new BB1

முதலில் இலவசம்; பின்னர் கட்டணம்: இண்டர்நெட்டுக்கு செக்!

Loading...

முதலில் இலவசம் பின்னர் கட்டணம் இண்டர்நெட்டுக்கு செக்!இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான செய்திகள் பல வந்து கொண்டே இருக்கும் நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று internet.org புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலவச இணைய பயன்பாட்டில் இதுவரை internet.org உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற நிலையிருந்தது. இப்போது அதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, இணையதளங்களை இயக்கி வரும் எந்த நிறுவனமும் இந்த சேவையில் பங்கு பெறலாம் என்று கூறியுள்ளது. இதன் மூலம் இணைய சமநிலையை பின்பற்றுவதோடு, இணைய வசதியை பெற முடியாத மக்களுக்கும் இலவசமாக இணைய உலகை அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கை வெளியிட்டார் மார்க் ஜுக்கர்பர்க். ஆனால், இந்த சேவையில் வளைதளங்கள் பங்குபெற 3 விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.
1. கட்டண பயன்பாட்டாளர்களை உருவாக்க வேண்டும்:
இண்டர்நெட் என்றால் என்ன என்று கூட தெரியாத மக்களுக்கு இலவச இண்டர்நெட் வசதியை தர வேண்டும். பின்பு அவர்களை கட்டணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்துபவர்களாக மாற்ற வேண்டும் என்று தங்கள் குறிக்கோளை இணையதள நிறுவனங்களுக்கு விதிமுறையாகவே கூறியிருக்கிறது. Internet.org மூலம் புதிதாக இண்டர்நெட்டை பயன்படுத்துபவர்களுக்கு, Internet.org மற்றும் அதில் உள்ள சில தளங்கள் மட்டுமே தெரியும். மேலும் குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலமாக மட்டும் இந்த சேவைய பெற முடியும். தற்போது இந்தியாவில் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்தின் பயன்பாட்டாளராக இருந்தால் மட்டுமே இந்த சேவையை பெற முடியும்.
இலவச இணையம் என்றதுமே மக்கள் ரிலையன்ஸின் வாடிக்கையாளர்களாக மாறுவர். சிறிது நாட்களுக்குப் பிறகு நீங்கள் கட்டணம் செலுத்தி இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்ற நிலை உருவாகும். ஆக முதலில் கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, பின்னால் கட்டணமாக்குவதே இவர்களது தொலை நோக்கு சிந்தனை.
2. இணயதளங்கள் இதில் உறுப்பினர்களாக வேண்டும் என்றால், அந்த இணையதளங்கள் அளிக்கும் சில சேவைகளை நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன்படி, வீடியோ, ஃபைல் டிரான்ஸ்ஃபர், அதிக ரெசியூல்ஷன் படங்கள், இணையதள வாய்ஸ் சேவைகள் போன்றவற்றை மக்கள் பயன்படுத்த முடியாது.
3. மேலும், ஒர் இணையதளத்தை கவர்ச்சிகரமாக வடிவமைக்க உதவும் சில மென்பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதித்துள்ளது. இலவசம் என்பதால் குறைந்த அளவு வேகத்தில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவை வழங்க முடியும் என்பதால் இந்த கட்டுபாடுகளை விதித்திருப்பதாக கூறியுள்ளது internet.org
ஒரே இணையதளத்தில் பல சேவைகளை நொடியில் பயன்படுத்தும் அளவுக்கு இண்டர்நெட் வளர்ச்சியடைந்துவிட்ட இந்த அதிவேக காலகட்டத்தில் internet.org-ன் நிபந்தனைகள் இண்டர்நெட் யுகத்தின் தொடக்கத்துக்கு பின் நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. Internet.org-ஐ இலவசமாக பயன்படுத்துபவர்களுக்கு ஒரு வசதி, கட்டணம் செலுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு ஒரு வசதி என்ற இந்த திட்டம் முற்றிலும் நெட் நியூட்ராலிட்டுக்கு எதிரானதாக இருக்கின்றது.
நெட் நியூட்ராலிட்டுக்கு முக்கிய அம்சமே அனைவருக்கும் சமமான கட்டணத்தில், சமமான வேகத்தில் இண்டர்நெட் சேவைதான். ஆனால், internet.org அளிக்கும் சேவையில் குறைந்த வேகத்தில் இலவச இண்டர்நெட் என்பது மீண்டும் நெட் நியூட்ராலிட்டிக்கு எதிரான ஒன்றே. மார்க் ஜூக்கர்பெர்க்கின் இந்த அறிக்கை மீண்டும் சர்ச்சையை அதிகரித்துள்ளது.
ட்ராயின் முடிவுகள் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அப்போதுதான் இந்த பிரச்னைக்கு முடிவு தெரியும் என்ற நிலை உள்ளதால், ட்ராயின் பதில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்கள் இன்னும் நெட் நியூட்ராலிட்டி வேண்டும் என்ற கருத்தையே பதிவு செய்து வருகின்றனர்.

Loading...

728

2