new BB1

மிட்நைட் பிரியாணி சாப்பிடலாமா?

Loading...

ht3548இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். காரணம் கேட்காமல் அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? ஏன் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் டயட்டீஷியன் வீணா சேகர்.

இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி இருக்கும். விளக்கொளி இல்லாத காலகட்டத்தில் இருட்டில் தெரியாமல் சமைத்துவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

இப்போது பலரும் பகலில் வேலைக்குப் போவதால் கீரை போன்ற உணவுகளை சாப்பிட முடியாதவர்கள், இரவுதான் சாப்பிட வேண்டி இருக்கும். இல்லையென்றால் அதிலுள்ள சத்து கிடைக்காமலே போய்விடும். அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னை ஏற்படவில்லை என்றால், தாராளமாக கீரை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டி இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அப்படித் தவிர்க்க வேண்டியவை…

4டீ, காபிபொதுவாக டீ, காபி போன்ற உற்சாக பானங்களை (Stimulant drinks) சாப்பிடுவது தூக்கத்தைக் குறைக்கும். காபியில் இருக்கும் கஃபைன் (Caffeine), டீயில் இருக்கும் த்யோப்ரமைன் (Theobromine) ஆகியவை மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். அதனால்தான் பரீட்சை நேரங்களிலும், இரவில் வேலை செய்யும் போதும் 75 சதவிகித மக்கள் டீ, காபி குடிப்பார்கள். காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்காகத்தான் தூங்கி எழுந்தவுடன் காபி, டீ குடிக்கிறோம்.

அசைவ உணவுகள் பொதுவாக பார்ட்டி என்கிற பெயரில் இரவு நேரத்தில் உணவகத்துக்குச் செல்பவர்கள் அதிகம். அங்கு அதிகபட்சம் அவைச உணவுகளே இடம் பெறும். பார்ட்டி என்பதால் பேசிக்கொண்டு, குஷியாக சாப்பிடுவதால் கட்டாயம் எப்போதையும் விட ஒரு பிடி அதிகப்படியாகவே சாப்பிடுவோம். அசைவ உணவு என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் அதிகம் சாப்பிடத் தோன்றும். அதைத் தொடர்கதை ஆக்காமல் இருப்பதே நல்லது. அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும்.

அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது. காரம் மற்றும் எண்ணெய் சாப்பிட்டவுடன் நாம் மல்லாந்த நிலையில் படுப்போம். அதனால் காரம் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும் போது ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஏற்படும். ‘எதிர்த்துக்கிட்டு வருது’, ‘எதுக்களிப்பு’ என்று சொல்வோமே… அந்தப் பிரச்னைதான் இது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம்.

இனிப்புகள் மற்றும் சாக்லெட்

இனிப்பு மற்றும் சாக்லெட் வகைகள் பொதுவாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை. எனர்ஜி அளிக்கக்கூடியவை. திருமண ரிசப்ஷன் போன்ற இரவு நேர விழாக்களில் ஐஸ்க்ரீம், டெசர்ட்ஸ் போன்றவை அவசியம் இடம்பெறும். ஆசையில் அதிகமாகச் சாப்பிடாமல் அளவோடு எடுத்துக்கொண்டால் தூக்கத்துக்குப் பாதிப்பிருக்காது. இனிப்பு வகைகளில் சர்க்கரை அதிகமிருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். கொஞ்சமாக சாக்லெட் சாப்பிடுவது தவறல்ல. அதைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கப் போகும் போது பற்களில் சொத்தை ஏற்படும். இஷ்டப்படி சாப்பிட்டுவிட்டு, ஜீரணமாக வேண்டும் என்று சிலர் சோடா குடிப்பார்கள். ஆனால், அதில் இருக்கும் சர்க்கரை உங்கள் இனிய கனவுகளை கட்டாயம் கலைக்கும்!

நீர்ச்சத்துள்ள உணவுகள் பார்லி

உடலில் இருக்கும் தேவையற்ற நீரை எடுக்கும். இரவில் அதைச் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவுக்காரர்களுக்கு இன்னும் கஷ்டம். பூசணி, புடலை, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கோஸ், செலரி போன்ற காய்கறிகள் சாப்பிட்டாலும் இதே பிரச்னைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும்.

கரையா நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்தில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என்று உண்டு. கரையா நார்ச்சத்து அதாவது, கொஞ்சம் கடினமான நார்ச்சத்துள்ள உணவுகளான சில கீரைகள், பாகற்காய் போன்ற உணவுகள் ஜீரணிக்க நேரம் எடுக்கும். அதனால் அவற்றை இரவு நேரங்களில்
தவிர்க்கலாம். அல்லது கொஞ்சம் முன்னதாக சாப்பிடலாம்.

புளித்த உணவுப்பொருட்கள்

இட்லி, ஆவியில் வேக வைத்த சிறந்த உணவாக இருந்தாலும், புளிக்க வைத்த மாவில் செய்வதால், சிலருக்கு புளித்த ஏப்பம் ஏற்படும். அதனால்தான் இட்லி, தோசை ஆகியவற்றை காலை உணவாகவே நம் பாரம்பரியத்தில் பழக்கி உள்ளனர். இதனாலும் இனிய உறக்கம் தடைபடக்கூடும் என்பதால், இரவில் தவிர்க்கலாம். மற்றபடி ஆவியில் வேக வைத்த உணவுகள் ஓ.கே. குழந்தைகள் இரவில் இட்லி, தோசை சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.

ஜங் ஃபுட்

பொதுவாகவே ஜங் ஃபுட் உணவுகளை இரவில் குறைத்துக்கொள்வது நல்லது. அல்சர் உள்ளவர்கள் அசிடிட்டி நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.

இவையெல்லாம் பொதுவான விஷயங்கள். இதைத் தாண்டி ஒவ்வொருவரின் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிக அளவு சாப்பிட்டு உடனடியாக உறங்க செல்வது பருமனைக் கூட்டும். அதற்காகத்தான், அந்தக் காலத்தில், ‘பகலில் ராஜாவைப் போல (விருந்து) உண், இரவில் பிச்சைக்காரனைப் போல (கொஞ்சமாக) உண்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இரவில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட நம் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது ரொம்ப முக்கியம். அன்றைய நாளில் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், மினரல்கள் எடுத்துக்கொண்டோமா என்று பார்ப்பது நல்லது.

தூக்கமின்மை மற்றும் அஜீரண பிரச்னை உள்ளவர்கள் ஒரு மாத உணவு டைரி ஒன்றை ஏற்படுத்தி தினமும் 6 மணிக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதை குறித்து வரவேண்டும். எந்த உணவு சாப்பிடும் போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது? உணவு சாப்பிடும் முன்னர் எப்படி இருந்தது? சாப்பிட்ட பின்னர் எப்படி இருந்தது? இந்தத் தகவல்களையும் குறித்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்து கொண்டு இரவில் தவிர்த்து விடலாம்.மொத்தத்தில்… மிட் நைட் பிரியாணிக்கு ‘நோ’ சொல்வதே நோய்களிலிருந்து தப்ப வழி!

Loading...

728

2