new BB1

மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருத்துவ பயன் மிக்கது

Loading...

14307

மாமரத்தின் துளிர் முதல் வேர் வரை மருந்தாகிப் பயன்தரும் பெருமை போற்றுதற்குரியது. மாம்பிஞ்சு புளிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளை உடையது. மாம்பிஞ்சுக்கு உள்ளழலை ஆற்றும் தன்மையுடையது, வற்றச் செய்யும் தன்மை உடையது, வயிற்றுக் கோளாறுகளைப் போக்க வல்லது. பசியைத் தூண்டக் கூடியது.

உடலுக்கு உஷ்ணத்தைத் தந்து உள்ளுறுப்புகளைத் தூண்டச் செய்வது. மாம்பிஞ்சுகளைக் கொண்டு “மாவடு” என்னும் ஊறுகாய் செய்வது வழக்கம். முற்றிய மாங்காய் வறட்சித் தன்மையையும் புளிப்புச் சுவையையும் கொண்டிருக்கும். வற்றச் செய்யும் தன்மை உடையது. குருதியைக் கெடுத்து முத்தோஷங்களையும் (வாத, பித்த, சிலேத்துமம்) சீற்றமுறச் செய்யும் தன்மை உடையது என்பதால் அளவறிந்து உபயோகிப்பது நலம் பயக்கும்.

மரத்திலேயே பழுத்த பழம் இனிப்பு, புளிப்புச் சுவைகளோடு குருத்தன்மையும் கொண்டிருக்கும். ஆயினும் சிறிது பித்தத்தை வளர்க்கும் தன்மையுடையது, வாதத்தை தணிக்க கூடியது என்று ஆயுர் வேதம் சொல்லுகின்றது. மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு ஆகிய சுவைகளைக் கொண்டிருக்கும் மாங்கொட்டை ஒரு கிருமி நாசினியாகி வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும் தன்மை உடையது.

மிக்கத்துவர்ப்பு தன்மையுடையதால் பேதி, ரத்தப் போக்கு போன்றவற்றை வற்றச் செய்யும் தன்மை உடையது. மேற்பூச்சு மருந்தாகப் பயன்படுத்துவதால் உள்ளழலை ஆற்றும் தன்மையது. மேலும் மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பு உன்னதமான சத்துக்களை உள்ளடக்கிய ஓர் உணவுப் பொருளும் ஆகின்றது. இது உடலுக்கு உரந்தர வல்லது.

மா மரம் மற்றும் அதன் அங்கங்களின் பயன்கள்:

முற்றிய மாங்காய் வற்றச்செய்யும் தன்மை உடைது. இதில் விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிக்கது. நன்கு பழுத்த பழம் உடலுக்கு உரம் தருவது மட்டுமின்றி கோடைக் காலத்திலும் அளவோடு சாப்பிட குளிர்ச்சியைத் தரக் கூடியது. இலைகள் வீக்கத்தை வற்றச் செய்யும் வல்லமை பெற்றது.

நுண்கிருமி நாசினி பித்தத்தை உண்டாக்க கூடியது. சிறுநீரைப் பெருக்க கூடியது. சர்க்கரை நோய்க்குத் துணை மருந்தாகிறது. இலையை அரைத்துத் தீக்காயங்களுக்கும் தழும்புடைய காயங்களுக்கும் போடுவதால் விரைவில் ஆற்றும் தன்மை உடையது. வீக்கத்தை கரைக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது. பூஞ்சக் காளான்களை அழிக்க கூடியது.

வயிற்றுப் புழுக்களை வெளியேற்றக் கூடியது. கடுப்பைத் தணிக்க கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை நிறைந்தது என்பதனால் மாம்பருப்பை பேதியை நிறுத்தவும், சர்க்கரை நோயைத் தணிக்கவும், மாதவிலக்கு கோளாறுகளை மறைய செய்யவும், உள்ளுக்கு உபயோகப்படுத்துவர். மாமரப்பட்டையை வற்றச் செய்வதற்கும் ரத்தப்போக்கு ரத்தக்கசிவு ஆகியனவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் மூட்டு வலிகளைத் தணிப்பதற்கும் பயன்படுத்துவர்.

இந்திய ஆயுர்வேத மருத்துவம் காய வைத்துப் பொடித்த மாங்கொட்டைப் பொடி பேதியை நிறுத்தவும், காய வைத்து பொடித்த மாமரப்பட்டை சூரணத்தை ரத்தப்போக்கை நிறுத்தவும் சிபாரிசு செய்கின்றது.

மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் :

சுமார் நூறு கிராம் மாம்பழத்தில் எரிசக்தி 250 கலோரி ஆகும். இது ஒரு ஆப்பிள் பழத்தினின்று கிடைக்க கூடியதைவிட சற்று அதிகமானதாகும். புதிய மாம்பழம் பல்வேறு ஊட்டசத்துக்களைக் கொண்டது ஆகும். குறிப்பாக விட்டமின் சி மற்றும் போலேட் ஆகியன முறையே 44 சதவீதம் மற்றும் 11 சதவீதம் அளவுக்கு அடங்கியுள்ளன.

மேலும் மாம்பழத் தோல் மாம்பழச் சதை ஆகிய மருத்துவப் பொருள்களான ட்ரைடர்பின் லூப்பியோல் ஆகியன அடங்கியுள்ளன. மாம்பழத் தோலில் கைரோட்டினாய்ட்ஸ் விட்டமின் ஏ பீட்டா கெரோட்டின் லூட்டின் ஆல்ஃபா கெரோட்டின் குவெர்சிடின் கெம்ப் ஃபெரால், காலிக் ஆசிட், காபிக் ஆசிட் கெட்டாசின்ஸ் மற்றும் டேனின்கள் அடங்கியுள்ளன.

