கள்வரை தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கிறார்கள்’ என்று தெரிவிக்கிறது. இது நம்பமுடியவில்லைதான். நிச்சயமாக கூடுதலாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.

உலகம் முழுவதுமே தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சராசரி 64 சதவீதம் என்றும் தெரிவிக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கூட 50 சதவீதத்துக்கு மேற்பட்ட தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் ஊட்டுகிறார்கள். மிகவும் புகழ்பெற்ற ‘லான்செட்’ மருத்துவ இதழ் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாக 5 வயதுக்குள் நிகழும் இறப்புகளில் 13 சதவீதத்தை குறைக்க முடியும் என அறுதியிட்டு கூறுகிறது.

இந்த கணக்குப்படி பார்த்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுக்கு 3,600 குழந்தைகளின் இறப்புகளை தடுக்க முடியும்.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் இன்று முதல் 7-ந் தேதிவரை ‘உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம்’ அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்கள் தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில், அனைத்து பேருந்து நிலையங்களிலும் தனி அறைகள் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது வரவேற்கத்தக்கது. பெண்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியத்தை தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வை தீவிரப்படுத்தவேண்டும். முன்புபோல பெண்கள் சேலை அணியாமல் சுடிதார் போன்ற நாகரீக ஆடை அணிவதால், வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தாய்ப்பால் ஊட்டுவது சிரமம் என்று பெண்கள் கூறுகிறார்கள்.

எனவே, ஜெயலலிதா பஸ் நிலையத்தில் தொடங்கியுள்ள பாலூட்டும் அறைகள்போல மற்ற எல்லா இடங்களிலும் உடனடியாக தொடங்குவது இயலாது என்றாலும், அவர்களுக்கான கழிப்பறைகளை விசாலமாக பாலூட்டுவதற்கான வசதிகளோடு அமைக்கலாம். மேலும், பொதுவாக குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டினால் அழகு போய்விடும் என்ற தவறான கருத்து நிலவுகிறது.

மருத்துவ ரீதியாக இது மாயை, அழகுகூடும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்த ஆண்டு குறைந்துள்ள தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் சதவீதம், அடுத்த ஆண்டு உயரும் வகையிலான முழுமுயற்சிகளை சம்பந்தப்பட்ட துறைகள் எடுக்க வேண்டும்.

Loading...
728
2