new BB1

மருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம்

Loading...

மருத்துவ குணம் நிறைந்த ஈச்ச மரம்ஈச்சமரம் தென்னை, பனை வகைகளைச் சேர்ந்த ஓர் மரம் ஆகும். இதற்குக் கிளைகள் கிடையாது. விசிறி போன்ற இலைகளை இது பெற்றிருக்கும். மட்டைகளுடன் அகலமில்லாத நீண்ட ஊசி போன்ற கூர்மையான முனையுள்ள இலைகளைப் பெற்று இருக்கும். நம் நாட்டு ஈச்ச மரங்களை “சிற்றீச்சம்” என்று சொல்வர்.

காய்கள் சிறியவைகளாகவும் சற்று நீண்ட வடிவைப் பெற்றவையாகவும் இருக்கும். சிற்றீச்சங்காய்கள் கொத்துக் கொத்தாக பசுமை நிறத்துடன் காணப்படும். பழுத்த நிலையில் சிறிது சிவப்பான நிறத்துடன் காணப்படும். சிற்றீச்சையின் பச்சைக்காய்கள் சற்று புளிப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் கொண்டதாக இருக்கும். பழுத்த நிலையில் இனிப்புச் சுவையோடு சற்று புளிப்புச் சுவையும் பெற்றிருக்கும். பழம் தின்பதற்கு உதவும் என்றாலும் பேரீச்சையைப் போல தினமும் உணவுப் பொருளாக உபயோகப்படுத்துவதற்கு உகந்தது அல்ல.
பேரீச்சை என்பது பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளில் விளைவதாகும். இவையே உயர்தரமானதாகவும் உணவுக்கானதாகவும் கருதப்படுகின்றது. “கச்சூரம்” எனப்படும் பேரீச்சங்காயின் உள் விதையை நீக்கிச் சதைப் பற்றைத் தேனில் ஊற வைத்து தினம் கற்ப முறையாக உண்டு வந்தால் மாரடைப்பு, வாயுத் தொல்லை ஆகியவை நீங்குவதுடன் உடலுக்கு உரம் தருகின்ற ஓர் சத்துப் பொருளாக விளங்கும். மேலும் பேரீச்சை மிக்க சுவையுள்ளதாகவும் ரத்த சோகையைப் போக்குவதாகவும் இருக்கும்.
சிற்றீச்சையின் பலன்கள்:
சிற்றீச்சையின் பழங்கள் உடலுக்கு உரந்தரக் கூடியது என்றாலும் அளவோடு சாப்பிடக் கூடியது. சிற்றீச்சைச் சாறு குளிர்ச்சி தரவல்லது. பசியைத் தூண்டக் கூடியது. விதைகள் வியர்வையைத் தூண்டக் கூடியது. வேர்ப்பகுதி நரம்புக் கோளாறுகளை நீக்கவல்லது. ஈச்சங் குருத்தைக் கீறி அதினின்று வடியும் சாற்றைப் பானைகளில் சேமித்துப் புளிக்குமுன் அதை பதநீராகப் பருகுவது பண்டைய வழக்கம்.
புதிதாக எடுக்கப்பட்ட புளிக்காத சாறு விட்டமின் சத்துக்களை மிகுதியாகப் பெற்றுள்ளது. குறிப்பாக “அஸ்கார்பிக் ஆசிட்” எனப்படும் விட்டமின் “சி” சத்து அதிகமாக உள்ளது ஆகும். இந்த விட்டமின் “சி” சத்து எலும்புகளுக்கும் எலும்புகளை இணைக்கும் (லிகமெண்ட்ஸ்) எனப்படும் இணைப்பு பகுதிகளுக்கும் மிகவும் முக்கியமான, தேவையான ஒன்றாகும்.
மேலும் தசைகள் ரத்த நாளங்களுக்கும் இது மிக அத்தியாவசியமான ஓர் சத்தாகும். விட்டமின் “சி” சத்து நமது உடல் இரும்புச் சத்தை (அயர்ன்) உற்பத்தி செய்ய உதவுகிறது. இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. ஈச்சஞ்சாற்றை வெறும் வயிற்றில் 50 முதல் 100 மி.லி. வரையில் அன்றாடம் (ஒரு மண்டலம்) உட்கொண்டு வர பல நலன்களும் உண்டாகும்.
அளவோடு பயன்படுத்த மருத்துவ நூல்கள் வலியுறுத்துகின்றன. ஈச்சஞ்சாற்றால் உடல் வெப்பம் தணியும், பிரமேகம் என்கிற ஒழுக்கு ஒழியும். முத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல், தடை இல்லாது போகும். அரோசகம் என்கின்ற சுவையின்மை, பசியின்னை அகலும். ஈச்ச மரத்தின் சாற்றினின்று காய்ச்சி வடித்தெடுக்கும் கற்கண்டு இனிப்புடையதாக இருப்பினும் மருந்துகளை முறிக்கக்கூடியதாகவும், அறிவைக் கெடுக்கக் கூடியதாகவும் வாத, பித்த, கப, காச நோய்களைத் தோற்றுவிப்பதாகவும் விளங்கும் என இந்திய மருத்துவ நூல்கள் எச்சரிக்கை செய்கின்றன.
சிற்றீச்சங் குருத்தைத் தின்பதால் (வெண்மை நிறங் கொண்ட இளங்குருத்து) பெண்களைத் துன்புறுத்தும் மாதவிலக்கு தடையை அதாவது உதிரச் சிக்கலைச் போக்கும். சிற்றீச்ச ஓலைகளைப் பதப்படுத்தி பாய் முடைவது வழக்கம். இப்போதும் கூட அதை வெல்லம் போன்ற பொருட்களை மூட்டையாகக் கட்டுவதற்குப் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் பண்டைத் தமிழர் சிற்றீச்சம் பாயில் படுத்துத் தூங்கினர். கரும்பின் சாற்றினின்று தயாரிக்கப்படும் வெல்லத்தை விட ஈச்சஞ் சாற்றினின்று தயாரிக்கப்படும் வெல்லத்தில் அதிக அளவில் “அமினோ ஆசிட்கள்” உள்ளன என்று நவீன ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. இந்த “அமினோ ஆசிட்” சத்து பரிமாற்றத்துக்கும், நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டின்ஸ், மினரல்ஸ், விட்டமின்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கவும் உதவுகிறது.

Loading...

728

2