100கிராம் மாம்பழத்தில் உள்ள சத்துப்பொருட்கள் .:

எரிசக்தி என்னும் சத்துப் பொருள் 60 கலோரி, மாவுச்சத்து 15 கிராம், சர்க்கரை சத்து 13. கிராம், உணவாகும் நார்ச்சத்து 1.6 கிராம், கொழுப்புச்சத்து 0.38கிராம், புரதச்சத்து 0.82 கிராம், விட்டமின் ஏ 7%, பீட்டாகரோட்டின் 6 % தயாமின் (பி1) 2%, ரிபோஃப்ளேவின் (பி2) 3%, நியாசின் (பி3) 47, பேண்டோதெனிக் அமிலம் (பி5) 4%, விட்டமின் பி6 9%, விட்டமின் போலேட் 11%, கோலின் 2%, விட்டமின் சி 44%, விட்டமின் ஈ 6%, விëட்டமின் கே 4%, தாது உலோகங்களான சுண்ணாம்பு (கால்சியம்) 1%, இரும்பு 1 %, மெக்னீசியம் 3%, மேங்கனீசு 3%, பாஸ்பரஸ் 2%, பொட்டாசியம் 4%, துத்தநாகம் 1% என ஒரு மாபெரும் ஊட்டசத்து மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்களின் பட்டியலை 100 கிராம் மாம்பழத்தில் இறைவன் பொதித்து வைத்திருக்கிறான்.

மாமரத்துப் பகுதிகள் மருந்தாகும் விதம் :

* மாமரத்தின் மலர்களைச் சேகரித்து இளம் வறுப்பாய் வறுத்து சூரணித்து வைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர இரண்டொரு நாளில் பேதியையும் கட்டும். சுப பித்தங்களைத் தணிக்கும்.

* மாமரத்தின் துளிர் இலைகள் ஐந்தாறு எடுத்து அதற்கு சம அளவு நாவல் மரத்துளிர் இலைகள் சேர்த்து நீரிலிட்டுக் காய்ச்சி வடித்து ஆறவைத்து சிறிது தேன் சேர்த்து பருக வாந்தியை நிறுத்தும்.

* மாம்பட்டைத் தூளுடன் தேனும் பாலும் கலந்து சாப்பிட ரத்த அதிசாரம் என்கிற ரத்தபேதி, ரத்தக்சிவு குணமாகும்.

* மாம்பழச்சாற்றோடு தேன் கலந்து சில நாட்கள் சாப்பிட்டு வர மண்ணீரல் வீக்கத்தால் தோன்றிய பெரு வயிறு என்னும் மகோதா நோய் குணமாகும். மாமரத்துளிர் இலைகளை பத்து எண்ணிக்கையில் எடுத்து ஒரு பாத்திரத்தில் நீர்விட்டு அதில் மாந்துளிர்களைப் போட்டு இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் இலைகளைக் கைகளால் நன்கு கசக்கி அதன் சத்துவத்தை ஊறவிட்ட நீரிலேயே பெருகும்படி செய்து வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர ஆரம்ப கால சர்க்கரை நோய் தணியும்.

* மாவிலைகளைப்பறித்து சுத்திகரித்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் அந்தி சந்தி என இரண்டு வேளைகள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு சாப்பிட்டு வர சர்க்கரை நோய் தணியும்.

* மாங்கொட்டைகளை உடைத்து உள்ளிருக்கும் பருப்பினை நிழலில் உலர்த்திப் பின் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரண்டு வேளை ஒன்று முதல் இரண்டு கிராம் அளவுக்கு தேனை அனுபானமாகக் கொண்டு உள்ளுக்கு கொடுத்து வர பேதியை நிறுத்தும். புதிதாக சேகரித்த மாம்பூக்களை இடித்து சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சாற்றுடன் தயிர் கலந்து உள்ளுக்குக் குடிக்க வயிற்றுப் போக்கு வற்றும்.

* மாங்கொட்டைப் பருப்பு பெண்களின் இனஉறுப்புக் கோளாறுகள் பலவற்றிற்கு மருந்தாகிறது. மாம்பருப்பு புதியதாக நன்கு ஈரப்பசையுடைதாக எடுத்து மைய அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து இரவு படுக்க போகும் முன் பெண் உறுப்புக்குள்ளாகத் திணித்து வைக்க வெள்ளைப் போக்கு பெண்ணுறுப்பினுள் ஏற்பட்ட வீக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவசத்தால் ஏற்பட்ட யோனி அழற்சி ஆகியன குணமாகும்.

உடலுறவுக்கு முன் அரை மணி நேரத்துக்கு முன்பாக மாங்கொட்டைப் பருப்பை பசையாக அரைத்து உட்சாறாகப் பயன்படுத்த கருத்தடை சாதனமாக அமையும். பச்சை மாம்பட்டையை இடித்து பத்து முதல் இருபது மி.லி வரை உள்ளுக்கு கொடுக்க மாதவிலக்கு காலத்தில் ஏற்படும் அதி ரத்தப் போக்கு குணமாகும். மேலும் வெள்ளைப் போக்கு, மற்றும் சீழ் வெளியாதல், கருப்பை அழற்சி ஆகியன குணமாகும்.

* 10 மி.லி மாம்பட்டை சாற்றோடு 120 மி..லி நீர் சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதாலும் வெள்ளைப்போக்கு, உதிரப்போக்கு பேதி ஆகியன குணமாகும்.

* உலர்ந்த மாம்பருப்பு தூளால் பல் துலக்கி வர ஈறுகள் பலப்படும். பல் உறுதி பெறும். பயோரியா போன்ற நோய்கள் பறந்து போகும்.

Loading...

728

2